தமிழ்த் திரையுலகத்தின் நகைச்சுவை நடிகரான மயில்சாமியும் இந்தத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
சென்னையில் அவர் குடியிருக்கும் பகுதியான விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் மயில்சாமி.
இதற்காக நேற்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவர் ஆட்சியமைத்த 1977-ம் ஆண்டில்தான் இதே சென்னைக்கு நான் குடி வந்தேன். அவரைத் தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொண்டவனில்லை.
எனக்குத் திருமணம் செய்து வைத்தவர் நடிகர் கமல்ஹாசன்தான். ஆனால் நான் அவர் கட்சியில்கூட சேரவில்லை. தனித்தேதான் நிற்கிறேன். இதனால் சில கட்சிக்காரர்கள் கோபப்படலாம். ஆனால் என்னால் ஒரு கட்சியில் சேர்ந்து தொண்டனாக மட்டுமே இருந்துவிட முடியாது.
இந்த அரசியல் நடவடிக்கையால் வடிவேலுக்கு ஏற்பட்ட கதிபோல் எனக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இப்போது நடிக்க வந்திருக்கும் என் மகன்களுக்கும் எந்தப் பிரச்சினையும் வராது என்றே நம்புகிறேன்.
யாருடைய வேலையையும் யாரும் கெடுக்கக் கூடாது. ஒருவரின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து அவரது வயிற்றில் அடிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது மிகப் பெரிய பாவம்..” என்றார் நடிகர் மயில்சாமி.