full screen background image

‘ஜாக்பாட்’ – சினிமா விமர்சனம்..!

‘ஜாக்பாட்’ – சினிமா விமர்சனம்..!

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இதற்கு முன்பாக நடிகை ஜோதிகாவின் நடிப்பில் தயாரித்த ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இப்போது அதே 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யாதான், இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

படத்தில் ஜோதிகா, நடிகை ரேவதி, நடிகர்கள் சமுத்திரக்கனி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன், அந்தோணிதாசன், தேவதர்ஷிணி, மைம் கோபி, தங்கத்துரை, கிங்க்ஸ்லி, இமான் அண்ணாச்சி, ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – விஜய் வேலு குட்டி, கலை இயக்குநர் – வீரசமர், சண்டை பயிற்சி – திலிப் சுப்புராயன் & ராக் பிரபு, நடன இயக்குநர் – பிருந்தா, மக்கள் தொடர்பு – B.யுவராஜ், எழுத்து & இயக்கம் – S.கல்யாண், இணை தயாரிப்பு -ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு நிறுவனம் – 2D என்டர்டைன்மென்ட், தயாரிப்பாளர் – நடிகர் சூர்யா, விநியோகஸ்தர் – சக்தி பிலிம் பேக்டரி.

இத்திரைப்படம் 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 11-வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிவராவார்.

இந்தப் படத்தை ‘சக்தி பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

படத்தின் கதை 1918 மற்றும் 1995 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பயணிக்கிறது.

1918-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒரு மலையடிவார கிராமத்தில் பால்காரராக இருக்கும் அந்தோணி தாசன் தன் வீட்டருகே ஒரு குழியைத் தோண்டும்போது ஒரு ‘அட்சயப் பாத்திரம்’ கிடைக்கிறது. அதில் பால் கறந்தால் பால் தீராமல் வந்து கொண்டேயிருக்கிறது. இதை யாரிடமும் சொல்லாமல் இந்த அட்சயப் பாத்திரத்தை வைத்தே பால் விற்று, பணம் சம்பாதித்து.. மச்சு வீடு கட்டி பெரிய ஜமீன்தாராகிவிடுகிறார் அந்தோணி தாசன்.

ஒரு நாள் பெரிய வீடாக இருக்கிறதே.. நிறைய நகைகள், பணம் இருக்குமே என்றெண்ணி இவர் வீ்ட்டிற்குள் இரண்டு திருடர்கள் நுழைகிறார்கள். ஆனால் இருப்பது அட்சயப் பாத்திரம் மட்டுமே. சரி.. இதாவது கிடைத்ததே என்றெண்ணி அதை எடுத்துக் கொண்டு போகும்போது காவல்காரர்கள் பார்த்துவிட்டு திருடர்களைத் துரத்த.. வழியில் குறுக்கிடும் ஒரு ஆற்றில் அந்த அட்சயப் பாத்திரத்தைப் போட்டுவிடுகிறார்கள் திருடர்கள். அது ஆற்றில் அடிக்கப்பட்டு செல்கிறது.

அதே அட்சயப் பாத்திரம் 2019-ல் இட்லி சுட்டு விற்கும் சச்சுவின் கைகளில் கிடைக்கிறது. சச்சு அதை வைத்து இட்லியை சுடாமலேயே இட்லியை அள்ளி அள்ளி விற்று பணம் சம்பாதிக்கிறார். ஒரு நாள் கொஞ்சம் குறுக்குப் புத்தியுடன் 100 ரூபாய் நோட்டை அட்சயப் பாத்திரத்தில் போட.. அது 100 ரூபாய் நோட்டுக்களாக வந்து குவிகிறது.

அதையெடுத்துக் கொண்டு வங்கியில் டெபாஸிட் செய்யச் சென்றவரை அந்த 100 ரூபாய் நோட்டுக்களின் எண்கள் அனைத்தும் ஒன்று போலவே இருப்பதால் சந்தேகப்பட்டு வங்கிக்காரர்கள் போலீஸுக்குத் தகவல் சொல்ல… போலீஸ் ஓடி வந்து ரூபாய் நோட்டின் ஜெராக்ஸ் காப்பியை தயாரித்ததாகச் சொல்லி சச்சுவை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறது.

இதே நேரம் ரேவதி சின்ன வயதில் இருந்தே தன்னுடைய அண்ணன் மகளான ஜோதிகாவுடன் சேர்ந்து கொண்டு கொஞ்சம் வித்தியாசமான முறையில் திருடியும் கொள்ளையடித்து வருகிறார். பைக், கார் என்று பலவற்றையும் மொட்டை ராஜேந்திரனிடம் கொடுத்து காசாக்கிக் கொள்கிறார்கள் அத்தையும், மருமகளும். இதில் மொட்டைக்கு ரேவதி மீது ஒரு கண்.

இந்த நிலையில் ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்கப் போய் அங்கே தங்களை தட்டிக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை அவர் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமலேயே தலையில் குட்டிவிட்ட  காரணத்தாலேயே ஜோதிகாவும், ரேவதியும் கைதாகி சிறைக்கு வருகிறார்கள்.

சிறையில் சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சுவின் சோகக் கதையை அவர்கள் கேட்க.. சச்சுவும் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு அந்த அட்சயப் பாத்திரத்தை ராயப்பேட்டை ரைஸ் மில் நடத்தும் ‘மானஸ்தன்’ என்னும் ஆனந்த்ராஜின் வீட்டுக் கொல்லையில் மாட்டின் அருகிலேயே புதைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

இதையடுத்து சச்சுவுக்குத் தெரியாமலேயே அந்த அட்சயப் பாத்திரத்தை களவாட நினைக்கிறார்கள் ஜோதிகாவும், ரேவதியும்.. இது நடந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘ஜாக்பாட்’ படத்தின் திரைக்கதை.

இதிலேயே தனி டிராக்காக வேறொரு கதையும் உண்டு. அதில் நாயகன் யோகி பாபு தனித்து இருக்கிறார். சின்ன வயதில் ஒரு செடியை மூன்று நாட்கள் நடு வீட்டில் பேன் காற்று படும்படி வைத்திருந்தால் 100 ரூபாய் நோட்டு முளைக்கும் என்று யாரோ ஒருவன் நம்புவதைப் போல பொய் சொல்ல. அதை நம்பி தேவதர்ஷிணி-மை கோகி தம்பதிகளின் மகனான சின்ன வயது யோகி பாபு அந்தச் செடியை நடுவீட்டில் வைத்து அலப்பறை செய்கிறான்.

மகனின் ஆர்வம் குலையக் கூடாது என்பதற்கான அப்பாவான மைம் கோபி மூன்றாம் நாள் இரவின் நடு இரவில் 100 ரூபாயை அந்தச் செடியில் வைத்துவிட பையன் சந்தோஷமாகிறான்.

இந்தப் பையன் பெரியவனாகி வாலிப வயதில் ஒரு பெண்ணைக் காதலித்து வருகிறான். இவரது நண்பன் ஜெகன். தனது பிறந்த நாளுக்காக கேக்கையெல்லாம் வாங்கி வைத்திருந்த நிலையில் ஒரு பிரச்சினையாகி ஜெகனும், அவனது காதலியும் கோபித்துக் கொண்டு செல்கிறார்கள்.

அந்த நேரம் வீட்டுக்கு வரும் இவனது காதலி இவனுக்காக டீ ஷர்ட், பேண்ட்டை வாங்கி வைத்துவிட்டுச் செல்கிறாள். அப்போது இவனது வீட்டுக்கு வரும் குடுகுடுப்பைக்காரனுக்கும், பையனுக்கும் இடையில் வார்த்தை சண்டைகள் நடக்க.. ஜக்கம்மாவை பையன் அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி ‘என்னைத் தேடி நாயாய் அலையப் போற..’ என்று அவனுக்கு ஒரு சாபம் விட்டுவிட்டுச் செல்கிறான் குடுகுடுப்பைக்காரன்.

அந்த சாபம் அடுத்த 2 நிமிடங்களிலேயே பலிக்கிறது. தன்னுடைய காதலி வாங்கிக் கொடுத்த டீ சர்ட்டை போடும் அந்தத் தருணத்திலேயே அவனது அந்த அழகான முகம் யோகி பாபுவின் முகமாக மாறிவிடுகிறது.

மறுநாள் காலை வீட்டுக்கு வரும் அம்மா தேவதர்ஷிணியும், அப்பா மைம் கோபியும் யோகி பாபுவை தங்களது மகன் அல்ல என்று சொல்லி அவரை வீட்டைவிட்டு துரத்துகிறார்கள்.

தெருவில் அலையும் யோகி பாபுவை வைத்தும் அந்த அட்சயப் பாத்திரத்தை எடுக்க முயல்கிறார்கள் ரேவதியும், ஜோதிகாவும். அதுவும் முடியாமல் போக.. யோகி பாபு தனித்துவிடப்படுகிறார். அவர் கடைசியில் என்னவாகிறார் என்பது தனிக் கதையாக வருகிறது.

இதுவரையிலும் பெண்கள் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கும் ஜோதிகாவுக்கு ஹீரோயிஸ வேடம் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. ஒரு ரவுடி, ஒரு திருடன், ஒரு கொள்ளைக்காரன்.. என்னவெல்லாம் செய்வானோ அதையெல்லாம் ஒரு பெண்ணாக இதில் செய்திருக்கிறார்.

ஆட்டமென்ன.. பாட்டமென்ன.. பேசும் வசனமென்ன.. காட்டும் முக பாவனைகள் என்ன.. காட்டும் ஸ்டைல் என்ன.. என்று அனைத்து பிரேம்களிலும் ஜோ-வின் சாம்ராஜ்யம்தான்.

அடிக்கடி குறை கண்ணில் பார்த்தபடியே ஸ்டைலாக உதட்டைக் குவித்து வைத்துக் கொண்டு ஸ்பெஷல் மேனரிசத்தில் பேசும் ஜோதிகாவை யாருக்குத்தான் பிடிக்காது.. ?

இதில் மூன்று சண்டை காட்சிகளையும் வைத்து அதிலும் விஜயகாந்த் ஸ்டைலில் பறந்து, பறந்து அடிக்கிறார் ஜோதிகா. ஆனந்த்ராஜ் அண்ட் கோ-விடம் மாட்டிக் கொண்டு தப்பிப்பதற்காக ஒரு நிமிடத்தில் கதையை கிரியேட் செய்து அதை நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிக் கொண்டே செல்லும் லாவகத்தை தனது நடிப்பினால் நிரப்பியிருக்கிறார்கள் ஜோதிகாவும், ரேவதியும்.

ரேவதியின் மூப்பு முகத்தில் தெரிந்தாலும் நடனக் காட்சிகளில் அதே துள்ளல் தெரிகிறது. நடிப்பென்று தனித்துச் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லையென்றாலும் சிற்சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைத்திருக்கிறார் ரேவதி.

யோகி பாபுவுக்கு கூடுதலாக சிரிக்க வைக்கும் பொறுப்பைக் கொடுத்தாலும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் இதற்குப் பொருத்தமானதாக இல்லை. வழக்கம்போல அவருடைய உடல் அமைப்பையும், முக அழகையும் கிண்டல் செய்தே பாதி வசனங்களை அவரே பேசியிருக்கிறார். இதில் எங்கே சிரிப்பு வருகிறது..?

ஆனால் அத்தனை சிரிப்பையும் ஆனந்த்ராஜே தட்டிச் சென்றுள்ளார். அவர் சாதாரணமாக பேசினாலே நம் உதடு பிரியும் அளவுக்கு மெல்லிய நகைச்சுவை தெறிக்கிறது.

நெமிலியில் இருக்கும் புத்தூர் கோவிலுக்கு வரும் வழியில் போர்டில் இருக்கும் தீந்தமிழைப் படித்தபடியே ஒவ்வொன்றுக்கும் அவர் கொடுக்கும் விளக்கம்தான் தொடர் சிரிப்பலைக்கு உத்தரவாதம் தருகிறது.

இதேபோல் இவருடைய அக்காவாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மானஸ்தியாக இவரே நடித்திருக்கும் அழகு சிறப்பு. மொட்டை ராஜேந்திரனை அரை நிர்வாணத்தில் பார்த்தவுடன் இவருக்கு வரும் வெட்கமும், புரியாமல் அதற்கு பதில் சொல்லும் மொட்டை ராஜேந்திரனையும் நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது.

மொட்டை ராஜேந்திரன் வெரி லக்கி பெர்ஸன். கமல், ரஜினியெல்லாம் காதலித்த ரேவதியை இந்தப் படம் முழுவதும் சீரியஸாக காதலித்தபடியே ஓடிக் கொண்டிருக்கிறார்.

சமுத்திரக்கனியின் கதை இந்தப் படத்தில் எதற்காக என்பதை இயக்குநர்தான் தெளிவாக்க வேண்டும். தேவையற்ற பீஸாக யோகிபாபுவுக்காகவே திணிக்கப்பட்டதுபோல தெரிகிறது.

‘குலேபகாவலி’யில் வைரப் புதையலைத் தேடியலையும் திருடர்களின் கதையைச் சொல்லியிருந்தார் இயக்குநர் கல்யாண். இந்தப் படத்தில் ‘அட்சயப் பாத்திரம்’. முந்தையதில் இருந்த பிரபுதேவா இதில் இல்லை. அவருக்குப் பதில் ஜோதிகா. துணைக்கு ரேவதி.. இப்படி அதே ராஜாபாட்டையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.

முதல் பாதியில் இருந்த கலகலப்பு.. இரண்டாம் பாதியில் நிறையவே மிஸ்ஸிங் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனந்த்ராஜ் அண்ட் கோ-வை அம்மணமாக அமர வைத்துவிட்டு ஜோ-வும், ரேவதியும் தப்பிப்பதும்.. அந்த போட்டோவை வைத்து அவரை பிளாக் மெயில் செய்வதும் செம கலகலப்பு.

ஆனால் இரண்டாம் பாதியில் அந்தக் கலகலப்பு காணாமலேயே போய்விட்டது. யோகி பாபு தன்னால் முடிந்த அளவுக்கு சமாளித்திருக்கிறார். அவராலும் ஒரு கட்டத்தில் முடியாமல் போய் மறுபடியும் பெண் ஆனந்த்ராஜ் வந்துதான் அந்தச் சிரிப்பை கொண்டு வர முடிந்திருக்கிறது. மன்சூரலிகானின் அப்பாவித்தனமான வில்லத்தனம் அந்த இடத்தில் மட்டுமே நகைச்சுவையைத் தந்திருக்கிறது.

பாடல்களே கேட்காத வகையில் செம ஸ்பீட் மியூஸிக்கை தட்டிவிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். கமர்ஷியல் படத்திற்கு இது போன்ற பாடல்கள் தேவைதான். ஆனால் இந்த அளவுக்கா என்று கேட்கவும் தோன்றுகிறது.

இதேபோல் ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரமுக்கு போட்ட அதே பின்னணி இசையை இதில் ஜோதிகாவுக்காக அமைத்து நம்ம காதைக் கிழித்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒலி கலவையாளர் என்ன ஐடியாவில் இதைச் செய்தார் என்று தெரியவில்லை.

பட்ஜெட் பற்றிக் கவலைப்படாத தயாரிப்பாளர் என்பதால் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் படம் முழுவதையும் கலர்புல்லாகக் காட்டியிருக்கிறார். இரண்டு பாடல் காட்சிகளிலும் கணக்கில்லாத துணை நடிகர், நடிகைகள், நடன நங்கையர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். அனைவரின் உடை வடிவமைப்பும் கண் கொள்ளாக் காட்சி. அசத்தல் என்றே சொல்ல வேண்டும்.

நடுவில் தனித்திருந்த மனோபாலவின் கதையை கடைசி டிவிஸ்ட்டாக காட்டுவது வீணாகிவிட்டது. எல்லோரும் தியேட்டரில் இருந்து எழுந்து போய்க் கொண்டிருக்கும்போது கதையின் மர்ம முடிச்சை மெல்ல அவிழ்த்துக் காட்டினால் எப்படி..? முன்பேயே இதைச் செய்திருக்க வேண்டாமா இயக்குநரே..?

திருடுகிறார்கள்.. கொள்ளையடிக்கிறார்கள். அந்தத் திருடலையும், கொள்ளைக்காரத்தனத்தையும் நியாயப்படுத்தும்விதமாய் பள்ளிக் கல்விக் கட்டணம் உயர்வு, பீஸ் கட்ட முடியலை.. என்றும், வேலைக்குப் போகும் இடங்களிலெல்லாம் கையைப் பிடித்திழுத்தார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் சப்பைக் கட்டுதான். பிழைப்புக்கு வேறு வழியா இல்லை..?

காமெடி படங்களில் லாஜிக்கே பார்க்கக் கூடாது என்பார்கள் அல்லவா..? அப்படி நினைத்துக் கொண்டே போய்விட வேண்டியதுதான்.

இந்த ‘ஜாக்பாட்’டை உட்கார்ந்து பார்த்துவிட்டு வரலாம்..!

Our Score