full screen background image

“தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்” – நடிகர் கிச்சா சுதீப் அறிவிப்பு

“தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்” – நடிகர் கிச்சா சுதீப் அறிவிப்பு

Zee studios வழங்க, Shalini Artss நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா’.

இயக்குநர் அனுப் பண்டாரியின் இயக்கத்தில். கன்னட படவுலகின் ‘பாட்ஷா’வான கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த விக்ராந்த் ரோணா’ படம்  பான் வேர்ல்ட் படமாக 3-D  ஃபேண்டஸி வடிவத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை, சத்யம் திரையரங்கத்தில் படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் விருந்தினராக நடிகர் ஷாம் மற்றும் தயாரிப்பாளர்கள் T.G.தியாகராஜன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

kicha sudheep-shaam

இவ்விழாவினில் நடிகர் ஷாம் பேசும்போது, “இன்று இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கியக் காரணமே கிச்சா சுதீப் அண்ணன்தான். அவரும், நானும் நெருங்கிய நண்பர்கள். அண்ணன் – தம்பி போல பழகுவோம்.

அவரின் முழு கவனமும் எப்பொழுதும் திரைப்படத்தில்தான் இருக்கும். ஒரு திரைப்படத்தை எப்படி சிறப்பாக மெருகேற்ற வேண்டும் என்று யோசித்து, அதற்காகவே உழைப்பார்.

ஒரு நாள் நான் அவரை பார்க்க போன போது, அவர் எனக்கு இந்த விக்ராந்த் ரோணா’ படத்தின் 20 நிமிட காட்சிகளை போட்டுக் காட்டினார். நான் அதைப் பார்த்து மிரண்டுவிட்டேன்.

படத்தின் மேக்கிங் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். விக்ராந்த் ரோணா’ அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். படக் குழுவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேசும்போது, “நடிகர் கிச்சா சுதீப்பின் பரம ரசிகன் நான். அவருடைய ‘நான் ஈ’ படத்தின் பெரிய ரசிகனும்கூட. அதில் அவருடைய நடிப்பு அபாரமாக இருந்தது. எதிரில் ஆள் இல்லாமல், ஒரு ஈ இருப்பது போல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல. அதேபோல் பயில்வான்’ திரைப்படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருந்தார் சுதீப். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப்.

இந்த ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் காட்சிகளை பார்க்கும்போது, படத்தின் மேக்கிங் என்னை பிரமிப்படைய வைத்தது. இசை பிரமாதமாக உள்ளது. நிச்சயமாக இந்த படம் பெரிய வெற்றியடையும். அதற்குண்டான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்…” என்றார்.

தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசும்போது, “இது என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் என்னுடைய நெருங்கிய நண்பர். கோவிட் நேரத்தில்தான் இந்தப் படத்தில் நான் இணைந்தேன். கோவிட் நேரத்தில் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைக்குமா என்று முதலில் சந்தேகப்பட்டேன். ஆனால் அப்போதே  உரிய பாதுகாப்புடன் அவர்கள் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். நானும் இப்படத்தில் இருக்க  வேண்டுமென ஆசைப்பட்டு இணைந்தேன். இந்தப் படம் சூப்பராக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

anoop bandaari

இயக்குநர் அனுப் பண்டாரி பேசும்போது, “மிகப் பெரிய உழைப்பில் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் படத்தின் டிரெய்லர், ஃபர்ஸ்ட்லுக் ஆகியவற்றிற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு வரவேற்பிற்கு நன்றி. இப்போது பான் இந்திய படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்று வருகின்றன. தற்போது கமல் சாரின் விக்ரம்’ இந்திய அளவில் அசத்தி வருகிறது. இந்த வரிசையில் எங்கள் படமும் உங்கள் அனைவரையும் கவரும் என நம்புகிறோம்…” என்றார்.

நடிகர் கிச்சா சுதீப் பேசும்போது, “நான் சினிமாவை நம்புகிறேன். சினிமாவைத்தான் காதலிக்கிறேன். அதுதான் என்னை இங்குவரை அழைத்து வந்துள்ளது. இது ஒரு நல்ல படைப்பு.  இந்தப் படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வரும்போது, அழைக்கும்போது நிச்சயமாக நடிப்பேன். கர்நாடகா சினிமாவை கடவுளாக கொண்டாடும் இடம். கே.ஜி.எஃப்.’ மூலம் அது எல்லா இடத்திலும் தெரிவது மகிழ்ச்சி. இந்தப் படம் உங்கள் அனைவரையும் புது உலகிற்கு கூட்டிச் செல்லும்…” என்றார்.

இப்படம் வரும் ஜுலை 28-ம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  மற்றும் ஆங்கிலம்  மொழிகளில்  திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score