ஃபிலிம்பேர் விருதுகளை புறக்கணித்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சமீப காலமாக திரைப்பட நடிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகமாக நடந்து வருகின்றன. இது போன்ற விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் திரைப்பட கலைஞர்கள் வெறுமனே விருதுக்காக மட்டுமே கலந்து கொண்டாலும், அந்த விழாவை வைத்து விழாவை நடத்தும் நிறுவனங்கள் லட்சங்களிலும், கோடிகளும் பணத்தைச் சம்பாதிக்கின்றன.
இதனைக் கண்டறிந்த தென்னிந்திய நடிகர் சங்கம் இனிமேல் தனியார்கள் நடத்தும் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகையர் கலந்து கொள்ள வேண்டுமெனில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கோ அல்லது தயாரிப்பாளர் சங்கத்திற்கோ நன்கொடையாக வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டுதான் சமீபத்தில் விஜய் டிவி நிர்வாகம் தனது வருடாந்திர விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
ஆனால் இந்தியாவிலேயே மிகப் பெரிய சினிமா பத்திரிகையான ஃபிலிம்பேர் பத்திரிகை நடத்தும் விழாவுக்காக இது போன்று எந்த நன்கொடையையும் அந்த பத்திரிகை நிறுவனம் வழங்காததால் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த விழாவில் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகையர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :
“கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது.
அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
அன்று எடுத்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்படும் வகையிலோ ,அல்லது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
இதற்கு பின் நடந்த விழாக்களான ‘கலர்ஸ் டிவி’, ‘விஜய் டிவி’, ‘கலாட்டா டாட் காம்’ விருது விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெறப் பெற்று அறக்கட்டளையின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஹைதராபாதில் ஃபிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அந்த விழா நடத்துபவர்களிடம் எடுத்து கூறியும் இன்றுவரை ஒத்துழைப்பு தராததினால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளிடம் வேண்டுகோள் வைத்தோம்.
எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அந்த விருது விழாவினை தவிர்த்த செல்வி.நயன்தாரா, திருமதி.குஷ்பு சுந்தர், திரு.விஜய்சேதுபதி, திரு.கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவ முடியும்.
இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்…” என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும், இந்த அறிவுறுத்தலையும் மீறி பல நடிகர், நடிகைகள் ஹைதராபாத்திற்கு பறந்து சென்று ஃபிலிம்பேர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரசன்னா, சினேகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரித்திகா சிங், நித்யா மேனன், மா.கா.பா.ஆனந்த், பிரியாமணி, திவ்யதர்ஷிணி, சாய் பல்லவி, ரெஜினா கேஸண்ட்ரா, பாடகி சின்மயி, அமலாபால், லிஸி லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!