தற்போதைக்கு எந்தத் திரைப்படத்திற்கு எந்தக் கோணத்தில் எதிர்ப்புகள் வரும் என்றே தெரியவில்லை. திரைக்கதைக்காகவும், படத்தின் விளம்பரத்திற்காகவும் செய்யப்படும் சிலவைகள் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சம்பாதிக்கின்றன. அதில் லேட்டஸ்ட் ‘ஜகா’ திரைப்படம்.
இந்தப் படத்தில் மைம் கோபி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், வலினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு வி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் இசையமைக்க இயக்குநர் ஆர்.விஜயமுருகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை 11-ம் தேதி வெளியானது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தற்போதைய தமிழகத்தின் நிலைமையை சிம்பாலிக்காக காட்டுவதுபோல சிவபெருமானுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு முகக் கவசம் போட்டிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்தான் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
இந்து மதக் கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் இழிவு செய்வது போன்று போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ஆர்.விஜயமுருகன் இன்றைக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஓம் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ‘ஜகா’. ஜூலை 11-ம் தேதி எங்களது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அது பலரின் விவாதத்துக்கு உள்ளானது. அது குறித்துத் தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை.
எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ‘ஓம் டாக்கீஸ்’. பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பையே தொடங்கினோம். அப்படியிருக்கும்போது சிவபெருமானை நாங்கள் அவமதிப்போமா..?
கோவிட்-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக் கூடாது எனக் கடவுளே சொல்கிறார் என்பது போன்றுதான் அந்த போஸ்டர்.
சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட, கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை. அது போன்ற எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் தேடும் விருப்பம் எங்கள் குழுவினருக்குத் துளியும் இல்லை.
இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதைப் புண்படுத்தியது அறிந்து வருந்துகிறேன். அதற்கான மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்…” என தெரிவித்துள்ளார்.