full screen background image

குருமூர்த்தி – சினிமா விமர்சனம்

குருமூர்த்தி – சினிமா விமர்சனம்

பிரண்ட்ஸ் டாக்கீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசலபதி, சாய் சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நட்டி நடராஜ் நாயகனாகவும், பூனம் பஜ்வா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ராம்கி, மனோபாலா, ரவி மரியா, மொட்டை’ ராஜேந்திரன். அஸ்மிதா, சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ் ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – தேவராஜ், இசை – சத்யதேவ் உதயசங்கர், பாடல்கள் – மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன், படத் தொகுப்பு – S.N. பாசில், கலை இயக்கம் – தாகூர், நடன இயக்கம் – ராதிகா, சண்டை பயிற்சி இயக்கம் – பயர் கார்த்திக், புகைப்படங்கள் – மதன், பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன், வசனம் – கீர்த்தி வாசன், தயாரிப்பு – சிவசலபதி, சாய் சரவணன், கதை, திரைக்கதை, இயக்கம் – கே.பி.தனசேகர்.

இந்தப் படத்தை பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

ஜெய் பீம்’ படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான ‘குருமூர்த்தி’ என்ற பெயர், இந்தப் படத்தின் நாயகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால் காலப் பொருத்தம் கருதி வைக்கப்பட்டுள்ளதாம்.

கடமை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவரது பணியில் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு அது அவரது குடும்பத்திலும் தொற்றுகிறது. இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார்…? அந்தச் சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றாரா? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நீலகிரியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நட்டி(எ)நட்ராஜ், அதே பகுதியில் பங்களா வீடு ஒன்று வாங்குவதற்காக தான் பதுக்கி வைத்திருந்த 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் காரில் எடுத்து செல்கிறார் தொழிலதிபர் ராம்கி. வழியில் காரிலுள்ள பணப் பெட்டி திருடு போக, அதை கண்டு பிடிக்க களமிறங்குகிறது நட்டி போலீஸ் தலைமையிலான குழு.

நண்பர்கள் மூன்று பேர் அந்த பெட்டியை திருடி செல்ல அவர்களிடமிருந்து வேறொருவர் திருடி செல்கிறார். அதன் பின் அவரிடம் இருந்து மற்றொருவர் என கிட்டத்தட்ட 6 பேரிடம் பணப் பெட்டி கை மாறி, மாறி பயணிக்கிறது.

பல பேரிடம் கை மாறி செல்லும் அப்பெட்டியை நட்டி கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக் கதை.

நாயகன் நட்டி எப்போதும்போலவே நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கேற்ற மிடுக்கும், கம்பீரத்தையும் காட்டியிருக்கிறார். ஆனாலும் வரிசையாக தொடர்ந்து அவரது ஒரே மாதிரியான நடிப்பைப் பார்த்து நமக்கே சற்று சலிப்பாகிறது. கொஞ்சம் மாற்றுங்கள் ஸாரே..!

வழக்கம் போல் ஓவர் ஆக்டிங்கை ஓவராகவே கொடுத்து சற்று கடுப்பேத்திருயிருக்கிறார்கள் ரவிமரியாவும் மனோபாலாவும். அதிலும் யானையின் லத்தியை வைத்து பேசும் பேச்செல்லாம் உவ்வே ரகம்..!

நட்டியின் மனைவியாக பூனம் பஜ்வா. நடிப்புக்கென பெரிதான காட்சிகள் இல்லையென்றாலும் நடித்திருப்பவர்களில் இவர்தான் நம்பர் ஒன். மேலும் படத்தில் மேலும் 3 கவர்ச்சி கன்னிகள் இருந்தும் நாயகியான இவர் காட்டும் கவர்ச்சிதான் உச்சம்..!

பணத்தை கைப்பற்ற நினைக்கும் சஞ்சனா சிங், அஸ்மிதா இருவரையும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு நின்றுவிடாமல் நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அஸ்மிதாகூட ஓகே என்று சொல்லலாம். ஆனால் அந்த சஞ்சனா சிங்கின் நடிப்பை என்னவென்று சொல்வது..?

மொட்டை ராஜேந்திரனின் காமெடி இன்னொரு பக்கம் வெடிக்காமல் போன சீனி வெடியாக புஸ்ஸாகிப் போயிருக்கிறது. எரிச்சல்தான் வருகிறது. போதாக்குறைக்கு மாமியாரும், மருமகனும் பேசுற பேச்சை காது கொடுத்துக் கேட்க முடியலை..! முருகா.. முருகா..!

ராம்கி வருகிறார். இருக்கிறார். பேசியிருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொன்னால் அவரே நம்ப மாட்டாராக்கும்..!

மொத்தப் படப்பிடிப்பும் மலைப் பிரதேசத்தில் நடத்தியும் ஒளிப்பதிவு மந்தமாக இருந்தது ஏனோ..? பின்னணி இசை ஓகே ரகம். நிறைய காட்சிகளை க்ரீன் மேட்’ பயன்படுத்தி படமாக்கியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த 2022-லும் இப்படி செய்தால் எப்படி ஸாரே..?

இறுதியில் மற்றவரின் பணத்திற்கு ஆசைப்படக் கூடாது என்ற அற நெறியை இப்படம் போதித்தாலும், அதைச் சொல்லும் திரைக்கதை, நடிப்பு, இயக்கம் மூன்றுமே பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கிறது.

குரு மூர்த்தி – கீர்த்தியாகவில்லை..!

RATING : 2.5 / 5

Our Score