2002-ம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை விநியோகம் செய்ததால் வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்து, தான் நடுத்தெருவுக்கு வந்ததாக சொல்கிறார் செவன்த் சேனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன்.
இது குறித்து அவர் அளித்திருக்கும் சமீபத்திய வீடியோ பேட்டியில், “2001-ம் ஆண்டு ஜூலை மாதம் மணிரத்னம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைத் துவக்கினார். மணிரத்னம் பெரிய இயக்குநர். சுஹாசினியும் எனக்கு பிரண்ட். அதனால் நான் தயாரித்த முந்தின படமான ‘சீனு’ படத்துலவிட்டதை இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்தாவது தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சேன்.
சென்னை, செங்கல்பட்டு ஏரியா, உள்ளிட்ட தமிழகத்தில் 5 முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமையை 1 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு மணிரத்னத்திடம் வாங்கி விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்தேன். இந்தப் பணத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக நான் அவர்கிட்ட கொடுத்திட்டிருந்தேன். அ்ப்போது அவருடைய தம்பி சீனிவாசன்தான் நிர்வாகத்தைப் பார்த்துக்கிட்டாரு.

2001 ஜூலையில் ஆரம்பித்த படம் உடனேயே அந்த வருஷத்துக்குள்ளேயே ரிலீஸாகும்ன்னு நினைச்சேன். ஆனால், படத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தாரு மணிரத்னம். இதுனால எனக்கு நிறைய நெருக்கடிகள். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் விநியோகஸ்தரா தியேட்டர்களை புக் செய்வதில் எனக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.
அந்த வருஷமும் முடிஞ்சு அடுத்த வருஷம் 2002 பிப்ரவரி 14-ம் தேதியன்று ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை ரிலீஸ் செய்றதா சொன்னாரு மணிரத்னம். அதற்கு முந்தின நாள்தான் படத்தை எங்களுக்குப் போட்டுக் காட்டினாங்க. ‘அபிராமி’ தியேட்டர்ல ஸ்பெஷல் ஷோ. படத்தைப் பார்த்தவுடனேயே ‘இந்தப் படம் ஓடாது’ன்னு எனக்குத் தெரிஞ்சது.
மணிரத்னம் சிறந்த இயக்குநர்தான். இந்தப் படமும் சிறந்த படம்தான். ஆனால், அவார்டு படம். இதுல போயி இவ்வளவு பணத்தை முதலீடா போட்டுட்டோமேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.

நான் வருத்தப்பட்ட மாதிரியேதான் நடந்துச்சு. திருவண்ணாமலைல ஒரு தியேட்டர்ல சீட்டையே கிழிச்சிட்டாங்களாம் ரசிகர்கள். அதுக்கு என்கிட்ட காசு கேட்டாங்க அந்தத் தியேட்டர்காரங்க. படப் பெட்டிகளும் மூணே நாள்ல திரும்பி வந்துச்சு.. 17 பெட்டிகள் திரும்பி வந்துச்சு.. அதையெல்லாம் மணிரத்னம் ஆபீஸுக்கு அனுப்பினேன். அதை அவங்க வாங்க மாட்டேன்னுட்டாங்க. அதை வைக்கக்கூட என் ஆபீஸ்ல இடமில்லை.
அதோடு தியேட்டர்காரங்க ரீபண்ட் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களைச் சமாளிக்கிறதுக்காக பத்து நாள் நான் தலைமறைவானேன். என் வாழ்க்கைலேயே இப்படி ஓடி ஒளியற மாதிரி சூழல் வந்தது, இந்தப் படத்தினாலதான்.
மலேசியாவுக்கு ஓடிப் போய் பதுங்கி.. அங்கேயிருந்துகிட்டே பணத்தைப் புரட்டி திரும்பவும் சென்னைக்கு வந்தேன். தியேட்டர்காரர்களைக் கூப்பிட்டு, “என்னால யாருக்கும் நஷ்டம் வரக் கூடாது”ன்னு சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.

1 கோடியே 58 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கின அந்தப் படம், மொத்தமா எனக்கு சம்பாதித்துக் கொடுத்த படம் வெறும் 26 லட்சத்து 50 ஆயிரம்தான். மீதி 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம்.
மணிரத்னத்திடம் இதைப் பற்றிச் சொல்லி பணம் கேட்டப்போ அவர் பணத்தைத் திருப்பித் தர மாட்டேன்னுட்டாரு. அப்புறம் கவுன்சில்ல புகார் கொடுத்து சிந்தாமணி முருகேசன் எனக்காக பெரிய பஞ்சாயத்து பண்ணினார். “20 லட்சம் ரூபாய்தான் தர முடியும்”ன்னு சொன்னாங்க. அதையும் அவங்க தயாரிச்ச ‘பைவ் ஸ்டார்’ படத்தோட ரைட்ஸை கொடுத்தாங்க. அதை நான் 30 லட்சம் ரூபாய்க்கு வித்தேன். இந்த ஒரே படத்தால அந்த நேரத்துல எல்லாத்தையும் இழந்துட்டு, தெருவுக்கே வந்துட்டேன்…!” என்று பெரும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.