படத்தோட தலைப்பைத்தான் இன்னமும் முடிவு பண்ணலைன்னு நினைச்சா, “படத்தோட கிளைமாக்ஸையே இன்னமும் முடிவு செய்யலை…” என்கிறார் ‘தல’ அஜீத்தின் 55-வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்.
தமிழ் சினிமாவில் பெரிய படங்களின் விளம்பர பார்முலாபடி முதல்கட்ட பிரஸ்மீட்டாக ‘ஆனந்தவிகடன்’, ‘குமுதம்’ பத்திரிகைகளுக்கு மட்டுமே அந்தந்த படங்கள் பற்றிய ஸ்டில்களும், பேட்டிகளும் தரப்படும்.. இதுதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் எழுதப்படாத விதிமுறை.
இந்த பார்முலாபடி இன்றைய ‘ஆனந்தவிகடனு’க்கு பேட்டியளித்திருக்கும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்தப் படத்தில் சில ஸ்டில்களை ரிலீஸ் செய்திருப்பதோடு படம் பற்றிய சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் சொல்லியிருக்கும் ஒரு விஷயம்தான் இந்தப் படத்தின் டைட்டில் போலவே, கிளைமாக்ஸும் இன்னமும் முடிவாகவில்லை என்பது..!
“என் ஸ்கிரிப்ட் வொர்க் கொஞ்சம் வித்தியாசமானது. ‘மின்னலே’ தொடங்கி, ‘நீதானே என் பொன்வசந்தம்’வரையிலும் இப்படித்தான்.. ஸ்க்ரிப்ட் கிட்டத்தட்ட முக்கால்வாசியை முடிச்சிருவேன். ஆனால் கிளைமாக்ஸை மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்க மாட்டேன்.
ஷூட்டிங் போயிருவோம். ஆனா, கிளைமாக்ஸ் நினைப்பு மனசுல ஓடிட்டே இருக்கும். ஷூட்டிங் போகப் போக ஆர்ட்டிஸ்ட்டுகளின் ஈடுபாடு, காட்சிகளின் மேக்கிங்… இதெல்லாம் சேர்ந்து சட்டுன்னு ஒரு கிளைமாக்ஸை மனசுல ஃபிக்ஸ் பண்ணும். அதை கடைசியா ஷூட் பண்ணுவேன். ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’னு என் எல்லா படங்களுக்கும் இந்த ஃபார்முலாதான்.
அஜித் சாருக்கும் இந்தப் பட கிளைமாக்ஸ் இன்னும் தெரியாது. அது இல்லாமல்தான் அவருக்கு கதை சொன்னேன். ‘முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதி அரை மணி நேரமும் பிரமாதம். ஷூட்டிங் போயிடலாம்’னு படத்துக்குள்ள வந்துட்டார். ‘ஜி… இன்னும் நீங்க கிளைமாக்ஸை சொல்லலையே. அவ்வளவு ரகசியமா வெச்சிருக்கீங்களா..?’ன்னு இப்பக்கூட அஜித் சார் கேட்டார். சீக்கிரம் அவர்கிட்ட கிளைமாக்ஸை சொல்லணும்!” – என்கிறார் கௌதம்.
சில டிரெண்ட்செட் இயக்குநர்களின் வொர்க்கிங் ஸ்டைலே வித்தியாசமாகத்தான் இருக்கிறது..!
கிளைமாக்ஸ் எங்களுக்கு வேணாம்.. டைட்டிலை மட்டுமாச்சும் சீக்கிரம் சொல்லுங்க டைரக்டர் ஸார்.. ‘தல 55 -வது படம்’ என்று எழுதி, எழுதி போரடிச்சுப் போச்சு..!