full screen background image

‘நட்சத்திர மழை’ திரைப்படத்தை கவர்னர் ரோசையா துவக்கி வைத்தார்..!

‘நட்சத்திர மழை’ திரைப்படத்தை கவர்னர் ரோசையா துவக்கி வைத்தார்..!

‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்துள்ள நாஞ்சில்  பி.சி.அன்பழகன், நான்காவதாக தயாரித்து, இயக்கவுள்ள படம் ‘நட்சத்திர மழை’.

உடல் உறுப்புகள் தானம் பற்றி ‘காமராசு’ படத்தில் சொன்ன இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், ‘அய்யா வழி’ படத்தில் ஆன்மீகத்தைச் சென்னார். விரைவில் வெளியாக உள்ள ‘நதிகள் நனைவதில்லை’’ படத்தில் காதலைப் பற்றியும், பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி அரவணைக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். தற்போது தனது நான்காவது படமான ‘நட்சத்திர மழை’யில், “குணங்களை வெறுத்தாலும் மனிதனை – மனிதன் நேசிக்க வேண்டும்…” என்கிற கருத்துக்கு திரை வடிவம் கொடுத்திருக்கிறார்.

வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில், நாஞ்சில் பி.சி.அன்பழகன், இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், இப்படத்திற்கான ஏழு பாடல்களையும் அவரே எழுதுகிறார். ஆண்டனி இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா நேற்று காலை சென்னை தியாகராயா நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், பின்னணி பாடகர் கே.ஜேயேசுதாஸ், பின்னணி பாடகி வாணி ஜெயராம், சமூக சேவகர் சிவகுமார், நடிகர்கள் குண்டு கல்யாணம், அனுமோகன், நடிகை ரிஷா, தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஆளுனர் ரோசையா, கேமராவை முடுக்கிவிட, தயாரிப்பாளர் கேயார் கிளாப் அடிக்க, நடிகை ரிஷாவின் நடிப்பில் படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

இயக்குநரும், தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசும்போது, “மருத்துவத்தை சேவையாக்கி, சமூக அக்கறையோடு வாழ்வை கடந்து செல்லும் இளைஞனை, காதல் மழையில் நனைந்த மயிலிறகால் வருடி கொடுக்கும், உணர்வுகளுக்கு உருவங்கள் தரும் படைப்புதான் இந்த ‘நட்சத்திர மழை’. குணங்களை வெறுத்தாலும் மனிதனை – மனிதன் நேசிக்க வேண்டும் என்கிற கருத்து குவியல்களின் திரைச் சிற்பமே  ‘நட்சத்திர மழை’. புது வருடத்தில், கடவுளின் கைரேகையான கன்னியாகுமரியில் ‘நட்சத்திர மழை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள் கொண்ட இந்த ‘நட்சத்திர மழை’யின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், “இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், நல்ல பன்பு கொண்டவர். அவரிடம் பேசினாலே போதும், அனைவரையும் கவர்ந்துவிடுவார். அவருடைய நல்ல குணங்களுக்காகவும், பண்புக்காகவும்தான் இந்த விழாவில் கலந்து கொண்டேன், ‘நட்சத்திர மழை’ படம் பெரிய அளவில் வெற்றி அடைய எனது வாழ்துக்கள்…” என்றார்.

பின்னணி பாடகி வாணி ஜெயராம் பேசுகையில், “நாஞ்சில் பி.சி.அன்பழகன், எனக்கு சகோதரரைப் போன்றவர். இசை ஞானம் உள்ளவர். அவருக்கு இந்த படத்தின் மூலம் கடவுள் மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும்…” என்றார்.

ஆளுனர் ரோசைய்யா பேசுகையில், “பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படங்களின் மூலம் தொடர்ந்து சொல்லி வரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு எனது பாராட்டுக்கள். இந்த நாளில் தொடங்கியுள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகனின், இந்த ‘நட்சத்திர மழை’ படம் பெரிய வெற்றியடைய வேண்டும்…” என்று வாழ்த்தினார்.

Our Score