full screen background image

கோலிசோடா-2 – சினிமா விமர்சனம்

கோலிசோடா-2 – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ரப் நோட் நிறுவனத்தின் சார்பில் பாரத் சீனி தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் ஜோஸ், பாரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் – எஸ்.டி.விஜய் மில்டன், தயாரிப்பாளர் – பாரத் சீனி, இசை – அச்சு ராஜாமணி, படத் தொகுப்பு – தீபக், கலை இயக்கம் – ஜனார்த்தனன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – தர், பாடல்கள் – மதன் கார்க்கி, மணி அமுதவன், விவேகா, இசை வெளியீடு – தின்க் மியூஸிக்.

கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

மூன்று கேரக்டர்கள்.. மூன்றுவிதமான தேடல்கள்.. மூலைக்கொன்றான பிரச்சினைகள்.. இந்தப் பிரச்சினைகளின் தீர்வு காண விளையும்போது மூவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இதற்குப் பின் என்னவாகிறது என்பதுதான் படத்தின் மையக் கரு.

‘கோலிசோடா’ படத்தில் சொல்லிய, ‘எளியவர்களை அடித்துப் பிடித்து உதைத்தால் என்றாவது ஒரு நாள் அவர்களும் பதிலுக்குத் தாக்குவார்கள். அது மரண அடியாக இருக்கும்’ என்பதைத்தான் இந்தப் படத்திலும் சொல்லியியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.

பாரத் சீனி, வினோத், எசக்கி பரத் மூவருமே சென்னையில் ஒரே ஏரியாவில்தான் வசிக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லை. இவர்களுக்கு அறிமுகமான ஒரே நபர் அந்தப் பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் முன்னாள் போலீஸ் ஏட்டுவான சமுத்திரக்கனி மட்டுமே..!

பாரத் சீனி சுபிக்சாவை சின்சியராக காதலித்து வருகிறார். இந்தக் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிய வேண்டுமெனில் பாரத் தன்னுடைய அடிதடி அடியாள் வேலையை கைவிட வேண்டும் என்று காதலியும், காதலியின் தாயும் நிபந்தனை விதிக்கிறார்கள்.

இதனால் அடியாள் வேலையை விடுவதாக தன்னுடைய பாஸ் தாதா தில்லையிடம் சொல்கிறார் பாரத் சீனி. ஆனால் தில்லை பாரத்தை விடுவதாக இல்லை. பாரத் எங்கே வேலை கேட்டு போனாலும் அங்கே வேலையில்லை என்று சொல்ல வைக்கிறார். கடைசியாக வருங்கால மாமியாரின் கம்பெனியிலேயே வேலைக்கு செல்லும் பாரத்தை வழி மறித்து தந்திரமாக பேசி தான் அப்போது நடத்திய கடத்தல் நாடகத்தில் ஒரு ஆளாக நடிக்க வைத்து விடுகிறார் தில்லை.

அவர் கடத்தி வந்த சின்னப் பெண் மீது பரிதாபப்பட்டு பாரத் அந்தப் பிரச்சினையை தானே தீர்த்துவிடுவதாகச் சொல்லியும் ஒரு குழப்பத்தில் அந்த இடத்தில் அடிதடியாகிறது. குழந்தையும் இறந்து விடுகிறாள். இதனால் பாரத் தில்லை மீது கொலை வெறியோடு அலைகிறார்.

இன்னொரு பக்கம் எசக்கி பரத்.. சாதாரணமான ஒரு ஹோட்டலில் சப்ளையர். ஆனால் பேஸ்கட்பால் பிளேயர். மணலியில் உள்ள ஆயில் ரீபைனரி மில்லில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர முயற்சித்து வருகிறார்.

இதற்காக லோக்கலில் நடைபெறும் பேஸ்கட்பால் போட்டியில் கலந்து கொள்ள எத்தனித்து வருகிறார். இவருக்கும் ஒரு காதல் மலர்கிறது. கல்லூரி மாணவியான கிருஷாவைக் காதலிக்கிறார் வினோத்.

இந்தக் காதல் கிருஷாவின் வீட்டுக்குத் தெரிகிறது. அவருடைய தாயைவிடவும் அவளின் சாதி சார்ந்த சங்கத்தினர்தான் மிகக் கோபமாகிறார்கள். வினோத்-கிருஷா பயந்து போய் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக.. அங்கே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

ஆனாலும் தனது பரிவாரங்களுடன் ஸ்டேஷனுக்கு வரும் சங்கத் தலைவர், கிருஷாவை அடித்து இழுத்துப் போய் தனது சங்க அலுவலகத்தில் சிறை வைக்கிறார். பதறியடித்து ஓடி வரும் சமுத்திரக்கனி முதலில் எசக்கி பரத்தை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். பின்பு கிருஷாவை பார்க்க ஜாதி சங்க அலுவலகத்திற்கு வர.. அங்கே மாடியில் இருந்து கீழே குதித்து காயம்படுகிறாள் கிருஷா. கிருஷாவையும் உடனடியாக அதே மருத்துவமனையில் சேர்க்கிறார் சமுத்திரக்கனி.

அடுத்த போராளியான வினோத் ஒரு ஆட்டோ ஓட்டுநர். சொந்தமாக கால் டாக்சி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன். இதற்காக சமுத்திரக்கனியிடம் பணம் கொடுத்து வைத்திருக்கிறான்.

இடைப்பட்ட நேரத்தில் தீபாவளி சமயத்தில் பட்டாசு கடை போட்டால் கூடுதலாக பணம் வருமே என்றெண்ணி அதற்காக வட்ட கவுன்சிலரிடம் லஞ்சம் கொடுத்து லைசென்ஸ் கேட்கிறான். கவுன்சிலரிடம் ‘சரி’ என்கிறார். ஆனால் பட்டாசு கடை வேறொருவருக்கு போய்விடுகிறது. இதனால் கொடு்த்தப் பணத்தைத் திருப்பிக் கேட்கிறான் வினோத்.

இந்தச் சண்டையில் வினோத்தின் ஆட்டோவை அடித்து நொறுக்கிறார்கள் கவுன்சிலரின் அடியாட்கள்.. தான் உயருக்கு உயிராய் நேசித்த ஆட்டோவை பாதியாய் ஆக்கிவிட்ட கவுன்சிலர் மீதும் அவரது ஆட்கள் மீதும் கொலை வெறியாய் ஆகிறான் வினோத்.

இப்போது இந்த சாதி சங்கத் தலைவருடன் கவுன்சிலரும், தில்லையும் ஒன்று சேர்கிறார்கள். மூவருமே ஒரே கட்சியில் இருப்பதாலும் அனைத்துவித திருட்டுத்தனங்களிலும் கூட்டுக் களவாணிகளாக இருப்பது மூன்று போராளிகளுக்கும் தெரிய வருகிறது.

இந்த மூன்று பேரையும் ஏதாவது ‘செய்ய’ வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் மூன்று போராளிகள்.. இதை அவர்கள் ‘செய்து’ முடித்தார்களா..? இல்லையா..? சமுத்திரக்கனி இவர்களுக்கு என்ன உதவிகளை செய்தார்..? இவர்களது காதல் என்ன ஆனது…? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதி கதை..!

படத்தில் அதிகம் நடித்திருப்பது சமுத்திரக்கனிதான். கழுத்தில் வலிக்கான மெடிக்கல் பட்டை அணிந்து கொண்டு அதையும் கொஞ்சம் சமாளித்தபடியே வசனங்களை பேசி நடித்திருக்கிறார் கனி. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..! உயிர் போகும் அளவுக்கு நடிக்கவில்லையென்றாலும், அந்தக் கேரக்டருக்கு ஏற்றவாறு, காட்சிகளுக்கேற்றவாறு நடித்திருக்கிறார்.

“வாய்ப்புகள் வரும்போதே அதனை பயன்படுத்துக் கொள்ளவில்லையென்றால் நம்மை மாதிரி முட்டாள் இந்த உலகத்தில் யாருமே இல்லை…” என்பது தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கும் சேர்த்துதான் சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார். இது போன்று அவ்வப்போது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்.. யதார்த்த வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அந்த மூன்று பேருக்குமே கிளாஸ் எடுக்கிறார் சமுத்திரக்கனி. அது அளவோடுதான் இருக்கிறது. கேட்கவும் இனிக்கிறது. புரிந்து கொண்டு செயல்படுத்தினால் வாழ்க்கையும் இனிக்கும்தான்..!

அடியாளாகவும், காதலனாகவும் பாரத் சீனி நன்றாகவே நடித்திருக்கிறார். இவருடைய கோபமும், ஆத்திரமும் குழந்தையைக் கடத்திய பின்புதான் வெளிப்படுகிறது. கிளைமாக்ஸில் தில்லையை நம்பி சரண்டராகி பின்பு அதுவும் தவறு என்று தெரிந்த பின்பும் அவருக்காக வருத்தப்பட்டு பேசுவதுமாக பரிதாபம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார் பாரத் சீனி.

ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் வினோத் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபத்துடன் கவுன்சிலரின் வீடு தேடி வந்து சண்டையிட்டு அவமானப்பட்டு, அடிதடியில் இறங்கி தவித்துப் போய் போகும் காட்சிகளிலெல்லாம் கேமிராவின் பயன்பாட்டிலும், நடித்ததினாலும் ஈர்க்கப்படுகிறார்.

இதேபோல் பேஸ்கட் பால் பிளேயராக ஆடியாவது மில்லு வேலைக்கு போக நினைக்கும் எசக்கி பரத்.. தன் காதலியை நினைத்து மருகுவதும், “என்னை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டுக்கிட்டே போனாண்ணா…’ என்று சொல்லி அழுவதும், வெறி கொண்ட சிங்கமாய் கிளைமாக்ஸில் பொங்கித் தீர்ப்பதுமாய் தன்னுடைய பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

நாயகிகளில் கிருஷாவுக்கு அதிகக் காட்சிகளும், நடிப்புக்கான ஸ்கோப்பும் கொடுத்திருக்கிறார்கள். கல்யாணத்திற்கு முன்பேயே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற கொள்கையில் இருக்கும் சுபிக்சாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் பாரத் சீனியை சமயம் கிடைக்கும்போது மட்டம் தட்டும் காட்சிகளும் படத்தின் திரைக்கதையை யதார்த்த மொழி என்று சொல்ல வைத்திருக்கிறது.

சாதித் தலைவர், தில்லையாக நடித்த செம்பன் வினோத் ஜோஸ், கவுன்சிலராக நடித்திருக்கும் சரவண சுப்பையா மூவருமே வில்லத்தனத்தை நல்லபடியாகவே செய்திருக்கிறார்கள்.

இடையில் ரேகாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே இருக்கும் 25 வருட கால காதலைப் பற்றியும் லேசுபாசாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். எசக்கி பரத் காப்பாற்றும் முதியவரின் கதையும், இதனூடாக எசக்கிக்குக் கிடைக்கும் புதிய காதலியான ரக்சிதாவின் கதையும்கூட இந்தப் படத்திற்கான ஒரு பலம்தான்.

ரோகிணி அந்த ஓவியங்களை வரைந்து தங்களது குடும்பக் கதையைச் சொல்வதும், இதற்கு என்ன மாதிரியான ரியாக்ஷனை காட்டுவது என்கிற குழப்பத்தில் மூன்று போராளிகளும் இருப்பதும் மிக யதார்த்தமானது. அந்த கார்ட்டூன் காட்சியில் ரோகிணியின் வாழ்க்கைக் கதையை தத்ரூபமாக படம் வரைந்திருக்கிறார் கலை இயக்குநர்.

படத்திலேயே வீணாண ஒரு கதாபாத்திரம் என்றால் அது கவுதம் மேனன்தான். அவர் எதுவுமே செய்யவில்லை. அப்படியிருக்கும்போது எதற்கு இவ்ளோ பெரிய நடிகர்.? வேறு யாரேனும் ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம். பணமாவது மிச்சயமாகியிருக்கும்.

முதலில் கதையைச் சொல்லிய விதத்தை பெரிதும் பாராட்ட வேண்டும். சாதாரணமாக ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் என்கிற முறையில் சமுத்திரக்கனியை கவுதம் வாசுதேவ் மேனனின் போலீஸ் டீம் விசாரிக்கத் துவங்கும் கதை, போகப் போக விஸ்வரூபமெடுத்து விரியும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே செல்கிறது.

படத்தின் இந்த பரபர ஓட்டத்திற்கு உதவியாய் இருப்பது சுவையான திரைக்கதையும், அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத காட்சியமைப்புகளும்தான். சின்னச் சின்ன ஷாட்டுகளாக பிரித்து படம் முழுவதையும் வெட்டி, நறுக்கி, ஒட்டி ஆல்பம் போல் தயாரித்து வழங்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் அதிகமாக கஷ்டப்பட்டவர் நிச்சயமாக படத் தொகுப்பாளராகத்தான் இருக்க முடியும். அத்தனை ஷாட்டுக்கள்.. அதிலும் சண்டை காட்சிகளில்கூட வித்தியாசம் காட்ட நினைத்து பலவித முதல் பரிசோதனைகளையெல்லாம் செய்திருக்கிறார்கள். இதுவே சண்டை காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.

இடைவேளை பிளாக்கின்போது வரும் திரைக்கதையும், அதன் பின்னான காட்சிகளுக்குண்டான திரைக்கதையும் பாராட்டுக்குரியது. அதிலும் கிளைமாக்ஸின் என்ன மாதிரியான முடிவு வரப் போகிறது என்பதை யூகிக்கவே முடியாத அளவுக்கான திரைக்கதை என்பதால் இயக்குநர் டீம் பெரும் பாராட்டுக்குரியது.

அச்சு ராஜாமணியின் இசையில் ‘கண்ணம்மா’ பாடலும், ‘பொண்டாட்டி’ பாடலும் கேட்கும் ரகம். பின்னணி இசையில்கூட தேவையானதை மட்டுமே கொடுத்து, அதை மட்டுமே இசைத்திருக்கிறார்கள்.

இயக்குநருக்கும் முன்பாக ஒளிப்பதிவாளர் என்ற முறையிலும் பெரும் பாராட்டுக்களைப் பெறுகிறார் விஜய் மில்டன். சின்ன சின்ன ஷாட்டுக்களே.. 200-ஐ தாண்டும் நிலையில் அதனை படமாக்கியிருக்கும் விதமும், சண்டை காட்சிகளில் கேமிராவின் பங்களிப்பையும் பார்க்கும்போது ஒளிப்பதிவு-இயக்கம் இரண்டிலும் மின்னலாய் தெறிக்கிறார் விஜய் மில்டன்.

மூன்று பேருக்குமான கதைகளைக்கூட மிக எளிய மனிதர்களிடத்தில் இருந்துதான் எடுத்திருக்கிறார் இயக்குநர். பாரத் சீனிக்கு ரவுடித்தனத்தை கைவிட வேண்டிய கட்டாயம்.. வினோத்திற்கு ஆட்டோவைவிட்டுவிட்டு கால் டாக்சிக்கு மாற வேண்டிய ஆசை.. எசக்கி பரத்திற்கு மணலி ஆலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக வேண்டிய நிலை. இப்படி படம் பார்க்க வரும் ரசிகர்களிடையேதான் தனது நாயகர்களின் கதையையும் தேடியிருக்கிறார் இயக்குநர். இதுவே படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.

கூடவே இன்றைய நிலைமையில் நமது நாட்டை பீடித்திருக்கும் கவுரவக் கொலைகள், அரசியல் அடாவடி, வங்கிக் கொள்ளைகள், வங்கிகள் உண்மையாக தொழில் துவங்க நினைக்கும் நபர்களுக்குக் கடன் கொடுக்க மறுப்பது, மறுக்கப்படும் நீதி என்று அனைத்தையுமே திரைக்கதையில் செதுக்கியிருப்பதால் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.

இறுதியில் கவுதம் வாசுதேவ் மேனன் சமுத்திரக்கனி அண்ட் கோ-வை அப்படியே விட்டுவிடும் காட்சி மட்டுமே யதார்த்தத்தை மிஞ்சியது. ஆனாலும் அப்படியொரு ஆபீஸர் ஊருக்கு ஊர் இருந்துவிடக் கூடாதா என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை.

மூன்று நபர்கள், மூன்று கதைகள், மூன்று திரைக்கதைகள்.. இந்த மூன்றுக்கும் தொடர்புடைய ஒரு நபர். இந்த சங்கிலித் தொடரை இணைக்கும்விதமான லாஜிக் எல்லை மீறல் இல்லாத திரைக்கதை.. சிறப்பான இயக்கம்.. செயற்கையில்லாத நடிப்பு.. அளவான இசை.. எல்லாமும் சேர்ந்து இந்தப் படத்தை பார்க்க வேண்டிய படம் என்கிற பட்டியலில் சேர்த்திருக்கிறது.

‘கோலிசோடா-2’ – முதல் பாகத்தின் பெயருக்கு பங்கம் விளைவிக்காத வண்ணம் பெருமையுடன் வந்திருக்கிறது..!

Our Score