full screen background image

திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

தமிழ்ச் சினிமாவின் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அண்மையில் வெளியான சில திரைப்படங்களைத் தயாரிக்க கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தியதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 5 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்புச்செழியனைத் தொடர்ந்து பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான எஸ்.தாணுவுக்குச் சொந்தமான இடங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, தி.நகர் தணிகாசலம் சாலையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, தேனாம்பேட்டையில் ராஜ் டிவியின் அருகில் இருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் எஸ்பிலிம் உரிமையாளரான சீனிவாசன் என்பவரது அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வேலூர் அண்ணா சாலையில் உள்ள சீனிவாசனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

வருமான வரித்துறையினரின் இந்த திடீர் சோதனை தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Our Score