கில்டு(GUILD) எனப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தச் சங்கத்தில் மொத்தம் 1560 உறுப்பினர்கள் உள்ளனர். சில ஆண்டுகளாக சண்டை இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்குவார் தங்கத்தின் தலைமையில் இச்சங்கம் செயல்பட்டு வந்தது. வழக்கம்போல இந்தச் சங்கத்திலும் ஊழல், முறைகேடு என்று புகார் எழும்பி அது சென்னை உயர்நீதிமன்றம்வரையிலும் சென்றது.
இதனால் சங்கத்தில் தேர்தலை நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.என்.பாஷாவை சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையராக அறிவித்தது.
இதையடுத்து தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த மே 7-ம் தேதி அன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ஜூன் 10-ம் தேதியன்று தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
சினிமா, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவானவராக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சினிமா துறையில் இருந்து 2 துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தொலைக்காட்சி துறையில் இருந்து ஒரு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதேபோல் இரு துறைகளுக்கும் பொதுவானவராக பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சினிமா துறையில் இருந்து இரண்டு செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தொலைக்காட்சி துறையில் இருந்து ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சினிமா துறையில் இருந்து 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தொலைக்காட்சி துறையில் இருந்து 7 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் வரும் மே 16-ம் தேதி முதல் வழங்கப்படும்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை மே 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும் தாக்கல் செய்யலாம்.
28-ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் கட்டணம் 2000 ரூபாய்.
செயற்குழு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் கட்டணம் 1000 ரூபாய்.
தேர்தல் ஜூன் 10-ம் தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெறும்.
அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
வாக்குப் பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.