“சினிமா துறைக்கு தொடர்ந்து நல்லது செய்வேன்..!” – நடிகர் விஷால் பேச்சு

“சினிமா துறைக்கு தொடர்ந்து நல்லது செய்வேன்..!” – நடிகர் விஷால் பேச்சு

நடிகர் விஷால் நடிப்பில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரும்புத் திரை’. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் விஷால், நாயகி சமந்தா, இயக்குநர் P.S.மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “எனது தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ மூலமாக ‘பாண்டிய நாடு’ தொடங்கி நிறைய படங்களை  தயாரித்துள்ளோம். இதில் இந்த ‘இரும்புத் திரை’ படம்தான் மிக மிக தாமதமாக வெளிவரவிருக்கிறது.

IMG_2354

‘இரும்புத் திரை’ என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். இயக்குநர் மித்ரன் இந்த கதையை என்னிடம் சொல்லும்போதே இது எனக்கு  சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது. ‘துப்பறிவாளன்’ படத்துக்கு பின்பு, இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும். படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பரான யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். 

ஒரு நடிகனாவும். தயாரிப்பாளராகவும் இந்தப் பட தயாரிப்பு அனுபவம் எனக்கு சுகமாகத்தான் இருந்தது. முதல் முறையாக இந்தப் படத்தில்தான் சமந்தாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். சமந்தா ஒரு அழகான நடிகை. சமந்தாவுடன் நடிக்கும்போது எனக்கு எல்லா பிரச்சினைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும். படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன.

IMG_2153

என்னுடைய குருநாதர் அர்ஜூன் ஸார்.. முதலில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு என் அப்பாவிடம்  தொலைபேசியில் பேசி, ‘உங்க பையனை நான் ஹீரோவா ஆக்கினால், அவன் என்னைய வில்லனா  மாத்திட்டான்’ என்றார். ஏனென்றால், அவர்தான் எனக்கு ‘செல்லமே’ படத்தின் ஆரம்பத்தில் ஊக்கம் கொடுத்து  ஹீரோவாக உருவாக்கினார்.

அர்ஜுன் ஸாருக்கு எனது மனப்பூர்வமான நன்றி. எங்கள் இருவருக்கும் கிளைமாக்ஸில் பெரிய சண்டை காட்சி உள்ளது. அதில் நாங்கள் இருவருமே ரசித்து நடித்தோம். படத்தின் கடைசி முப்பது நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.

இந்தப் படத்தை முதலில் இந்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், அப்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை. கட்டாயம் இருந்ததால் அப்போது வெளியிட முடியவில்லை. 

R.K நகர் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டவர்களில் இந்தப் படத்தின் இயக்குநர் மித்ரனும் ஓருவன். ஏனெனில் நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு போய்விட்டால் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மித்ரனின் வேண்டுதல் நிறைவேறியது.

IMG_2451

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் ஒரு சுயநலவாதியாக ‘என்னுடைய படம். நான் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்கள் தள்ளிப் போனால் வட்டி அதிகரிக்குமே’ என்று நினைத்து தயாரிப்பாளர் சங்கம் பக்கமே வராமல் போயிருக்கலாம்.

ஆனால், இந்த சினிமா துறை நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால்தான் எனது பட வெளியீட்டை தள்ளி போட்டேன். ஏனென்றால் நான் இன்று பணத்தை இழந்துவிட்டாலும், பின்பு எப்போது வேண்டுமென்றாலும் என்னால் சம்பாதிக்க முடியும். ஆனால், சோறு போட்ட இந்த தொழில் துறைக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேர்தலின்போது சொன்ன விஷயத்தைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. இருந்தாலும், செயல்பாடுகளில்தான் நாங்கள்  யார் என்பதைக் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டிய நேரமும் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும்.

இந்தப் படத்தின் இசை வெளிட்டு விழா வரும் ஜனவரி 6-ம் தேதியன்று மலேசியாவில் நடைபெற உள்ளது…” என்றார்.

IMG_2268

இதே விழாவில் நாயகி சமந்தா பேசும்போது, “இந்த ‘இரும்புத் திரை’ படத்தின் கதையும், காட்சிகளும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. நான் அவருடைய இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் விஜய் சார், சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும்போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கும்போது என்னைவிட வயதில் இளைய ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. விஷால் இஸ் தி பெஸ்ட்…” என்றார்.

 

Our Score