ஹோலிமேன்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அனில் கொட்டாக்காரா தயாரிக்கும் புதிய படம் ‘இரண்டு மனம் வேண்டும்’.
ஷஜி, நஜ்மல், சிலங்கா, ஷைனா ஆகிய புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மோகன் சர்மா, அழகு, கிரேன் மனோகர், ரிந்து ரவி, அருள்மணி, சீமாஜி நாயகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வி.கே.பிரதீப், இசை – முகமது அலி. படத்தொகுப்பு – ரஞ்சித் டச் ரிவர், கலை – ஜோஸப் போபின், பாடலாசிரியர் – வேல்முருகன், பாடகர்கள் – ஹரீஷ் ராகவேந்தர், சுஜாதா, ஹர்ஜித், மணிகண்டன், சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம் – ஆர்.அஜய்குமார், இயக்கம் – பிரதீப் சுந்தர்.
கடலோரப் பகுதியை பின்னணியாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு சந்தோஷம், துக்கம், காதல், காதல் தோல்வி, ஏமாற்றம், என எல்லா உணர்வுகளும் வெளிப்படும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
துணிக்கடையில் கேஷியராக வேலை செய்யும் ஹீரோ செல்வத்திற்கு பெரிய கனவுகள் ஏதுமில்லை. விதவை அம்மா, வயதான பாட்டி, தம்பி சிவா ஆகியோருடன் இருக்கிறான். அவனுக்கு சிறு வயது முதலே கூடவே வளர்ந்து வரும் பொன்னி என்ற பெண் தோழியாகவும், பின்பு காதலியாகவும் வருகிறாள். இவர்களது வாழ்க்கையில் கடலும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது.
ஹீரோ செல்வத்தின் தம்பி சிவா தேவயானி என்ற பெண்ணை விரும்பி மணமுடிக்க நினைக்க.. பிரச்சினைகள் தோன்றுகின்றன. இப்போது எழும் பிரச்சினைகளை ஹீரோ செல்வம் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதையோட்டம்.
ஏழைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இப்படம் இருக்கும். கடலோரப் பகுதிகளான நாகர்கோவில், கன்னியாகுமரி, இராமேஸ்வரம், கேரளா ஆகியவற்றின் கடல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.