1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசின் நிஷாகந்தி விருது நேற்று மாலை வழங்கப்பட்டது. கேரள முதல்வர் உம்மன்சாண்டி இந்த விருதினை இளையராஜாவுக்கு வழங்கினார்.
கேரள சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும், திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு கலைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கேரள அரசு சார்பில் நிஷாகந்தி விருது வருடா வருடம் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சாதனையாளர் விருது நமது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான நிசாகந்தி விழா திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் உம்மன் சாண்டி குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி சாதனையாளர் விருதினை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார்.
விழாவில் முதல்வர் உம்மன்சாண்டி பேசுகையில், “இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்று விட்டது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்…” என்றார்.
தமிழ்நாட்டில் அரசு மதிக்கவில்லையென்றாலும் கேரள அரசுக்காவது இந்த அளவுக்கு மரியாதை செய்யும் மனம் வந்ததே..! மிகவும் சந்தோஷம்..! நன்றிகள் கேரள அரசுக்கு..!










