எதார்த்தமான வாழ்க்கை… நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும்.
அந்த வகையில் ‘அங்காடித்தெரு’, ‘அசுரன்’ போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். அதே போல் இப்போது, திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது.
இப்படத்திற்கு ‘குதூகலம்’ என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் (Rat & Cat Pictures) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.சுகின்பாபு தனது முதல் படைப்பாக தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார்.
இவர்களுடன் கவிதாபாரதி, ‘விஜய் டிவி’ புகழ், பியான், சஞ்சீவி, ‘நக்கலைட்’ யூ-ட்யூப் புகழ் அனிஸ், மன்மோகித், ‘மெட்டி’ பிரேமி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் தயாரிப்பாளரான எம்.சுகின்பாபுவும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இசை – பியான் சர்ராவ், ஒளிப்பதிவு – மணி பெருமாள், படத் தொகுப்பு – பிரகாஷ் மப்பு, கலை இயக்கம் – L.கோபி, சண்டை பயிற்சி இயக்கம் – டேஞ்சர் மணி, பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.
இந்த யதார்த்தமான கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் உலகநாதன் சந்திரசேகரன்.
இவர் ‘காக்கி சட்டை’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங்களில் துணை இயக்குநராகவும், ‘கொடி’, ‘பட்டாசு’ போன்ற படங்களில் இணை இயக்குநராகவும் பணி புரிந்துள்ளார்.
ஒரு இளைஞன், தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இதை திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நடக்கும்விதமாக நகைச்சுவையுடன் உருவாக்குகிறார் இயக்குநர்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படவுள்ளது.