‘இந்தியன்-2’ படத்தின் பிரச்சினை தொடர்பான வழக்கில் சமரசப் பேச்சு தொடர்வதால் அதில் தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.
‘இந்தியன்-2’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் இயக்குநர் ஷங்கர் வேறு படத்தை இயக்கப் போக வேண்டும் என்று சொல்லி லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி பானுமதி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை வந்திருந்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனுடன் இயக்குநர் ஷங்கர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ‘இந்தியன்-2’ படத்தை உடனடியாக முடித்துத் தர ஷங்கர் சம்மதித்திருக்கிறார். இன்னும் வேண்டிய பட்ஜெட் எவ்வளவு.. நடிகர், நடிகைகளின் தேதிகள் இதையெல்லாம் பேசி முடித்துக் கொள்வோம் என்று இருவருமே மனம் விட்டுப் பேசி ஒத்துக் கொண்டார்களாம்.
இதையடுத்து இந்த வழக்கு இன்றைக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது லைகா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல், “இந்த ‘இந்தியன்-2’ பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும், இயக்குநர் சங்கரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காண முயற்சி எடுத்து வருவதாகவும், அதற்கு இன்னும் 1 மாத கால அவகாசம் தேவை..” என்றும் வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட அமர்வு நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.