‘இந்தியன்-2’ கைவிடப்பட்டதா..? – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..!

‘இந்தியன்-2’ கைவிடப்பட்டதா..? – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..!

இயக்குநர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் படத்தின் உருவாக்கத்தின்போதே பலவித பேச்சுக்களையும், சர்ச்சைகளையும் எழுப்பும். காரணம், படத்தின் பட்ஜெட்டும், நடிகர், நடிகையரின் அன்றாட அலுவல்களும்தான்.

‘இந்தியன்-2’ படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வந்த நேரத்தில்தான் திருஷ்டி பட்டதுபோல் ஒரு விபத்து நடந்து 3 பேர் இறந்து போனார்கள். அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் நிலைக்கு வரும்போது கொரோனா வைரஸினால் இந்தியா முழுவதும் லாக் டவுன் ஆகிவிட.. மொத்தத் திரையுலகமும் அடங்கிப் போனது.

இப்போது ஷூட்டிங்கிற்கு மறுபடியும் அனுமதி கிடைத்து பல படப்பிடிப்புகள் நடந்து வரும் வேளையில் ‘இந்தியன்-2’ மட்டும் துவக்கப்படவே இல்லை. காரணம், அது மிகப் பெரிய பட்ஜெட் என்பதாலும், கதைப்படி அந்தப் படம் மக்கள் போராட்டத்தை முன்னிறுத்திய படமாகவும் இருப்பதும்தான்.

அரசு அறிவுறுத்தலின்படி ஒரு படப்பிடிப்பின்போது படக் குழுவினர் 100 பேருக்குள்தான் இருந்தாக வேண்டும். ஆனால், ‘இந்தியன்-2’ படத்திற்கு குறைந்தபட்சமே 200 பேர் தேவைப்படுகிறார்கள். இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் சிறப்பு விதிவிலக்கெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், இது கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் அரசியலில் போய் முடியும். இதனால் கொரோனா முழுமையாக முடியட்டும் என்று அந்தப் படக் குழு காத்திருக்கிறது.

இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர் லைகா நிறுவனத்திற்கு ‘இந்தியன்-2’ தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும், அதையொட்டி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து ‘இந்தியன்-2’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப்பான நிலையில் இருப்பதாகவும் வதந்திகள் தீயாய் பரவின.

இதற்கடுத்து ஷங்கர் தனியே சென்று ஐந்து மொழி நாயகர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தைத் துவக்கப் போவதாகவும், அதில் தமிழின் சார்பில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருப்பதாகவும் மின்னல் வேக வதந்திகள் பரவி.. இயக்குநர் ஷங்கரை டென்ஷனாக்கியிருக்கிறது.

இது பற்றி லைகா வட்டாரத்தில் பேசியபோது, “இதில் எதுவுமே உண்மையில்லை. ‘இந்தியன்-2’ நிச்சயமாக மீண்டும் துவக்கப்படும். ஷங்கர் வேறு படங்களுக்கு போகவில்லை. அவருடைய முழு கவனமும் ‘இந்தியன்-2’ படத்தில்தான் இருக்கிறது. இந்தக் கொரோனா லாக் டவுன் மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும்.

கமல்ஹாசனும் இந்தப் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். இப்போது அவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வேறு கெட்டப்பில் இருந்தாலும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு துவக்கப்பட்டால் சட்டென்று அதற்கு மாறிவிட்டு.. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வேறு கெட்டப்பில் வந்துவிடுவதாக திட்டவட்டமாக லைகா நிறுவனத்திடமும், ஷங்கரிடமும் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக ‘இந்தியன்-2’ விரைவில் துவங்கும்..” என்கிறது லைகா வட்டாரம்.

Our Score