full screen background image

ஹவுஸ் மேட்ஸ் – சினிமா விமர்சனம்

ஹவுஸ் மேட்ஸ் – சினிமா விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், ப்ளே ஸ்மித் ஸ்டுடியோஸ் மற்றும் சவுத் ஸ்டியோஸ் சார்பில் சிவகார்த்திகேயன் – எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்திருக்கும் இந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டி.ராஜவேல்.

இந்தப் படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர்  நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.எஸ்.சதீஷ், இசை – ராஜேஷ் முருகேசன், எடிட்டர் – ஏ.நிஷார் ஷரேஃப், கலை இயக்கம் – என்.கே.ராகுல், ஒலி வடிவமைப்பு – ஹரிஷ் கே.டி.கே.சங்கர் (டோன்கிராஃப்ட்), சண்டை இயக்கம் – தினேஷ் காசி, நடன இயக்குநர் – அசார், ஆடை வடிவமைப்பாளர் – நந்தினி நெடுமாறன், பாடல்கள் – மோகன் ராஜன், உமா தேவி, ஒப்பனை – ஷேக் பாஷா, விஎஃப்எக்ஸ் : பீ ஸ்டுடியோஸ், டிஐ – இன்ஃபினிட்டி மீடியா, கலரிஸ்ட் – எம்.சண்முகபாண்டியன், ஸ்டில்ஸ் – ஆர்.மனோகர், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ்சந்திரா, அப்துல் ஏ நாசர், திரு.

இதுவரையிலும் நீங்கள் பார்த்திருக்கும் பேய் படங்களில் இருந்து சற்று வித்தியாசமாக பேய்களுக்கு மனித உருவங்களை கொடுத்து ஒரு புதுமையான பேய் கதையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

பெற்றோரை இழந்து தனியாக இருக்கும் தர்ஷன், நாயகி அர்ஷா பைஜூவை காதலிக்கிறார். அர்ஷாவின் அப்பா தர்ஷன் எதுவும் இல்லாமல் இருப்பதால் அவருக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பது என்று கிண்டல் செய்து விரட்டி அடிக்கிறார்.

இதனால் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட்டு பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து வேளச்சேரியில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டை 45 லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அதன் பின்பு வந்து பெண் கேட்கிறார் தர்ஷன். ஆனால், இப்போதும் அர்ஷாவின் அப்பா திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

ஆனால் மறுநாள் அர்ஷா தன் வீட்டில் இருந்து வெளியேறி வந்து தர்ஷனிடம் அடைக்கலமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு அந்தப் புதிய வீட்டில் குடித்தனம் நடத்துகிறார்கள்.

தர்ஷன் வேலைக்கு போன பின்பு அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யமாக சில சம்பவங்கள் நடைபெறுவதை உணர்கிறார் அர்ஷா. ஆனால் தர்ஷன் இதை முதலில் நம்ப இருக்கிறார். ஆனால், அதன் பிறகு தர்ஷனுக்கும் அந்த அனுபவம் கிடைத்தவுடன் “இந்த வீட்டில் ஏதோ ஒன்று இருக்கிறது” என்று தம்பதிகள் இருவருமே உணர்ந்து அது என்ன என்பதை தேடுகிறார்கள்.

அதே வீட்டில் 10 வருடங்களுக்கு முன்பாக அங்கே குடியிருந்த காளி வெங்கட், அவருடைய மனைவி வினோதினி, இவர்களின் மகனான சிறுவன் ஹென்றிக் மூவரும் வசித்து வருவதை முதலில் நம்ப மறுக்கிறார்கள் தம்பதியினர் இருவரும்.

ஆனால் சுவற்றில் எழுதி கேட்கும் கேள்விகளுக்கு காளி வெங்கட்டும் அவரது மனைவியும் அதே சுவற்றில் பதில் எழுதி காண்பிக்க அந்த வீட்டில் நம்முடன் இன்னொரு குடும்பமும் இருக்கிறது என்பதை நம்புகிறார்கள் தர்ஷனும், அர்ஷாவும்.

அந்த பேய் தம்பதிகளாலும் வீட்டுக்குள் நிறைய குளறுபடிகளும், கலாட்டாக்களும் நடக்க அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைக்கும் தர்ஷன் அவர்களை வெளியேறச் சொல்கிறார். ஆனால், அவர்களோ “இது எங்க வீடு நீங்கதான் வெளியே போகணும்ட என்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு குடும்பத்தினரிடம் இதற்கு மேல் எப்படி பேசுவது என்பதை தெரியாமல் முழிக்கும் தர்ஷன் இவர்களுடைய பூர்வாசிரமத்தை தேடத் துவங்குகிறார் அந்தத் தேடுதல் வேட்டைதான் இத்திரைப்படம்.

அறிமுக நடிகரான தர்ஷன் தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் அவருக்கு இன்னமும் பயிற்சி தேவை போலத் தோன்றுகிறது. அதே சமயம் கோபம், இயலாமை, ஆத்திரம், படபடப்பு போன்ற பல்வேறு நவரசங்களையும் நடிப்பில் காண்பித்து ஓகே மார்க் வாங்கியிருக்கிறார் தர்ஷன். பாராட்டுக்கள்.

இன்னொரு பக்கம் நாயகி அர்ஷா சாந்தினி பைஜூவுக்கு இதுதான் முதல் தமிழ் படம். மலையாளத்தில் பல படங்களில் ஒரு நடித்திருந்தாலும் அந்த நடிப்பு அனுபவத்தை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய ஸ்கோர் செய்து இருக்கிறார்.

அமானுஷ்யத்தை சந்திக்கும் நிகழ்ச்சியில் இருந்து இறுதிவரையிலும் அவருடைய படபடப்பான நடிப்புதான் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவி இருக்கிறது.

தர்ஷன் வீட்டு வாசலில் வந்து கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டு “நாம இன்னிக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று அசால்ட்டாக கேட்கும் நிமிடத்தில் இருந்து அர்ஷாவை நமக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

காளி வெங்கட் தம்பதிகளின் ரகளை ஆரம்பமானவுடன் அவர்களுக்கு இணையாகவே நாமும் அவர்களுடன் அட்ஜஸ்ட் செய்து இருந்து கொள்ளலாம் என்று கணவரிடம் சொல்லிவிட்டு அது போலவே அவர்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்போது சராசரியான ஒரு இந்திய பெண்ணின் மன நிலையை காட்டுகிறார் அர்ஷா.

தன்னை நம்பாத தர்ஷனிடம் எப்படி புரிய வைப்பது என்ற குழப்பத்திலும் திரும்பத் திரும்ப பேய் தம்பதிகளின் அட்ராசிட்டியை அவர் எதிர்கொள்ளும் பொழுதும் நமக்குள் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அர்ஷா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என்பதற்கு இந்தப் படத்தின் கவன ஈர்ப்பும், வெற்றியும் நிச்சயம் உதவி செய்யும்.

குணச்சித்திர வேடத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கருக்கு பின்பு அசத்தலான நடிகராக வலம் வருகிறார் காளி வெங்கட். இந்தப் படத்திலும் தன்னுடைய மகன் மீது அளவற்ற பாசத்தை வைத்திருக்கும் ஒரு அப்பாவாக நடித்திருக்கும் காளி வெங்கட் தன்னுடைய நடிப்பினாலேயே தன்னுடைய பேய் குடும்பத்தை ரசிகர்களிடம் நம்ப வைத்து இருக்கிறார்.

வயதான கெட்டப்பில் வரும் காளி வெங்கட்டும் தன்னுடைய கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார். சமரசம் செய்து வைக்க வரும் காட்சியில் அவரையும் நமக்கு பிடித்துப் போகிறது. அந்த இடத்தில் இயக்கம் மிகச் சிறப்பு என்று சொல்லலாம்.

காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் வினோதினி டாப் கியரில் பறக்கிறார். முதல் சில காட்சிகளில் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்று அடித்துப் பேசும் அவர் போகப்போக தங்களுடைய ஆன்மா இறந்து போய் உடல் மட்டுமே இங்கு தெரிகிறது என்பதை கொஞ்சம் உணர்ந்து பேசும் காட்சிகளில் நடிப்பில் ஓகே என்று சொல்ல வைத்திருக்கிறார்.

இறுதிக் காட்சியில் மகனை தேடியலையும் பொழுது அவரும் காளி வெங்கட்டும் சேர்ந்து செய்யும் அந்த டென்ஷன்தான் இந்தப் படத்தின் உண்மையான ஆன்மா. அதை மிக அழகாக செய்து இருக்கிறார்கள் இருவரும். இதனாலேயே இந்தப் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடித்து போகிறது.

சிறுவன் ஹென்றிக் தன்னுடைய துடிப்பான பேச்சினாலும், சுறுசுறு நடவடிக்கைகளாலும் நம்மைக் கவர்கிறான். அவனுடைய கேரக்டரும் மிக அழகு.

அர்ஷாவின் அப்பாவாக ஒரு காட்சியில் நடித்திருக்கும் கவிதா பாரதி தன்னுடைய கண்ணீர் குரலாலும் தேர்ந்த நடிப்பாலும் தன் பெயரைப் பதிவு செய்திருக்கிறார்.

தீனா, அப்துல் லீ இருவரின் நடிப்பும் கேரக்டரகுக்கு ஏற்றவாறு இருக்கிறது. இதில் அப்துல் லீ பேசும் பல வசனங்கள் அதிகப்படியான ஆங்கிலத்தில் இருப்பதாலும் ஸ்பீடாகவும் பேசுவதாலும் அவர் சொல்ல வந்த அந்த அறிவியல், அமானுஷ்யம் இரண்டுக்குமான வித்தியாசங்களும், விளக்கங்களும், உண்மை நிகழ்வுகளும் சாதாரண ரசிகனின் காதுகளை கேட்காமல் போய் படத்தின் முடிவு பலருக்கும் புரியாமல் போய்விட்டது.

எம்.எஸ்.சதீஷின் ஒலிப்பதிவு முதல் கட்சியிலிருந்து இறுதி வரையில் ஒன்று போலவே நமக்கு தெரிகிறது .அந்த ஒரே ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் இருப்பதை காட்டுவதற்காக அடிக்கடி காட்டுகின்ற அந்த சிங்கிள் ஃப்ரேமில் இரண்டு குடும்பங்கள் கொஞ்சம் வித்தியாசமாக நம்மை கவர்கிறது. வீட்டுக்குள் நடக்கும் அதிரடி கலாட்டாக்களை படமாக்கி இருக்கும்விதமே பேய் பயமே இல்லாமல் நம்மை சிரிக்க வைத்திருக்கிறது.

ராஜேஷ் முருகேசனின் இசையில் அக்கலு பகலு என்ற பாடல் அருமையாக திரும்பத் திரும்ப கேட்க வைத்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறது அதேபோல் பின்னணி இசையும் படத்திற்கு தேவையான அமானுஷ்யத்தைத் தூண்டும் வகையிலும், சில இடங்களில் சமரசம் செய்து கொண்ட குடும்பங்களின் மகிழ்ச்சியை காட்டுகின்ற விதமாகவும் அமைத்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர்.

நிஷார் ஷரப்பின் படத்தொகுப்பில் பேய் குடும்பம், நிஜக் குடும்பம் இரண்டையும் உடனுக்குடன் காட்டி இருவரும் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடும் பொழுது நிஜமாகவே இரண்டு குடும்பத்தினர் அடித்துக் கொள்வதுபோல் சண்டையிட்டுக் கொள்வது போல மாற்றி அமைத்திருக்கிறார்.

சுவரில் எழுதுகின்ற அந்த காட்சிகளை படமாக்கியவிதத்திலும் சுவரில் எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே அதை படிக்கின்றவர்களின் முகபாவனையில் நடிப்பையும் காண்பித்து அந்த இடத்தில் ஒரு பரபரப்பையும், எமோஷனலையும் சேர்த்து கொடுத்து இருக்கிறார் படத்தொகுப்பாளர்.

தர்ஷன் – அர்ஷா காதல், அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு, எதிர்ப்பை மீறி திருமணம், அதற்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகள், இயல்பான குடும்ப ஓட்டம், இதன் பின்பு தலையிடும் அமானுஷ்யம், அந்த அமானுஷ்யத்தால் ஏற்படும் பயம், பதட்டம், குடும்பத்தில் உரசல், பிரிவு, விரிசல் இது அத்தனையும் கடந்த பின்புதான் இந்த படத்தின் மையக் கதையே துவங்குகிறது.

காளி வெங்கட் வினோதினி குடும்பத்தினர் தெரிந்த பின்புதான் இந்தப் படத்தில் ஒரு சுவாரசியமே ஆரம்பிக்கிறது. அந்த சுவாரசியத்தை போகப் போகப் பெரிதாக்கி கொண்டே போய் இடைவேளைக்கு பின்பு உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார் திரைக்கதை ஆசிரியரான இயக்குநர்.

இந்தப் படத்தில் அமானுஷ்யம் என்பதையும் கடந்து அதை அறிவியல் பூர்வமாகவும் இயக்குநர் முன் வைத்திருக்கிறார். ஆனால் அதை சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக சொல்லி இருக்க வேண்டும். அதைச் சொல்லாமல் பாதி ஆங்கிலத்திலும், மீதியைக் காட்சி அமைப்பிலுமாக காட்டியதால் படம் முடிந்த பின்பு என்ன முடிவு? யார் அந்த உண்மையான குடும்பத்தினர்..? அழைத்து வரப்பட்ட காளி வெங்கட் யார்?.. எப்படி இவர்களுக்கு இடையிலான கனெக்சன் தெரிந்தது..? என்கின்ற குழப்பம் இன்னமும் நீடிக்கிறது. இவற்றைத் தெளிவாக தமிழில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இரண்டு குடும்பங்களினால் ஏற்படுகின்ற பிரச்சனைகளை காமெடியாகவும் மிகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். டாய்லெட்டில் ஒரு உக்காந்திருக்கும்போது ஒருவர் குளிக்க உள்ளே வருவதும். கதவு திறந்து இருக்கும்போது திடீரென்று ஒருவர் உள்ளே குளித்துக் கொண்டிருப்பதும், பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது சேர், டேபிள்களையெல்லாம் இடம் மாற்றுவதும், ஃபேன் ரிப்பேர் சரி செய்யும் போது கரண்டை ஆன் செய்து விடுவதுமாக இந்த உண்மையான சில நிகழ்வுகளின் மூலமாக இரண்டு குடும்பங்கள் அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை திரைக்கதையில் அழகாகக் காட்டி இருக்கிறார் இயக்குநர்.

எப்படி இருந்தாலும் ஒரு அழகான புதுமையான பேய் கதையை மிக சுவாரசியமான திரைக்கதையினால் நமக்கு கொடுத்து அந்த வீட்டுக்குள் நம்மையும் ஒருவராக அழைத்துச் சென்று அலையவிட்டு அந்த சந்தோஷத்தில் நம்மையும் திளைக்க வைத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குநர்.

இந்தப் படக் குழுவினருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தவறவிடக் கூடாத திரைப்படம்..! அவசியம் பாருங்கள்!

RATING : 4 / 5

Our Score