பிரம்மாண்டமான படங்களுக்கு பிரசித்திப் பெற்ற பி.வி.பி. சினிமாவின் தயாரிப்பில், இயக்குநர் பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹன், பிரகாஷ் ராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம், காதலும் நகைச்சுவையும் கலந்த ஒரு சித்திரமாகும்.
இந்தப் படத்தை பற்றி இதுவரை வெளிவந்த செய்திகள் அனைத்தும், ஹீரோயின் அனுஷ்காவின் பிரம்மாண்டமான உருவத்தைப் பற்றியும், ஒருவருடைய உடல் வாகு சமுதாயத்தில் அவர்களுக்கு எத்தகைய அடையாளத்தை பெற்று தருகிறது என்பதையும் சித்தரிப்பதாக உள்ளது. இப்போது இப்படக் குழுவினர் சமூக வலை தளங்களில் இதைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.
தன்னுடைய உருவ அமைப்பு பற்றிய கருத்துக்களுக்கு அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான் சரி என்ற கோணத்தில் ஹீரோயின் அனுஷ்காவே விவாதிக்க உள்ளார்.
சதாசர்வ காலமும் உடல் பயிற்சியை பற்றியே பேசும் ஹீரோ ஆர்யாவோ, உடல் பயிற்சியின் அத்தியாவசியத்தையும், ஊட்டச் சத்து உள்ள உணவின் அவசியத்தைப் பற்றியும் பேச இருக்கிறார்.
இதன் மூலம் சினிமா ரசிகர்களிடையே இந்தப் படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார்கள் படக் குழுவினர். இதையொட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை வெளிவரவுள்ளதாகவும், அக்டோபர் மாதம் படத்தை வெளியிட தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.