‘கில்டு’ எனப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கான சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் சங்கம் கலைக்கப்பட இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரவி வரும் வேளையில் இது பற்றி விளக்கம் அளிக்க நேற்று ‘கில்டு’ அமைப்பின் தலைவரான ஜாக்குவார் தங்கம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் சங்கம் பற்றி தற்போது கிளம்பியிருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார் ஜாக்குவார் தங்கம்.
இதைத் தொடர்ந்து ‘கில்டு’ அமைப்பு தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அறிக்கை இங்கே :
“சில நபர்கள் நம்ம சங்கத்தில் கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாள் உறுப்பினராக இருந்து, தங்களுடைய சந்தா தொகையை கட்ட தவறியதால், நமது சங்கத்தில் இருந்து சங்க விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அடிப்படை உறுப்பினர் என்கிற தகுதியை இழந்து இருக்கிறார்கள்.
இப்படி நமது சங்கத்தில் உறுப்பினரே இல்லாத நிலையில் இவர்கள் வாட்ஸ் அப்பில் நமது உறுப்பினர்களை இணைத்து, ஒரு குரூப்பை ஆரம்பித்து, வாட்ஸ் அப் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் மூலமாக நமது சங்கத்தைப் பற்றி நமது உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சில தவறான பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
அது என்னவென்றால் ‘சங்க பதிவு ரத்து ஆகிவிட்டது, அதனால் நமது சங்கத்தில் இனி யாரும் பேனர் பதிவு செய்ய வேண்டாம். சென்சார் பண்ண வேண்டாம், டைட்டில் பதிவு செய்ய வேண்டாம், நமது தலைப்புகளை மற்ற சங்கங்கள் எடுத்துக் கொள்வார்கள்…’ – இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
மேலும் பதிவு அலுவலகத்துக்கு இவர்களே நேரடியாக சென்று நமது சங்கத்தை பதிவிலிருந்து நீக்கி விடுமாறு கூறி வருகின்றனர்.
உண்மை நிலை என்னவென்றால் நமது சங்க பதிவு, கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காததனால் ரத்து ஆக போகிறது என பதிவுத் துறையில் இருந்து நமக்கு கடிதம் வந்தது.
ஏன் இப்படி ஒரு கடிதம் நமக்கு வந்தது என்றால், நாம் கடந்த சில வருடங்களாக நம்முடைய சங்க வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்பதுதான்.
சில உறுப்பினர்கள் சொல்வதுபோல் ஒரு வருடம், இரண்டு வருடம், ஆடிட்டிங் செய்த வரவு செலவை காட்டியிருந்தால் பதிவு ரத்து செய்திருக்க மாட்டார்கள் என்று தவறாக புரிந்து கொண்டு சொல்கிறார்கள்.
வரவு செலவு கணக்கை நமது சங்க பொதுக் குழுவில் வைத்து ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அதை பதிவு துறை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன் இருந்த நிர்வாகிகள், நமது சங்க பணம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதை நான் கண்டுபிடித்து கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறேன். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால பொதுக் குழுவைக் கூட்ட இயலவில்லை.
அதேபோல தற்போது தேர்தல் முடிந்து நிர்வாகத்துக்கு வந்தவர்களில் சிலர் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறு படத்திற்கான மானிய தொகையை பெற்றுத் தருவதாக கூறி நமது உறுப்பினர்களை ஏமாற்றி பணம் வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் சில நிர்வாகிகள் கடந்த நான்கு வருடங்கள் சந்தா கட்டாததனால் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து இருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் 06.08.2018 அன்று நமது சங்க பொதுக்குழு நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி, பிரசாத் லேபில் பொதுக்குழு நடத்த எல்லா ஏற்பாடும் செய்திருந்த சூழ்நிலையில், எதிர் தரப்பினர் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே ஆர்டர் வாங்கி, பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்துவிட்டனர்.
இப்படியான ஒரு சூழலில் தற்சமயம் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் மூலமாக நீதியரசர் திரு.ராஜசூர்யா அவர்களை நியமித்து அவர் மூலமாக mediation நடைபெற்று வருகிறது.
விரைவில் பொதுக்குழு கூடி வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு துறைக்கு அனுப்பி வைத்து விடுவோம், என நானும் மற்ற சில நிர்வாகிகளும் நேரடியாக பதிவு அலுவலர் சந்தித்து, அவரிடம் விளக்கம் சொல்லி, அந்த விளக்க கடிதத்தில் சீல் (பதிவுத் துறையின் அலுவலக முத்திரை) போட்டு வாங்கி வந்திருக்கிறோம்.
அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு ‘உங்களுடைய பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதில் வரவு செலவுக் கணக்கைக் காட்டி ஒப்புதல் வாங்கி பின்பு வந்து எங்களிடம் அதனைத் தாக்கல் செய்யுங்கள், அதுவரைக்கும் உங்கள் சங்க பதிவு ரத்தாகாது, நாங்கள் காத்திருக்கிறோம்..’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதுதான் நடந்த உண்மை இதைதான்.
நம்ம சங்கத்தின் உள்ளே வர முடியாத சில கறுப்பு ஆடுகள், ஆதங்கத்தில் இப்படி தவறான செய்திகளை பரப்பி நமது உறுப்பினர்களை திசை திருப்பி, பயமுறுத்தி வருகிறார்கள். இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். இவர்களை சட்டப்படி நாம் சந்திக்க இருக்கிறோம்.
எனவே நமது சங்க உண்மையான உறுப்பினர்களிடம் வரும் பொதுக்குழு வரை காத்திருக்க வேண்டுகிறேன். விரைவில் பொதுக்குழு கூடி, வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நமது சங்க பதிவு சரி செய்யப்படும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன்.”
– இவ்வாறு தனது அறிக்கையில் ‘கில்டு’ தலைவர் ஜாக்குவார் தங்கம் கூறியிருக்கிறார்.