ரஜினியை ‘உள் குத்தோடு’ வாழ்த்திய கமல்ஹாசனின் செயல் நியாயம்தானா..?

ரஜினியை ‘உள் குத்தோடு’ வாழ்த்திய கமல்ஹாசனின் செயல் நியாயம்தானா..?

தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திற்கு 2019-ம் ஆண்டிற்கான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது கொடுத்தமைக்காக திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் மிக நெருங்கிய நண்பரும், உண்மையில் அவருடைய சிறந்த போட்டியாளருமான நடிகர் கமல்ஹாசனும், ரஜினிக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அந்த டிவீட்டரில் கமல் சொல்லியிருந்த வாழ்த்து இதுதான் :

“உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.”

இந்த வாழ்த்துச் செய்தியில் “திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 சதவிகிதம் பொருத்தம்…” என்று கமல்ஹாசன் சொல்லியிருப்பதுதான் சர்ச்சைக்கு வழி வித்திட்டிருக்கிறது.

இந்த வாழ்த்தினைப் படித்துப் பார்த்த பலரும் “நடிகர் கமல்ஹாசன் ஏதோ ஒரு உள் குத்தோடு’தான் ரஜினியை வாழ்த்தியிருக்கிறார்கள்…” என்றார்கள்.

இதன் மூலம், “எங்களது தலைவர் வெறுமனே திரையில் வந்து தலையைக் காட்டியிருக்கிறார். ஆனால் நடிக்கவில்லை… என்று கமல்ஹாசன் குத்திக் காட்டுகிறாரா..?” என்று கோபப்படுகிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

இந்த வாழ்த்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சாட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். டீவிட்டர் தளத்தில் அவதூறுகளும், குற்றச்சாட்டுக்களும் பறந்து கொண்டிருக்கின்றன.

கமல்ஹாசனின் இந்த வாழ்த்துச் செய்தி தமிழ்த் திரையுலகத்தினரைக்கூட சற்று சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நியாயப்படி பார்த்தால் தனக்குத்தான் முதலில் இந்த விருது கொடுத்திருக்க வேண்டும். ரஜினி நடிப்புலகத்தில் எனது ஜூனியர்தானே என்று கமல் நினைத்திருக்கலாம். இது உண்மையும்கூட.

1960-ம் ஆண்டிலேயே களத்தூர் கண்ணம்மா’ படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து அந்த முதல் படத்தில் நடித்த நடிப்புக்காகவே தேசிய விருதினைப் பெற்றவர் கமல்ஹாசன்.

அதோடு இதுவரையிலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை 4 முறையும், மாநில அரசின் விருதினை 8  முறையும் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் ரஜினியோ இதுவரையிலும் ஒரு முறைகூட நடிப்புக்கா தேசிய விருதினைப் பெற்றதில்லை. அதேசமயம் மாநில அரசின் விருதினை 6 முறை பெற்றிருக்கிறார். இதில் 2 முறை சிறப்பு விருதினை மட்டுமே பெற்றிருக்கிறார்.

‘பிலிம்பேர்’ விருதுகளைப் பொறுத்தமட்டில் நடிகர் கமல்ஹாசன்தான் மிக அதிக முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். 17 முறை கமல்ஹாசன் ‘பிலிம்பேர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். ரஜினியோ ஒரே ஒரு முறை.. நல்லவனுக்கு நல்லவன்’ படத்திற்காக மட்டுமே பெற்றிருக்கிறார்.

சிவிலியன் விருதுகளைப் பொறுத்தமட்டில் ரஜினி மட்டுமே பத்ம விருதுகள் மூன்றையுமே வாங்கியிருக்கிறார். ஆனால், இவர் வாங்கிய ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’ விருதுகள் அரசியல் காரணங்களுக்காகவே தரப்பட்டது என்ற சர்ச்சையும் எழுந்தது. கமல்ஹாசனோ ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்ம பூஷன்’ விருதுகளை மட்டுமே பெற்றிருக்கிறார். பத்ம விபூஷன்’ இனியும் கமல்ஹாசனுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இப்போதெல்லாம் விருதுகள் அனைத்துமே அரசியல் களத்தின் காரணமாகத்தான் தரப்படுகிறது என்பதால்தான் இந்த விருதிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

கமல்-ரஜினி இருவரையும் பொருத்தமட்டில்… இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்தவர்கள்.. படங்களைத் தயாரித்தவர்கள்.. இத்தனையாண்டு காலம் இருவருமே நீடித்து நிலைத்து வந்ததற்குக் காரணமே… அவர்கள் இருவருக்குமிடையே இருந்து வந்த போட்டி மனப்பான்மைதான்.

1986-ம் ஆண்டில் இருவருமே தங்களது சொந்தப் படங்களைத் திரைக்குக் கொண்டு வந்தார்கள். அது ‘விக்ரமும்’, ‘மாவீரனும்’. இந்த இரண்டு படங்களையும் இயக்குநர் ராஜசேகர்தான் இயக்கியிருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக இரண்டு படங்களுமே தோல்வியைத் தழுவின.

ஆனால், அதன் பிறகு கமல்ஹாசன் தனது பாதையை மாற்றிக் கொண்டு விருதுகளையும் மனதில் வைத்து படங்களைத் தயாரித்தார். நடித்தார். விருதுகளின் உச்சத்திற்குச் சென்றார். ஆனால், ரஜினியோ தனது ‘ஸ்டைல்’ என்ற ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மனதில் வைத்து இத்தனையாண்டுகளாக நடித்து வருகிறார்.

நடிப்பென்று பார்த்தால் “நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு கமல்ஹாசன்தான்” என்று அனைவருமே சொல்வார்கள். இதில் ரஜினியின் பெயர் எந்த இடத்திலும் வராது. ஆனால் ரஜினி அதைப் பற்றி என்றைக்குமே கவலைப்பட்டதில்லை. தனக்கு எது வருமோ அதை மட்டும்தான் நான் செய்வேன் என்று இப்போதுவரையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீப ஆண்டுகளில் நடிகர் கமல்ஹாசனைவிடவும் ரஜினியின் மார்க்கெட் மிக அதிகமான உச்சத்தைத் தொட்டது. இப்போது தயாரிப்பில் இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி வாங்கியிருக்கும் சம்பளம் 80 கோடி என்கிறார்கள். கமல்ஹாசனோ ‘இந்தியன்-2’ படத்திற்காக இப்போதுதான் 60 கோடி சம்பளத்தை வாங்கியிருக்கிறார். இதிலும் ரஜினியை முந்த முடியவில்லையே என்ற வருத்தம் கமலுக்கு உண்டு.

இதனால்தான் அரசியல் களத்திலாவது ரஜினியை முந்த வேண்டும் என்று நினைத்துதான்… யாருமே எதிர்பார்க்காத சூழலில் கமல்ஹாசன் முந்திக் கொண்டு கட்சியைத் துவக்கினார் என்றும் திரையுலகத்தில் பேச்சு உண்டு.

“திரையுலகத்தில் எனது அண்ணா…” என்று ரஜினியே கமல்ஹாசனை வாய்விட்டு அழைக்கும் அளவுக்கு பாசமுள்ளவர், ஆனால், இந்தத் தேர்தலில் ஏனோ தன்னுடைய ஆதரவினை கமலுக்குத் தராமல் கைவிட்டுவிட்டார் ரஜினி. இந்தக் கோபமும் கமலுக்கு இருந்ததால்தான் இந்த டிவீட்டரில் இப்படியொரு மனக் கசப்பைக் கொட்டிவிட்டார் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பொதுவாக கமல்ஹாசன் பேசுவதே புரியாத பாணியில் இருக்கும். அதேபோலத்தான் இந்த டிவீட்டரிலும் உள்ளது என்று அவரது ரசிகர்கள் சமாளிப்புகேஷன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் உள்ளங்கை நெல்லிக்கனியாக இதில் தொக்கி நிற்பது “தாதா சாஹேப் பால்கே விருதினை முதலில் தனக்குத் தராமல் ரஜினிக்குக் கொடுத்துவிட்டார்களே என்ற கமல்ஹாசனின் கோபம்தான்…” என்பது கண்கூடு.

கலைஞர்களுக்குள் கோப, தாபங்கள் வேண்டாம். அடுத்து விரைவில் அரசியல் நிலைமை மாறும்.

அப்போது அந்தக் கனி நிச்சயமாக கமல்ஹாசனின் மடியில் வந்து விழும்.

அதுவரையிலும் அவர் காத்திருக்கலாம்..!!!

Our Score