full screen background image

ஞானக்கிறுக்கன் – சினிமா விமர்சனம்

ஞானக்கிறுக்கன் – சினிமா விமர்சனம்

கிராமத்துக் கதைகளை படமாக்குவது இப்போதெல்லாம் முள்ளின் மீது நிற்பது போலத்தான். எப்போதும் போல மாமன் மகன், அத்தை மகள் காதல்.. எதிர்ப்பு, மஞ்சத்தண்ணீ நீராட்டு விழா, கோவில் திருவிழா என்றெல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் காதலில்தான் வந்து நிற்கும்.

ஆனால் ஒரு சில படங்களின் கதைகளே அங்கேயிருக்கும் மாந்தர்களின் கதைகளை பற்றி மட்டுமே பேசும். அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று.

கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே தயாராகிவிட்டாலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும், வியாபார வெற்றிகள் கிடைக்காத்தாலும் சற்று தாமதமாக வந்திருக்கிறது. தன்னுடைய சொந்தக் கதை என்கிறார் இதன் இயக்குநர் இளையதேவன். அவருக்கு எமது வாழ்த்தகளும் பாராட்டுக்களும்..!

படத்தின் களம் திருவாரூர் மாவட்டம். ஒரு குக்கிராமம்.  அங்கே கணேசன்-தங்கம்மாள் தம்பதியினரின் வாழ்க்கைத் தரமும் ஏழ்மைதான்.. ஏற்கெனவே இரண்டு பெண் பிள்ளைகள் இருக்க மூன்றாவதாக கருத்தரித்துள்ளார் தங்கம்மாள். நிறைமாத கர்ப்பிணியான சூழலில் ஊர்த் திருவிழாவுக்கு சென்றவருக்கு அங்கேயே குழந்தை பிறக்கிறது. நடுக்காட்டில் பிறக்கும் குழந்தையை மனநிலை சரியில்லாத அப்பன் கணேசன் தூக்கிக் கொண்டு அய்யனார் கோவிலில் படுக்க வைத்து இவன் எதையோ செய்யப் போகிறான். என் குடும்பத்தை தலை நிமிரச் செய்வான் என்று புலம்புகிறான்.

இப்படியொரு புருஷனோடு வாழ்ந்தும் பிள்ளைகளை கரையேற்றுகிறார் தங்கம்மாள். மூத்த பெண் தனக்கு கல்யாணம் நடக்குமா.. நடக்காதா என்கிற குழப்பத்தில் பக்கத்து ஊர்க்கார பையனைக் காதலித்து ஊரைவிட்டு ஓடிப் போகிறாள். பையனையாவது நல்லா படிக்க வைத்து பெரிய ஆளாக்கலாம் என்ற தங்கம்மாளின் கனவை பையனின் பெயில் பொய்யாக்குகிறது. வீட்டில் சொல்ல பயந்து கொண்டு தனது நண்பனுடன் இரவோடு இரவாக திருச்சிக்கு பயணமாகிறான் மகன் பெருமாள்.

திருச்சியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். வாழ்க்கை அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்க.. சில ஆண்டுகள் அதே ஹோட்டலில் வேலை செய்து கிடைத்த சம்பளத்தை சேர்த்து வைத்து சில வருடங்கள் கழித்து தனது பெற்றோரை பார்க்க ஊர் திரும்புகிறான்.

குடும்பம் ஆச்சரியப்படுகிறது. ஊர் திகைக்கிறது.. கொண்டு வந்த பணம், எடுத்து வந்த துணிமணிகள் அம்மாவையும், அக்காக்களையும் சந்தோஷப்படுத்துகிறது. கூடவே பெருமாளுக்கு காதலும் பிறக்கிறது. அதே ஊரில் இருக்கும் அவனது மாமா மகள் சுமதி மீது பார்த்தவுடன் காதல். தான் திருச்சிக்கு வேலைக்குத் திரும்பும் கடைசி நாளில் தன் நினைவாக ஒரு மோதிரத்தை சுமதிக்கு பரிசளிக்கிறான் பெருமாள். இது அவன் அம்மாவுக்குத் தெரிய.. இரு குடும்பத்துக்கும் சண்டை தொடங்குகிறது.

இந்தக் கோபத்தில் திருச்சிக்கு பயணமாகிறான் பெருமாள். அங்கே அவனது திடீர் ஆடம்பரத்தைப் பார்த்து சந்தேகப்பட்ட ஹோட்டல் முதலாளி அவனை வேலையை விட்டுத் தூக்குகிறார். இன்னொரு முதலாளி அவனுக்கு சென்னையில் ஒரு வேலை சொல்லியிருப்பதாகச் சொல்லி அங்கே அனுப்பி வைக்கிறார்.

வந்த இடத்தில் திடீரென்று ஜோதி என்ற பெண்ணின் சிநேகம் கிடைக்கிறது. அப்பிராணியான ஜோதியைக் காப்பாற்றும் நோக்கத்தில் தனது வேலையையம் துறக்கிறான் பெருமாள். இவர்களின் அப்பாவித்தனத்தை பார்த்து இன்னொரு மெகா அப்பாவியான தம்பி ராமையா தனது வீட்டில் இடம் கொடுக்கிறார்.

கொஞ்ச நாட்களிலேயே ஜோதி கர்ப்பம் என்ற செய்தியறிந்து தம்பி ராமையா அவர்களை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்கிறார். எங்கே போவது என்பது தெரியாமல் ஜோதியை திரும்பவும் அவளது சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு வருகிறான் பெருமாள்.

சென்னை வந்து தனக்கேற்ற வேலையைத் தேடி கவுரவமாக இருக்கும் நிலையில் மீண்டும் ஜோதியை காண நேரிடுகிறது. அப்போது அவன் எடுக்கும் முடிவுதான் இந்தப் படத்தின் தலைப்புக்கு மிகப் பொருத்தமானது..

டேனியல் பாலாஜிக்கு அதிகம் காட்சிகளில்லை. ஆனால் அவர் இருக்கும் பிரேமில் அவர் மட்டுமே தெரிகிறார். என்ன சொல்கிறார்..? எதற்கு செய்கிறா..? என்கிற பிரச்சினையே இல்லாமல் அவர் ஒரு மன நோயாளி. அப்படியொருத்தர் என்ன செய்வாரோ அதைத்தான் அவர் செய்கிறார் என்பதாக இயக்குநர் காட்டியிருக்கிறார். கொடுத்த வேடத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார் டேனியல் பாலாஜி.

அடுத்து பாராட்டுக்குரியவர் இவரது மனைவி தங்கம்மாளாக நடித்திருக்கும் செந்தி. கிராமத்து பெண்களுக்கே உரித்தான அழகுடன்.. குடும்பப் பாரத்தைச் சுமக்கும் சுமையுடன் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து நடித்திருக்கிறார். ஊர் பஞ்சாயத்தின் நடுவில் வந்து அவர் பேசும் பேச்சில் வசனங்கள் தீப்பொறி.. இந்த ஒரு காட்சிக்காகவே இந்த இயக்குநர் பேசப்பட வேண்டும்..

தமிழக்க் கிராமங்களில் இன்னமும் இருக்கும் இந்த ஆணாதிக்கம் சார்ந்த பஞ்சாயத்துக்களை தோலுரிக்க வேண்டிய கடமைய திரைத்துறையினருக்கு உண்டு. வீட்டில் இருந்து ஒரு பெண் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்த்தால் அது ஊருக்கே அவமானமாகிவிட்டதாம். ஊர் வழக்கப்படி அந்தக் குடும்பத்தையே தள்ளி வைக்கிறார்களாம். இதற்குப் பதிலடியாக காதலிப்பது தப்பாய்யா என்று செந்தி கேட்டிருந்தால் கதையே வேறு மாதிரியாயிருக்கும். ஆனால் கேட்கிறார் பாருங்கள்.. “எனக்கு தெரியும்யா.. ஊர்ல இருக்குற பெரிய மனுஷனுங்க யார், யாரை எங்கெங்கே வைச்சிருக்காங்க.. எத்தனை தொடுப்புகளோட சுத்துக்கிட்டிருக்காங்க.. எவ, எவ எவன் புருஷனை வளைச்சுப் போட்டிருக்காங்கன்னு..” ஊர் மானத்தையே வாங்குகிறார். இல்லாத ஊரின் மானத்தைக் காக்க, மானத்தை விற்றவிட்ட வேட்டி கட்டிய ஆண்கள் செந்தியின் குடும்பத்தை ஊரிலிருந்து தள்ளி வைக்கிறார்கள். படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி இது.

பெருமாளாக நடித்திருக்கும் ஜெகா புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த இயக்கத்தினால் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவரது அப்பாவித்தனமான செயல்கள் எந்த இடத்திலும் எரிச்சலை மூட்டவில்லை. கிராமத்து பையன்களுக்கே உரித்தான குணத்தினை பல காட்சிகளில் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் மனதை தொட்டுவிட்டார். அந்த கிளைமாக்ஸ் காட்சி, காதல் படத்தின் கிளைமாக்ஸுக்கு ஒப்பானது..!

தம்பி ராமையா மென்மையாக நடித்து பெயரெடுத்துவிட்டார். இன்னும் எந்தக் கேரக்டரில்தான் இவர் நடிக்காமல் இல்லை என்று யோசிக்க வேண்டும். இவருக்கும் ஒரு அருமையான கேரக்டர் ஸ்கெட்ச். யாருடைய துணையும் இல்லாமல் வாழும் இவருக்கு பூனைகள்தான் துணை. அதுகளை ‘அவனுக’ என்று அடைமொழி கொடுத்து, தான் எங்கே சென்றாலும் கூடவே அழைத்துக் கொண்டு திரியும் ஒரு பரதேசியாக வாழ்ந்திருக்கிறார்.

முதலாளியின் தவறுகளுக்காக தான் மாட்டிக் கொண்டாலும் இதெல்லாம் வாழ்க்கைல சகஜம் என்பதை போல எடுத்துக் கொள்ளும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பானது.

ஹீரோயின்கள் சுமதி அழகுக்கும், சுஷ்மிதா நடிப்புக்குமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சுஷ்மிதாவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவருக்கும் ஒரு பாராட்டு.. பாடல் காட்சிகளில் சுமதியை அழகாகவும், சுஸ்மிதாவை உருக்கமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்திற்கு மிகப் பெரிய பலம் தாஜ்நூரின் இசை. பாடல்கள் கேட்க வைக்கின்றன. ‘ஆராரோ ஆரிராரோ’ பாடலும் ‘மதுர மரிக்கொழுந்த’ பாடலும் அருமை. ‘ஒத்த உசிரு’ உருக வைக்கிறது.. பாடல் வரிகள் தெளிவாகக் கேட்கும்வகையில் ஒலியமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பின்னணியில் அதிகம் சப்தம் எழுப்பாமல் படத்தை ரசிக்க அனுமதித்திருக்கிறார் இசையமைப்பாளர். இதற்காக தாஜ்நூருக்கு நமது நன்றிகள்..  

செல்வகுமாரின் ஒளிப்பதிவில் கிராமங்களின் இன்றைய நிலை அலங்கோலமாகத் தெரிகிறது.. இப்போதும் அப்படித்தானா..? சென்னையின் இரவு நேர வாழ்க்கையை இதற்கு முன்பும் பல படங்களில் பார்த்திருந்தும் இதுவும் ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.  மொத்தத்தில் ‘ஞானகிறுக்கன்’ கிறுக்கன்தான்

படத்தின் இயக்குநர் இளையதேவன் தனது வாழ்க்கையில் நடந்த கதை என்று சொன்னதால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதையே சொல்லியும்விட்டார். ஆனால் பல கேரக்டர்களை அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டதால் சற்று குழப்பம்.

டேனியல் பாலாஜிக்கு மன நோய் எதற்கு என்று தெரியவில்லை. இதனால் இவர் என்ன சொல்ல வந்தார் என்று தெரியவில்லை. படத்தின் முற்பாதியில் காட்சிக்கு காட்சி அந்தக் குடும்பத்தின் சோக நிகழ்வுகளையே காட்டிக் கொண்டிருப்பதால் படமே சோகக் காவியமாகவே தெரிந்தது..

இப்படியொரு குடும்பச் சூழலில் வளர்ந்த பையன், எவ்வளவு நல்லவனாக வந்திருக்கிறான் பாருங்கள் என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் சொல்ல வருகிறார் என்பதாக நாம் புரிந்து கொண்டோம். இது சரியா, தவறா என்று இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.!

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவாரஸ்ய காட்சிகளை புகுத்தியிருந்தால், சிறந்த சிறுகதையைப் போல வந்திருக்கும்..! கொஞ்சம் மிஸ்ஸானாலும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..

மிஸ் பண்ணிராதீங்க..!

Our Score