full screen background image

நடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..?

நடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..?

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் இன்றைக்கும் முக்கியமான நடிகையாக இருப்பவர் நதியா.

1985-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நோக்காத்த தூரத்து கண்ணும்’ என்ற மலையாளப் படத்தில்தான் முதன்முதலாக நாயகியாக நடித்து அறிமுகமானார் நதியா. அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பாசில்.

இதே திரைப்படம்தான் தமிழில் ‘பூவே பூச்சூட வா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படம்தான் நதியாவுக்கு முதல் தமிழ்த் திரைப்படம்.

நதியாவின் இயற் பெயர் ‘செரீனா’. ஆனால் இந்த ‘நதியா’ என்ற பெயரை அவருக்குச் சூட்டியவர் இயக்குநர் பாசில்தான்.

இந்தப் பெயர் எப்படி கிடைத்தது என்பது பற்றி இயக்குநர் பாசில் அளித்துள்ள பேட்டியில், “அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ‘செரீனா’ என்ற பெயரை மாற்றி வேறு பெயரை வைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது சகோதரர்தான் இந்த ‘நதியா’ என்ற பெயரை பரிந்துரை செய்தார்.

இந்த ‘நதியா’ யார் எனில் உலகப் புகழ் பெற்ற ருமேனியா நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவருடைய முழுப் பெயர் ‘நதியா கொமேனச்சி’. அவரைப் பற்றி என் சகோதரருக்கு தெரியும். அதனால் அந்தப் பெயரைச் சொல்லி இதை செரீனாவுக்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு செய்தார். நானும் அதை ஏற்றுக் கொண்டு ‘செரீனா மொய்து’வுக்கு ‘நதியா மொய்து’ என்று பெயர் மாற்றி வைத்தோம். டைட்டிலில் ‘மொய்து’ என்ற முழுப் பெயரையும் போடாமல் வெறுமனே ‘நதியா’ என்று போட்டோம். அது கிளிக்காகிவிட்டது…” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score