full screen background image

’49-ஓ’ திரைப்பட விழாவில் கலக்கியெடுத்த கவுண்டமணி..!

’49-ஓ’ திரைப்பட விழாவில் கலக்கியெடுத்த கவுண்டமணி..!

சமீப காலத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் இப்படியொரு கைதட்டலும், விசில் சப்தமும் கேட்டதே இல்லை. 2 மணி நேரம் அரங்கம் சிரிப்பலையில் தொடர்ந்து குலுங்கிக் கொண்டிருந்த்து..!

நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ’49-ஓ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்த உற்சாகமும், சந்தோஷமும்.

IMG_5234

கவுண்டமணியை வாழ்த்திப் பேச அவரது ஆரூயிர் நண்பரான சத்யராஜும், அவரது ஆரூயிர் சீடரான சிவகார்த்திகேயனும் வந்திருந்தனர். மற்றபடி வழக்கம்போல தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பேசிய அனைவருமே கவுண்டமணியைப் பாராட்டி பேசுவதையே குறிக்கோளாக கொண்டு பேச சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது..

அனைவருக்கும் கடைசியாக பேசிய கவுண்டமணி கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தாலும் படத்தின் விளம்பரத்திற்காக கடைசி கட்டத்தில் பேசிய “திஸ் இஸ் பெஸ்ட் மூவி” கமெண்ட்டு பஞ்ச் டயலாக்கு போல் கூட்டத்தினரை ஆர்ப்பரிக்க வைத்தது..!

இனி கவுண்டமணியின் பேச்சு :

“இந்தப் படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்கிட்ட வந்து கதை சொன்னார். ஒரு வருஷமா அலைஞ்சார். நான் ஒரு நாள் அவர்கிட்ட, ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க’ன்னு சொன்னேன்.. ‘ஆறடி தாய் மடித் திட்டம்’ன்னு சொன்னார். அதைக் கேட்டுட்டு நான் ஒத்துக்கிட்டேன்.

IMG_0585

‘தயாரிப்பாளர் யாரு?’ன்னு கேட்டேன். ‘டாக்டர் சிவபாலன்’னு சொன்னார். ‘அவரை அழைச்சிட்டு வாங்க’ன்னேன். அழைச்சிட்டு வந்தார். அவர்கிட்ட ‘உங்களுக்குக் கதை பிடிச்சிருக்கா?’ன்னு கேட்டேன். ‘பிடிச்சிருக்கு’ன்னு சொன்னார். ‘தயாரிப்பீங்களா?’ன்னு கேட்டேன். ‘நிச்சயம் தயாரிப்பேன்’னு சொன்னார். இப்போ எடுத்து முடிச்சிட்டார்.

அவரை ரொம்பப் பாராட்டணும்.  ஏன்னா டப்பாங்குத்து, கும்மாங்குத்துன்னு படம் எடுத்துக்கிட்டிருக்குற இந்த நேரத்துல இப்படியொரு கதையை தேர்வு செய்ததுக்கு.. இளம் இயக்குநர் ஆரோக்கியதாஸ்.. ரொம்ப முற்போக்கான வசனங்களையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிக்கணும்..

மியூஸிக் டைரக்டர் கே.. அவர் பெயர் மாதிரியே கேக்குற மாதிரி மியூஸிக் போட்டிருக்காரு. பாடலாசிரியர் யுகபாரதி இந்த யுகத்துக்கு என்ன எழுதணுமோ அதை எழுதியிருக்காரு. அதை தேனிசா செல்லப்பா பாடியிருக்காரு. கேமிராமேன் கருப்பையா.. பேருதான் கருப்பையா.. ஆனால் படத்தை கலர்புல்லா எடுத்திருக்காரு.

IMG_7328

டான்ஸ் மாஸ்டர் சங்கர்ன்னு ஒருத்தர். எனக்கெல்லாம் ஆடவே வராது. ஆடிட்டிருக்கும்போது பக்கத்துல ஆடுற பொம்பளைங்க மேல விழுந்து கைய, காலை மிதிச்சிருவேன். ‘ஸாரி’ சொல்வேன். ‘பரவாயில்லை’ன்னுவாங்க. ‘நீங்க போய் கொஞ்சம் உக்காருங்க. நான் ஆடிப் பார்த்துக்குறேன்’னுவேன். ‘இல்ல ஸார். வேணாம்’னுவாங்க. ‘இல்லம்மா.. திரும்ப நின்னீங்கன்னா மறுபடியும் காலை மிதிச்சிருவேன்’னு சொல்வேன்.. எப்படியோ என்னைய ஆட வைச்சிருக்காங்க.

அப்புறம் என் கூட நடிச்ச திருமுருகன், மூணாறு ரமேஷ், விசாலினி, வைதேகி எல்லாருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். தயாரிப்பாளர் கவுன்சில்ல இருக்குற மொத்தப் பேருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். ஏன்னா அத்தனை பேருக்கும் பெயர் சொல்லி தேங்க்ஸ் சொல்லணும்னா விடிஞ்சிரும்.

பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. இங்க வந்திருக்கிற எல்லாருக்கும் ஒரே முறைல வணக்கம் சொல்லிக்கிறேன்..!

IMG_7520

எனக்கு முன்னாடி நம்ம சத்யராஜ் ரொம்ப நேரமா பேசி பிச்சி எடுத்துட்டாரு. அப்புறம் சிவகார்த்திகேயனும் நல்லா பேசிட்டாரு. இதுக்கு மேல நான் பேசினா அது எடுபடாது. படத்துல வேண்ணா காமெடி பண்ணிக்கலாம்.  

இந்தப் படத்தோட கதையைப் பத்தி சொல்லணும்னா.. 2 மணி நேர படத்தை யுகபாரதி இரண்டு வரிகளில் சொல்லியிருக்கார். ‘விவசாயம் இல்லைன்னா.. உலகம் ஏதுடா..? உயிர் ஏதுடா..? பல கட்டடங்கள் கட்ட வயல்காட்டை அழிச்சாங்க’ன்னு.! இதுக்கென்ன அர்த்தம்..?

விவசாயமும், விவசாயிகளும் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லைன்னா நாம உயிர் வாழ முடியாது. நாம சாப்பிடுற சாப்பாட்டை யார் தர்றது..? விவசாயிகள் அழியக் கூடாதுன்ற புரட்சிகரமான கதையை எழுதியிருக்காங்க.  ஆனால், அந்த விவசாயிக்கு அந்த நிலம்தான் மானம், புகழ், உயிர், பெயர், புகழ் எல்லாம். அந்த நிலத்தை விட்டுறக் கூடாது. அது கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி.. அதுலதான் அவங்க வாழ்க்கை. அதுலதான் விவசாயம் பண்ணணும்..

ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அடுத்த வருஷம் விளையும். ‘நல்லா விளையலை.. அதுனால நிலத்தை வித்துட்டேன்’னு சொல்லக் கூடாது.. ஒரு வியாபாரி, தன் வியாபாரத்துல நஷ்டமானாலும் அடுத்து வேற வியாபாரத்துல ஈடுபட்டு ஜெயிக்கிறான்ல.. அது மாதிரிதான்.

IMG_0981

அந்த விவசாயிகளைத் தேடி யார், யாரெல்லாம் வர்றாங்க.. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிக்காரங்க. எதுக்கு வர்றாங்க.. துக்கம் விசாரிக்கவா..? இல்ல சந்தோஷம் கொண்டாடவா..? அந்த நிலத்துல கால் ஏக்கரையாவது வாங்கிரலாம்னுதான்..

சில பேர் வித்துர்றாங்க. அந்த இடத்துல கட்ட்டம் கட்டிர்றாங்க. அப்புறம் விளை நிலம் எங்க இருக்கும்..? அப்புறம் எப்படி நாம சாப்பிடுறது..? அப்படியிருக்கக் கூடாது. ‘விவசாயிகள் விவசாயிகளாத்தான் இருக்கணும்’னு சொல்றதுதான் இந்த 49-ஓ திரைப்படம்.

இந்த்த் திரைப்படம் விவசாயிகளைப் பத்தி சொல்ற கதை. நம்மூர் விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல.. எல்லா ஊர் விவசாயிகளைப் பத்தியும் சொல்ற கதை. இந்திய விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல.. அமெரிக்க விவசாயி, இங்கிலாந்து விவசாயி, ஆப்ரிக்க விவசாயியாக இருந்தாலும் சரி.. விவசாயி விவசாயிதான்.

இதுல என்ன சேஞ்சு..? அமெரிக்கால ஜீன்ஸ் பேண்ட் போட்டு விவசாயம் பண்றான். நம்மூர்ல வேட்டி கட்டிட்டு விவசாயம் பண்றான். அதான் சேஞ்ச்.  அது நெல்லு விக்கிறவனா இருந்தாலும் சரி.. கொள்ளு விக்கிறவனா இருந்தாலும் சரி.. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் சரி, ஒரு விவசாயியோட நிலத்தைக் காப்பாத்தணும். அப்பத்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும்.  இதுதான் 49-ஓ திரைப்படம்.

பலதரப்பட்ட மக்கள் சொல்வாங்க.. இது ஏ கிளாஸ் படம்.. இது பிளாஸ் படம்ன்னு.. ஆனா இந்த ‘49-ஓ’ திரைப்படம் A, B, C, D, E, F-ல இருந்து Z-வரைக்குமான அனைவருக்கும் பொதுவான திரைப்படம். இது கிராமத்துக்கும் பிடிக்கும். சிட்டிக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட படம்தான் ‘49-ஓ’. ‘49-ஓ’ மூவி இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.

IMG_6409

அப்புறம் ‘49-ஓ’-ன்னா என்ன..? நோட்டோன்னா என்ன..? நாம யாருக்கு ஓட்டுப் போடணும்..? ஏன் போடணும்..? எதுக்குப் போடணும்..? ஓட்டுப் போடறதால நமக்கு என்ன நன்மை..? இல்ல போடலாமா? வேண்டாமா..? இதுக்கெல்லாம் இந்தப் படத்துல அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கேன். இதுதான் ‘49-ஓ’. ‘49-ஓ’ திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம்..! இது எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். ‘49-ஓ’ படத்தைப் பத்தி மட்டுமே சொல்றேன். திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். நான் மறுக்கா மறுக்கா சொல்றேன். மவுண்ட் ரோடு தர்ஹாவுக்கு வந்தும் சொல்றேன்.. இந்தப் படத்தை தயவு செய்து யாரும் மிஸ் பண்ணிராதீங்க.  நீங்க பேமிலியோட அவசியம் பார்க்கணும்.

ஏன்னா அனைத்து அம்சங்களும் கொண்ட படம் இது. இதுவொரு மினி மீல்ஸ் மாதிரியான படம். ஹோட்டலுக்கு போயி மினி மீல்ஸ் சாப்பிட்டீங்கன்னா புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், அப்பளம், கூட்டு, பொரியல், ஸ்வீட், காரம், பாயாசம்ன்னு இது அத்தனையும் சாப்பிட்டால் என்ன டேஸ்ட் வருமோ.. அது இந்த ‘49-ஓ’ படத்துல இருக்கு.

நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். அதிகமா பேச விரும்பலை. ‘49-ஓ’ திஸ் இஸ் பெஸ்ட் மூவி. எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க.. வந்த எல்லாருக்கும் நன்றி. வணக்கம்..!” என்றார்.

கவுண்டர் பேசி முடித்தபோது அரங்கத்தில் புயல் அடித்து ஓய்ந்ததுபோல இருந்தது..! வயசானாலும் சிங்கம் சிங்கம்தானே..!?

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score