சிறந்த படம் என எல்லோராலும் பாரட்டப்பட்ட ‘வாயை மூடி பேசவும்’ மற்றும் சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘வட கறி ‘ஆகிய படங்களை வழங்கிய வருண் மணியனின் Radiance media நிறுவனம் தரமான படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் அடுத்த படம் தற்போது முடிவாகி உள்ளது. ‘உதயம் NH4’ படத்தை இயக்கிய இயக்குனர் மணிமாறன் கதை, திரைக்கதை அமைத்து இயக்க… சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் Film Department என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் துவங்குகிறது.
இதில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரும், ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இயக்குனருமான வேல்ராஜ் இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இந்த படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர் தயாரிப்பாளர்கள் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிக, நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.