மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது சிறந்த பாடல்களின் கச்சேரி வரும் ஜூலை 27-ம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடக்கவுள்ளது.
இசைஞானி இளையராஜாதான் இந்த இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார் என்பது இதில் கூடுதல் செய்தி. ‘என்னுள்ளே எம்.எஸ்.வி.’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜீவா – இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது, “திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக் குழுவினரோடு அவருடைய பாடல்கள் சிலவற்றை நான் வாசித்து காட்ட இருக்கிறேன்.
இசையுலகின் பெரிய, உயர்வான விஷயங்களை அண்ணன் எம்.எஸ்.வி. எப்படி சர்வசாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன்.
இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை எங்கோ அழைத்து செல்கின்ற உணர்வை கொண்டு வருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால்தான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். எம்.எஸ்.வி.யின் உயிர் அவரது உடலைவிட்டு பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்…” என்றார் கண்ணீரோடு.