பாண்டிராஜ் இயக்கத்தில்-சூர்யா தயாரிப்பில் ‘ஹைக்கூ’ திரைப்படம்..!

பாண்டிராஜ் இயக்கத்தில்-சூர்யா தயாரிப்பில் ‘ஹைக்கூ’ திரைப்படம்..!

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது முதல் தயாரிப்பைத் துவக்கியிருக்கிறது.

இந்த முதல் படத்தின் பெயர் ‘ஹைக்கூ’. சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இந்தப் பெயர் தமிழ்நாட்டில் பிரபலமானது. ‘ஹைக்கூ கவிதைகள்’ என்கிற தலைப்பில் ஜப்பானில் இருந்து இறக்குமதியான இந்த புதிய கவிதை தொடர்பான வார்த்தை, அதன் பின்பு கவிதாவுலகில் மிகப் பிரபமாகிவிட்டது.

எழுத்தாளர் சுஜாதாதான் இந்த ஹைக்கூவை தமிழ்நாட்டில் மிக மிக பிரபலப்படுத்தினார். மூன்றே வரிகளில் ஒரு காவியத்தை சொல்ல வேண்டும். அதுவும் கவிநயமாக.. முதல் வரியும், மூன்றாவது வரியும் முரணாக இருக்க வேண்டும் என்கிற விதிமுறையெல்லாம் இதில் உண்டு. இதிலும் தமிழகத்து இளம் கவிகள் தங்களது படைப்புகளை செம்மையாகப் படைத்து ஹைக்கூ கவிதைகளை தமிழகமெங்கும் பரப்பினார்கள்.

இப்போது இதே பெயரிலேயே இந்தப் படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் பாண்டிராஜ். இந்தப் படம் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகிறதாம். ஏற்கெனவே பசங்க, மெரீனா என்ற இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் பாண்டிராஜிற்கு சிறுவர், சிறுமியர் மீது அப்படியென்ன பாசமோ தெரியவில்லை.. இது போன்றே கதையாக்கம் செய்து வருகிறார். 

இந்தப் படத்தில் நடிகை பிந்து மாதவி ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கப் போகிறார். கூடவே சூர்யாவும், அமலாபாலும் கெஸ்ட் ரோலில் வரவிருக்கிறார்களாம். “இந்தப் படம் சில சுட்டிப் பசங்களின் அழகான வாழ்க்கைச் சூழலைச் சொல்லப் போகிறது..” என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

வாழ்த்துகள் பாண்டிராஜ் ஸார்..! 

Our Score