என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு நல்ல மூடில் வந்திருந்தார் இசைஞானி இளையராஜா.
அவர் இசையமைத்த ‘மேகா’ திரைப்படத்தின் பிரஸ்மீட் மேடை அது. ‘அலைகள் ஓய்வதி்லலை’ படத்தில் இடம் பெறாத ‘புத்தம் புது காலை’ பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு புதுமையான, சுவையான விஷயம். அதனை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இளையராஜா பேசும்போதுதிடீரென்று படத்தின் இயக்குநர் கார்த்திக் ரிஷியை மைக் அருகே அழைத்து, “நான் இந்தப் படத்தின் முதல் ரீலுக்கு ரீரெக்கார்டிங் முடிச்சிட்டு உங்ககிட்ட போட்டுக் காட்டினேன்.. அது எப்படியிருந்துச்சுன்னு சொல்லுங்க..” என்றார். தயக்கத்துடன் பேச்சைத் துவக்கிய இயக்குநர் கார்த்திக் ரிஷி, “அசந்துட்டேன் ஸார்.. இது நம்ம படம்தானா என்று எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அந்த அளவுக்கு இசை பிரமாதமா இருந்தது..” என்றார் இயக்குநர்.
“இதைதான் எல்லா இயக்குநர்களும் சொல்வாங்க..” என்றார் இசைஞானி டைமிங் மாறாமல்..! அரங்கம் அதிர்ந்தது கை தட்டலில்..!
மேலும் தொடர்ந்த இசைஞானி, “இந்த இயக்குநர் படம் பிரமாதமா எடுத்திருக்காரு.. நான் இப்படியொரு இசையைக் கொடுத்திருக்கேன்னா படம் அப்படி இருக்கு அதுதான் உண்மை. அவரே சொன்னார் பாருங்க.. நம்ம படமான்னு சந்தேகம் வந்திருச்சுன்னு.. படமே அப்படித்தான் இருக்கு.. நீங்க இதை நெகட்டிவ்வா நினைச்சுக்காதீங்க.. நான் பாஸிட்டிவாத்தான் சொல்றேன்..
நான் எல்லா படத்தையுமே நல்ல படம்னு நினைச்சுத்தான் மியூஸிக் போட்டுக்கிட்டிருக்கேன்.. நீங்க ஒரேயொரு தடவை பார்த்திட்டு ‘த்தூ’ன்னு துப்புன படத்தை நான் நாலு தடவை பார்த்திருக்கேன்..
முதல் தடவை ஒரு ரஃப் காப்பியா பார்த்திருவேன்.. இரண்டாவது தடவை பார்த்து இசைக் கோர்வைகளை எழுதி வைப்பேன். மூணாவது தடவை ஆர்கெஸ்டிராவுக்கு போட்டுக் காட்டி ரெடி பண்ணுவேன்.. நாலாவாதுவாட்டி டேக்.. இந்த டேக்குல ஒரு தடவை சொதப்பினால்.. அடுத்தடுத்து டேக்குகள்.. இப்படி நீங்க ‘த்தூ’ன்னு துப்புன பல படங்களை நான் பல தடவை பார்த்திருக்கேன்.. அப்ப என்னைவிட பொறுமைசாலி இந்தக உலகத்துல வேற எவனாவது இருக்கானா..?” என்றார். கைதட்டலுக்கு கேக்கவா வேணும்..!?
அடுத்து ஒரு பழைய கதையைச் சொன்னார் இசைஞானி. “பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தை எடுத்திட்டு வந்து போட்டுக் காட்டினார். அந்தப் படம் எனக்குப் பிடிக்கலை. பிடிக்கலைன்னா அன்னிக்கு இருந்த சூழல்ல எனக்குப் பிடிக்கல.. ஆனாலும் மியூஸிக் போட்டேன்.. அவரும் என்கிட்ட கேட்டுப் பார்த்தாரு. நானும் நைஸா சொல்லிட்டேன்.. இருந்தாலும் விட்டுட்டாரு..
கிளைமாக்ஸ் சீனுக்கு முன்னாடி ராதா ஜெயில்ல இருக்கும்போது சிவாஜி வந்து பார்க்குற சீனுக்கு ரீரிக்கார்டிங் செஞ்சேன்.. அதைச் செஞ்சிட்டு பாரதிராஜாவை கூப்பிட்டு ‘வா.. வந்து பாரு’ன்னு போட்டுக் காட்டினேன்.. அவருக்குக் கண்ணுல தண்ணி கடகடன்னு கொட்டுது.. இதை இதுவரைக்கும் யார்கிட்டேயும் சொல்லலை. ஆனா இண்டஸ்ட்ரில தெரியும்..
பட்டுன்னு என் கையைப் பிடிச்சிட்டு ‘படம் பிடிக்கலைன்னு சொல்லிட்டும் இப்படி மியூஸிக் போட்டிருக்கியே’ன்னு என் கையைப் பிடித்து அழுதாரு பாரதிராஜா. நான் சொன்னேன்.. “யோவ்.. மியூஸிக் வந்து என்னோட சரஸ்வதி. அது என் தொழில்.. படம் பிடிக்குது.. பிடிக்கலை.. அது என்னோட பெர்ஸனல். ஆனா என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன்.. நீ என்ன குப்பைய வேண்ணாலும் போடு.. என்கிட்ட வந்துட்டா.. நான் கூப்பிட்டவுடனே வர்றா பாத்தியா சரஸ்வதி.. சப்தஸ்வரங்கள்.. அதுக்கு நான் உண்மையா இருக்கணும்.. அதுதான் இதுன்னு சொன்னேன்.. அன்னிலேர்ந்து இன்னிவரைக்கும் என்னோட இசை இப்படித்தான்..” என்று சொல்ல.. அரங்கத்தில் எழுந்த கை தட்டல் பிரசாத் லேப் வாசலுக்கே கேட்டிருக்கும்..!
தொடர்ந்த இசைஞானி, “இந்தப் படத்தை ரொம்ப நல்லா எடுத்திருக்காரு இந்த இயக்குநர் கார்த்திக் ரிஷி. நான்கூட கேட்டேன் ‘அடுத்து என்ன பண்ணப் போறன்னு..?’ ஏன்னா… முதல் படமே இந்த அளவுக்கு நல்லா கொடுத்திட்டாரு. நல்ல ஸ்கிரீன்பிளே.. படம் நல்லா வந்திருக்கு.. நிச்சயமா பேசப்படும். இதுதான் இந்தப் படத்துக்கு என்னோட ஆசீர்வாதம்..” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
கடைசியாக தயாரிப்பாளர் நன்றியுரை சொன்ன பிறகும் திரும்ப வந்து மைக்கைப் பிடித்த இசைஞானி, படத்தின் பி.ஆர்.ஓ. நிகில் முருகனை காட்டி.. “இவர் நல்ல படம் காட்டினாரு.. ஹீரோ மாதிரியேதான் இருக்காரு.. நிச்சயமா இவரு ஹீரோ ஆயிருவாருன்னு நான் ஆசீர்வதிக்கிறேன்..” என்றார். அப்போது நிகில் முருகன் பட்டென்று இசைஞானியின் காலில் விழுந்து எழுந்திருக்க, “நிச்சயமா ஹீரோ ஆயிருவாரு..” என்று மீண்டும் டைமிங்காக இசைஞானி சொல்ல, நெகிழ்ந்து போனார் நிகில் முருகன்..!
இசைஞானியின் இந்த ஆசீர்வாதம் பலிக்கட்டுமே..!