மூத்தவர்கள் காத்திருக்க… ரஜினிக்கு ‘தாதா சாஹாப் பால்கே’ விருது கொடுத்தது நியாயமா..?

மூத்தவர்கள் காத்திருக்க… ரஜினிக்கு ‘தாதா சாஹாப் பால்கே’ விருது கொடுத்தது நியாயமா..?

தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு இந்தியத் திரையுலகத்தின் மிக உயர்ந்த விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது வழங்கப்பட்டதில் தமிழ்த் திரையுலகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது.

இருந்தாலும் வழக்கம்போல லேசான முணுமுணுப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தனது மறைமுக ஆதரவாளர் ரஜினி என்பதாலேயே அவருக்கு இந்த விருதினை வழங்கியிருக்கிறது என்கிற பேச்சு எல்லாப் பக்கங்களிலும் எழுந்துள்ளது.

அதுவும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில்.. உச்சப்பட்ச பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில்… அவரது ரசிகர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில்தான் இந்த விருது ரஜினிக்கு இந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று பல்வேறு இடங்களிலிருந்தும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலைமையில் தற்போதைய தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை மொத்தமாக முழுங்குவதற்கு அத்தனை வேலைகளையும் செய்து வருகிறது.

அதனால்தான் திட்டமிட்டு இந்த நேரத்தில் திரைப்பட விருதுகளையும், ரஜினிக்கான பால்கே விருதையும் அளித்திருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் ரகசியமாக பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம் “ரஜினியைவிடவும் மூத்தவர்கள் இந்த விருதுக்குப் பொருத்தமானவர்களாகக் காத்திருக்கும்போது அவசரம், அவசரமாக.. அவர்களையும் முந்திக் கொண்டு ரஜினிக்குக் கொடுத்திருப்பது முறைதானா..?” என்கிறார்கள் சிலர்.

தற்போதைய தமிழ்த் திரையுலகத்தில் ‘தாதா சாஹேப் பால்கே’ விருதினைப் பெறும் தகுதியுடையவர்கள் என்று பார்த்தால், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘இசை ஞானி’ இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம். நிறுவனம் என்று 5 பேர்தான் முதல் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இவர்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும், ‘இசை ஞானி’ இளையராஜாவும் ரஜினியைவிடவும் வயதில் மூத்தவர்கள். முதலில் இவர்களுக்குக் கொடுத்துவிட்டு பின்பு ரஜினிக்குக் கொடுத்திருக்கலாம்.

இன்னொரு பக்கம் பார்த்தால் நடிகர் கமல்ஹாசன் வயதில் ரஜினியைவிடவும் பிந்தையவராக இருந்தாலும் தொழிலில் மிக, மிக சீனியர். ரஜினியைவிடவும் மிக அதிகமான அளவில், நடிப்புக்கான விருதுகளையும், பெருமைகளையும் பெற்றவர். எனவே அவருக்குத்தான் முதலில் கொடுத்திருக்க வேண்டும் என்று கமல்ஹாசனின் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடத் துவக்கத்திலேயே “இந்தாண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருதினை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்குத்தான் தர வேண்டும்…” என்று திரையுலகப் புள்ளிகள் பலரும் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது போரை நிறுத்த இந்திய அரசு முன் வராத காரணத்தினால், தனக்குக் கிடைத்த பத்மஸ்ரீ விருதினை மேடையிலேயே தூக்கியெறிந்தார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

மத்திய, மாநில உளவுத் துறை அமைப்புகள் அவரைப் பற்றிய இந்தக் குறிப்பினை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனாலேயே பாரதிராஜாவின் பெயரை இந்த விருதுக் கமிட்டிக் கூட்டத்தில் பரிசீலனைக்குக்கூட எடுக்கவில்லை என்கிறார்கள் டெல்லி செய்தியாளர்கள்.

‘இசை ஞானி’ இளையராஜாவைப் பொறுத்தவரையில் இந்தாண்டு அவருக்குத்தான் தரப் போகிறார்கள் என்று கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் கமிட்டியின் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுதான் இருந்தார். அவரே ஒரு முறை “மிகப் பெரிய விருது வெகு விரைவில் இளையராஜாவுக்கு வந்து சேரும்” என்று ஒரு பொது மேடையில் கூறியிருந்தார். அதனால் இந்தாண்டு தனக்குத்தான் அந்த விருது கிடைக்கும் என்று ‘இசை ஞானி’யே நம்பியிருந்தார் என்பதுதான் கொடுமையான விஷயம்.

ஆனால், கடைசி நேரத்தில் அரசியல் காரணமாக இந்த விருதின் மகுடத்தை அணிய இளையராஜா போய் ரஜினிகாந்த் கொண்டு வரப்பட்டுள்ளார் என்கிறது டெல்லி வட்டாராம்.

எப்படியோ.. சினிமாவோ.. அரசியலோ.. எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் ரஜினியின் பெயர் மட்டும் நன்கு மார்க்கெட்டிங் ஆகிறது என்பது மட்டும் உண்மை..!

Our Score