full screen background image

“அம்மான்னா சும்மா இல்லடா எ்ன்றும் பாடியிருக்கிறேன்..” – இசைஞானி இளையராஜாவின் பேச்சு..!

“அம்மான்னா சும்மா இல்லடா எ்ன்றும் பாடியிருக்கிறேன்..” – இசைஞானி இளையராஜாவின் பேச்சு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் வகையில், அம்மா அன்னதானம் அளிக்கும் திட்டத்தின் தொடங்க விழா நேற்று மதியம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதியார் பாடியிருப்பதை எஸ்.ஏ.சந்திரசேகரன் இங்கு பேசும்போது குறிப்பிட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதைக் கேட்கும்போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி என்றுதான் எனக்குத் தோன்றும். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உணவளிக்க வேண்டும் என்றுதான் பாடியிருக்க வேண்டும். ஜகத்தினை எதற்கு அழிக்க வேண்டும்..? அதுதான் இயற்கைதான் நமக்கு உழைத்துக் கொட்டுகிறதே..?

‘சென்றுடுவீர் எட்டுத் திக்கும்.. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றும் சொல்லியிருக்கிறார் பாரதி. ‘வெளிநாட்டில் இருக்கும் செல்வங்களையெல்லாம் இங்கு கொண்டு வந்து சேருங்கள்’ என்கிறார். இதிலும் எனக்கு உடன்பாடில்லை. ‘சென்றுடுவீர் எட்டுத் திக்கும்.. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு அங்கும் சேர்ப்பீர்’ என்றுதான் பாடியிருக்க வேண்டும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் உணவளிப்போம் என்ற திட்டம் பாராட்டப்படக் கூடிய திட்டம்தான். நான் செய்கின்ற விஷயங்களை சொல்வதற்காக இங்கு வரவில்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து செய்யும் இந்த விஷயம் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி தருகிறது.

எல்லோரும் பசியோடுதான் வந்தோம். கலைப் பசியோடுதான் வந்தோம். பட்டினியோடு வரவில்லை. வயிற்றுப் பசியை நான் வெளியில் காட்டுவதில்லை. எப்போதும் சிரித்தபடிதான் வருவேன். அதைப் பார்த்து என் நண்பர்கள் இவன் நன்றாக சாப்பிட்டுவிட்டு வருகிறான்போல் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள். அவர்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. பசி அப்போது எங்களுக்கு துன்பமாகவே இல்லை. அதனால் சந்தோஷமாக இருந்தோம்.

அந்த சந்தோஷம் இப்போது நாங்கள் பெயர் பெற்ற பின்பும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் எல்லாம் அதே குணங்களோடு இறந்து போய்விட்டார்கள். அவர்கள் இறந்து போவதற்கு காரணமாக இருந்தது இந்த பெயரும், புகழும், பணமும். மனித மனதைக் கொல்லக் கூடிய இவையனைத்தும் நமக்கு தேவையா?

தயாரிப்பாளர்களான நீங்கள் படம் மட்டுமே தயாரிக்கவில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், கதைகள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் தயாரிக்கிறீர்கள். இத்தனையும் தயாரித்து ஒற்றுமையில்லாமல் இருந்த தயாரிப்பாளர் சங்கம், இப்போது இவ்வளாவு ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

‘அம்மா என்று அழைக்காத உயிரில்லையே’ என்று மட்டும் நான் பாடவில்லை. ‘அம்மான்னா சும்மா இல்லைடா’ என்றும் பாடியிருக்கிறேன். அம்மாவின் இந்த உணவுத் திட்டத்தை என்னை தொடங்கி வைக்கச் சொல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அன்னதானம் உலகமெங்கும் பரவட்டும். பசிக்கு உணவளிக்கும் உலகத்தை உருவாக்குவோம்..” என்று இளையராஜா பேசினார்.

விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, துணைத் தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், இப்ராகிம் ராவுத்தர், பிலிம் சேம்பர் செயலாளர் காட்ரகட்ட பிரசாத், முன்னாள் தலைவர் கல்யாண், இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா, பட அதிபர்கள் கோவை தம்பி, பிரமிட் நடராஜன், சித்ரா லட்சுமணன் ஆகியோரும் பேசினார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் கவுரவச் செயலாளர் டி.சிவா வரவேற்று பேசினார். இன்னொரு கவுரவச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Our Score