‘தோன்றின் புகழோடு தோன்றுக; அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற குறள் நம்மில் பலருக்கு பாலபாடமாக இருக்கிறது. செல்வமும், புகழும் நமக்குக் கிடைக்கும் இலவச இணைப்புகளாகும். ‘புகழ்’ கிடைக்கும்போது அனைத்தும் நம்மை வந்தடையும்.
அதுபோன்ற ‘புகழே’ படத்தின் தலைப்பாகவே வரும்போது ‘புகழ்’ தருணங்களை ஏற்படுத்திக் கொள்வது அவரவர் சாமர்த்தியம். இந்த படம், தன் தலைப்பைப் போலவே ‘புகழ்’ பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
‘ஜெய் மற்றும் சுரபி நடிக்கும் இந்த ‘புகழ்’ திரைப்படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாகும். ‘வடகறி’ படத்தில் அறிமுகமான இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் சிவா – மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்கள்.
2014 ஆண்டில் ‘நெஞ்சுக்குள்ளே நீ’ பாடல் மூலம் இசை உலகில் பெரும் பாராட்டு பெற்ற இவர்கள் 2015-ம் ஆண்டில் இந்திய இசை உலகின் இரு ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தங்களது இசை பயணத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.
2014-ம் ஆண்டில் பல சாதனைகளை புரிந்த இளம் இசை அமைப்பாளர் அனிரூத் ‘புகழ்’ திரைப்படத்தின் முதல் பாடலை பாடி உள்ளார். ‘நாங்கதான்டா பொடியன்தாண்டா.. ஆட்டம் கண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா’ என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.
மேலும், பெரும் வெற்றி பெற்ற ஹிந்தி திரைப்படமான ‘அஷிக்லி’ திரைப்படத்தில் இடம் பெற்று நாடெங்கும் பட்டி தொட்டிகளிலும் புகழ் பெற்ற ‘தும் ஹி ஹோ ‘ பாடலை பாடிய அரிஜித்சிங் ‘புகழ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்’ என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர்கள் நா.முத்துகுமார் மற்றும் பிரான்சிஸ்.
மேற்கூறிய இரண்டு பாடல்களும் ‘புகழ்’ படத்திற்கு மேலும் புகழ் பெற வழி வகுக்கும் என்று நம்புகிறது புகழ் டீம்.
படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட கட்ட படபிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளார்களாம். திட்டமிட்டு குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி முடித்த இயக்குனர் மணிமாறன் மற்றும் அவரதுக் குழுவினருக்கும் இந்த படம் பெரும் ‘புகழ்’ சேர்க்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ்.
ஏராளமான பொருட்செலவில் வித்தியாசமான கதை அமைப்பில் தயாராகும் இந்த படத்தை வெளியிடுபவர் ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.











