full screen background image

ஏ.ஆர்.ரஹ்மானால்தான் இந்தப் படம் உருவானது – நடிகர் பார்த்திபன் சொன்ன உண்மை..!

ஏ.ஆர்.ரஹ்மானால்தான் இந்தப் படம் உருவானது – நடிகர் பார்த்திபன் சொன்ன உண்மை..!

தமிழ்த் திரை வரலாற்றில் முதல்முறையாக ஒரே ஷாட்டில் தயாரான நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’.

தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் எழுத்தாளர் இராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி சந்துரு, இயக்குநர் எழில், சசி, சமுத்திரகனி, த.செ.ஞானவேல், எழுத்தாளர் அஜயன் பாலா, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசும்போது, “இந்த முயற்சியை நான் துவக்கியபோது எல்லோரும் “முடியாது” என்றார்கள். “ஏன் முடியாது..?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு முயற்சித்ததுதான் இந்தப் படம்.

ஏ.ஆர்.ரஹ்மான்  அவர்களுடன் ‘ஏலோலோ’ படத்திலேயே நான் பணியாற்றியிருக்க நினைத்தேன். ஆனால், அந்த படம் தொடரவில்லை. அவருடன் வேலை செய்ய 20 வருடங்கள் காத்திருந்தேன். இந்தப் படம் அவர் இருந்ததால் மட்டுமே சாத்தியம். அவர் இருக்கும் தைரியத்தில்தான் இந்த முயற்சியை செய்தேன்.

இதன் கதையைச் சொன்னவுடனே அவரே ’பாவம் செய்யாதிரு  மனமே’ என்ற ஒரு சித்தர் பாடலை இசையமைத்து தந்தார். எப்படி படத்திற்கு முன்னதாக படத்திற்கு பொருத்தமாக ஒரு பாடலை தந்தார் என ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் கதைக்கு முழுக்க முழுக்க அவர் இசையால் உயிர் தந்துள்ளார். ஒரு பாடல் இருந்த இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் ஆகிவிட்டது. இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். எல்லோரது பாராட்டும், ஊக்கமும்தான் இந்தப் படம் எடுக்கக் காரணம்…” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இயக்குநர் பார்த்திபன் இந்தக் கதையை என்னிடம் முதலில் சொன்னபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவர் இந்த ஐடியாவை சொன்னபோது முதலில் எனக்கு பைத்தியகாரத்தனமாக இருந்தது. ஆனால், இவ்வளவு நன்றாக செய்வார் என நினைக்கவில்லை. மிக நன்றாக எடுத்திருக்கிறார். அவரிடம் சினிமா மீதான காதல் இன்னமும் இருக்கிறது.

இந்தப் படத்தை எடுக்கும்போது ஷீட்டிங் ஸ்பாட்டில் எப்படி எடுக்கிறார்கள் என்று நேரில் சென்று பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. இந்தப் படம் வெளிநாட்டில் தயாராகி இருந்தால் கொண்டாடி இருப்பார்கள். பரவாயில்லை.. இங்கு தமிழ்நாட்டில் நாம் இந்தப் படத்தைக் கொண்டாடுவோம்…” என்றார்.

Our Score