full screen background image

எளிய பூஜையுடன் இன்று துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம்..!

எளிய பூஜையுடன் இன்று துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம்..!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இத்திரைப்படம் வரும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான ‘SK-14’ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ என்னும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.

இந்த ‘ஹீரோ’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத் தொகுப்பை கையாள்கிறார்.

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் புதிய படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார்.

இந்தப் படம் இன்று காலை சென்னையில்  ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் கூறும்போது, “எங்களது K.J.R. ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு தயாரிப்பாளராக, ஒரு புகழ் பெற்ற குழுவுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.

வணிக ரீதியிலான அம்சங்களை கொண்டு மற்றும் அதே நேரத்தில் வித்தியாசமான கதையம்சம் உள்ள புது முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த இரண்டு தளங்களிலும் மிகச் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

வணிக ரீதியிலான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்டுகளுக்கு அவர் தரும் தாராளமான முக்கியத்துவம்தான் அவரை ஒரு நட்சத்திரமாக நிலை நாட்டியிருக்கிறது.

இந்த ‘ஹீரோ’ திரைப்படமும் வணிகரீதியான அம்சங்கள் கலந்த ஒரு படம்தான். அதன் கதையம்சங்கள் ரசிகர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் உடன் இணைந்து பணிபுரிவது என் கனவு. அவருடன் பணிபுரியும் அனுபவத்தை நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவனா போன்ற இளமையான, திறமையான நடிகைகள் நடிப்பது படத்திற்கு கூடுதல் மைலேஜ் ஆக இருக்கும். 

படத்தின் இயக்குநரான பி.எஸ்.மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குநராக தனது ‘இரும்புத் திரை’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமாக இருக்கும் என நினைத்தேன்.

ஆனால், முற்றிலும் வேறுபட்ட மற்றும் புதிய கதையை சொல்லி என்னை அசத்தினார். அவரது முந்தைய திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு சாதாரண பார்வையாளனாக பல இடங்களில் புத்துணர்ச்சியையும், கதையோடு ஒன்ற வைக்கும் விஷயங்களையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது…” என்றார்.

Our Score