விமல்-ஆஷ்னா சாவேரி நடிக்கும் அடல்ட் ஒன்லி திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

விமல்-ஆஷ்னா சாவேரி நடிக்கும் அடல்ட் ஒன்லி திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்துள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.’

இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார்.                                                                  

மேலும், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி,  மன்சூரலிகான்,  லோகேஷ்,  வெற்றி வேல்ராஜ்,  ஆத்மா ஆகியோருடன்   போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகை பூர்ணாவும் நடித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகையான மியா ராய் என்பவர், ‘கன் பைட் காஞ்சனா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், இசை – நடராஜன் சங்கரன், பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வைரபாலன், நடன இயக்கம் – கந்தாஸ், சண்டை இயக்கம் – ரமேஷ்., படத் தொகுப்பு – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.முகேஷ்.

‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ வரிசையில் அடுத்து தமிழ்ச் சினிமாவில் வலம் வரவிருக்கும் அடல்ட் ஒன்லி ‘ஏ’ திரைப்படம் ‘இந்த இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’.

தெலுங்கு திரைப்படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

முதலில் படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது. அதில் இருந்த காட்சிகளும், பேசிய வசனங்களும் கண்டிப்பாக இந்தப் படம் ‘வயது வந்தோருக்கானது’ என்பதை மட்டுமே உணர்த்தியது. பல வசனங்கள் இரட்டை அர்த்தத்திலேயே இருந்தது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

ivanukku engayo macham irukku movie stills

முத்தாய்ப்பாக நடிகர் ஆனந்த்ராஜே படத்தில் ஒரு வசனம் பேசுகிறார். “மொத்தத்துல இந்தப் படத்துல எந்தப் பொம்பளையும், பொம்பளையா இல்லை..” என்கிறார் ஆனந்த்ராஜ். இதுவே இந்தப் படத்தின் தன்மைக்கு சாட்சி.

நடிகர் விமலுக்கு நிச்சயமாக இதுவொரு வித்தியாசமான வேடம்தான். அவர் இதுவரையிலும் இதுபோன்று பிளேபாய் கேரக்டரில் நடித்ததில்லை. இந்தப் படத்தில்தான் முதல்முறையாக நடித்திருக்கிறார் போலும்.

படுக்கையறை காட்சிகளும், ரொமான்ஸ் என்கிற பெயரில் நாயகியை கசக்கிப் பிழியும் காட்சிகளும் டிரெயிலரிலேயே அதிகம் இருந்தது. அதிலும் ஒரு பாடல் காட்சியில் நாயகி ஆஷ்னா சாவேரி காட்டியிருக்கும் தாராளம் அவரும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

ivanukku engayo macham irukku movie stills

படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.மகேஷ் பேசும்போது,. “இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவைதான். இதற்குள்தான் எல்லா படங்களுமே அடங்கும். கிளாமரையும், நகைச்சுவையையும் சரி விகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம்.

அதில் ஒரு வகை கிளாமர் கலந்த ஹுயூமர். அதைத்தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும், சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது…” என்றார்.

எப்போதும் மேடைகளில் தமிழ், தமிழ்க் கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு பற்றி வகுப்பெடுக்கும் தயாரிப்பாளர் கே.ராஜனும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அவர் பேசும்போது “படத்தில் கவர்ச்சி இருக்கிறது. விரசம் இல்லை…” என்றார். கவர்ச்சிக்கும், விரசத்திற்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது சொன்னால் தேவலை..!

எப்போதும் அரை மணி நேரமாவது பேசி முடிக்கும் நடிகர் ஆனந்த்ராஜ் இந்த மேடையில் 40 நொடிகளில் தனது பேச்சை முடித்துக் கொண்டது ஆச்சரியம்தான். ஆனால் இவர் பேச விட்டதையெல்லாம் சேர்த்து வைத்து பேசி முடித்தார் நடிகர் சிங்கம்புலி.

நடிகர் மன்சூரலிகான் தற்போதைய புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகக் கதையையும், தான் அந்தப் பகுதிக்குச் சென்று உதவிகள் செய்து வந்ததையும் சொல்லி மாநில அரசு இன்னும் வேகமெடுத்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

IMG_7046

படத்தின் நாயகன் விமல் தன்னுடைய சினிமா கேரியரில் இந்த மேடையில்தான் அதிக நேரம் பேசினார். அதாவது 3 நிமிடங்கள். “இந்தப் படம் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக்..” என்று சொல்லி முதலிலேயே தப்பித்துக் கொண்டார். “எனக்கும் இப்படி படங்களில் நடிப்பது இதுதான் முதல் முறை. தெலுங்கு படத்தின் ஒரு பாடல் காட்சியை மட்டும் எனக்கு போட்டுக் காட்டி ‘இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார்கள். எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. ‘இந்தக் கேரக்டர் எனக்கு செட்டாகுமா’ன்னு யோசித்தேன். இயக்குநர்தான் ‘உங்களால் முடியும் ஸார்’ என்று சொல்லி நடிக்க வைத்துவிட்டார்.

இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு எனது நன்றி. படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் படத்துக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தார்கள். படம் நிச்சயமாக அனைவரையும் கவரும் அளவுக்குத்தான் இருக்கும். நகைச்சுவை அதிகமாக இருப்பதால் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்று சொல்லி முடித்தார்.

இந்த அடல்ட் ஒன்லி படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ஒரு பெண் என்பதுதான் மிகப் பெரிய நகை முரண்..!

Our Score