இப்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘கப்பல்’ படத்தில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்ற பாடல் முழுவதையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“என் அனுமதியில்லாமல் இதனை செய்திருப்பதால் அந்தப் பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்..” என்று எச்சரித்து, ‘கப்பல்’ படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியிட்டாளர் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
‘கப்பல்’ படக் குழுவினர் இதற்கான அனுமதியை இசைஞானி இளையராஜா முன்பு தன் பாடல்களை வெளியிட அனுமதி கொடுத்திருந்த அகி மியூஸிக் நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கின்றனர்.
அகி மியூஸிக் நிறுவனம் தன்னுடைய பாடல்களை வெளியிடக்கூடாது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவை பெற்றிருக்கிறார்.
இது தெரியாமல்தான் ‘கப்பல்’ படக் குழு அகி மியூஸிக் நிறுவனத்திடமிருந்து பாடல் உரிமையை பணம் கொடுத்து வாங்கியிருக்கிறது.
இந்த வக்கீல் நோட்டீஸிற்கு ‘கப்பல்’ படக் குழுவினரின் பதில் என்னவென்று தெரியவில்லை..!









