பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் “கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு கோடி ரூபாய் பணத்தை கமிஷனாக வாங்கிக் கொண்டு கடன் வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டார்…” என்று வீணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே.சுரேஷ் இன்று காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
தன் தரப்பு ஆவணங்களையும், ஆதாரங்களையும் ஆணையாளர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், ஊடகங்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க, முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்…” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, “நான் இந்தச் சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராகப் பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும்.
நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால் நான் வாழ்ந்த வீட்டை விற்றேன். நான் விற்றேன். இன்னொருவர் வாங்கினார். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம்.
நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்..? விற்கப் போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்..? அதிலே நான் ஏன் மோசடி செய்ய வேண்டும்..? இது முழுக்க, முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார்.
என் மீதான இந்த பொய்ப் புகார் வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எனது விளக்கத்தையும் என் தரப்பு ஆவணங்களையும், ஆதாரங்களையும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்தப் பொய்யான புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்…” என்று கூறினார்.