கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்

பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார், தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.’

இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்(பக்ஸ்), ஈ.ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு, இயக்கம் – சீ.வி.குமார், தயாரிப்பு நிறுவனம் – திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், இசை – ஹரி டஃபுசியா, இசை (OST) – ஷ்யாமலங்கன், இசை மேற்பார்வை  – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – கார்த்திக் K.தில்லை, படத் தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன், சிவா, சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன், நடன இயக்கம் – சாண்டி, மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாக தயாரிப்பு – S.சிவகுமார்.

சென்ற ஆண்டு வெளியாகி பலரின் பாரட்டைப் பெற்ற ‘மாயவன்’ திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.

காதல் கணவரைக் கொன்ற கயவர்களைத் தேடிப் பிடித்து பழி வாங்கும் ஒரு காதல் மனைவியின் கதைதான் இந்த ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் கதைக் கரு.

நாயகியான ஜெயா என்னும் பிரியங்கா ரூத் மிகவும் தைரியமானவர். தனது அப்பா, அம்மா, அக்காவுடன் நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். வீட்டில் கடைசி குழந்தை என்கிற செல்லத்துடன் கொஞ்சம் கோபக்காரியாகவும் இருக்கிறார் பிரியங்கா.

கல்லூரியில் படிக்கும்போது தனது தோழனைத் தாக்கும் பெண் போலீஸையே திருப்பி அடிக்கும் அளவுக்கு தைரியமானவராகவும் இருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போதே உடன் படிக்கும் இப்ராஹிம் என்னும் அசோக்குமாரை காதலிக்கிறார்.

இந்தக் காதல் ஜெயாவின் வீட்டுக்குத் தெரிய வர.. அவர்கள் சம்மதிக்க மறுக்கிறார்கள். ஆனால் வீட்டாரின் விருப்பத்திற்கெதிராக இப்ராஹிமுடன் வெளியே வந்து ரசியா சுல்தானாவாக மதம் மாறி அசோக் குமாரை கைப்பிடிக்கிறார் பிரியங்கா.

சென்னையில் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் பேர்வழியான ராவுத்தர் என்னும் வேலு பிரபாரகனிடம் வேலைக்கு சேர்கிறார் அசோக் குமார். ராவுத்தரின் இளைய மகனான ஹூசைன் பிரியங்காவை பார்த்தவுடன் அவள் மீது காமுறுகிறான். அவளை அடையும் பொறுட்டு ஒரு இக்கட்டான சூழலில் போலீஸின் என்கவுண்ட்டரில் அசோக்குமாரை சிக்க வைக்கிறான்.

அசோக் குமாரின் கொலைக்கு பிறகு ராவுத்தர் பிரியங்காவிடம் வந்து பணம் கொடுத்து சமாதானம் செய்கிறார். ஆனாலும் சமாதானமாகாத பிரியங்கா தனது கணவரின் கொலைக்கு யார் காரணம் என்று விசாரிக்க, விசாரிக்க தன் மீது ஆசை வைத்த ராவுத்தரின் இரண்டாவது மகனான ஹூசைன்தான் இத்தனைக்கும் சூத்திரதாரி என்பது தெரிய வர அவன் மீது கொலை வெறியாகிறார்.

ராவுத்தரையும், அவரது மகன்களையும் கொலை செய்ய திட்டமிடும் பிரியங்கா இதற்காக மும்பைக்குச் சென்று அங்கே இருக்கும் டேனியல் பாலாஜியிடம் துப்பாக்கியை வாங்கிக் கொண்டும், துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்துக் கொண்டும் சென்னை திரும்புகிறார்.

வந்த வேகத்தில் தனது கணவரை என்கவுண்ட்டரில் கொலை செய்த போலீஸ்காரர்கள் இருவரை பதில் என்கவுண்ட்டர் மூலமாக கொலை செய்கிறார் பிரியங்கா. கூடவே ராவுத்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஸ்கெட்ச் போடுகிறார் பிரியங்கா.

இதையறியும் ராவுத்தரும் தயார் நிலையில் இருக்க.. போலீஸாரும் பிரியங்காவை வலைவீசி தேடத் துவங்க இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் மீதி திரைக்கதை.

கேங்ஸ் ஆஃப் வாஸிபரின் பாதிப்பில் அதேபோல் பெயரை வைத்துக் கொண்டு உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் காதலை போற்றியும், இந்து-முஸ்லீம் இணைப்பினை புகழ்ந்தும் படமெடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவருமே இஸ்லாமியர்களாக காட்டப்பட்டிருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை.

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே நாயகி பிரியங்கா ரூத்தின் நடிப்புதான். முதல் படம் போலவே தெரியவில்லை. காதலில் இளகியும், உருகியும், அசோக்குடன் அவர் காட்டும் நெருக்கம் ஒரு பக்கம் ‘ஏ’ சர்டிபிகேட்டையும் தாண்டிவிட்டது.

இன்னொரு பக்கம் கணவர் இறந்த பின்பு அவர் அதை எதிர்கொள்ளும்விதம், ராவுத்தரிடம் உங்களை ஏன் என்கவுண்ட்டர்ல போடலை என்று எதிர் கேள்வி கேட்பதிலும், மும்பையில் பாக்சியை சந்தித்து ஆதரவு கேட்கும் தந்திர நடிப்பிலும் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒரு முஸ்லீம் பெண்ணாகவே மாறிய தோற்றத்தில் அவர் காட்டும் உடல் மொழியும், தோற்றமும்கூட நடிப்பாகவே தோன்றுகிறது. இத்தனை அழகாக நடிக்க வைத்த இயக்குநருக்கு நமது நன்றி.

போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற பிறகு சாந்தமாக திரும்பி வந்து பிரியாணி சாப்பிடும் காட்சியில் ஒரு நிமிடம் அனைவரையும் திகைக்க வைக்கிறார் பிரியங்கா. சூப்பர் இயக்கம்.

நாயகன் அசோக்குமார் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். ராவுத்தராக நடித்திருக்கும் வேலு பிரபாகரன் அந்தக் கேரக்டருக்கு தகுந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இதற்கு அவருடைய இயல்பான தோற்றமும் உறுதுணையாய் இருக்கிறது.

ரசியாவை பார்க்க வந்து அவள் கேட்கும் எடக்குத்தனமான கேள்வியால் கோபப்பட்டாலும் அடக்கிக் கொண்டு அவர் பார்க்கும் பார்வையிலேயே அனல் வீசுகிறது. தனது மகன்களை இழக்கும் சோகத்தை அவர் காண்பிக்கும்விதமும், அதற்குப் பழி வாங்கும் வேகமும் அழகான நடிப்பையும், இயக்கத்தையும் சொல்கிறது.

வழக்கம்போல குணச்சித்திர நடிப்பால் அப்துல்லா என்னும் ஈ.ராம்தாஸ் கவர்ந்திழுக்கிறார். வித்தியாசமான தண்டனையாக நீயே உன் முடிவை தீ்ர்மானிச்சுக்க  என்று ராவுத்தர் சொன்னவுடன் தன் முடிவை அவரே தேடிக் கொள்ளும் அந்தக் காட்சிகள் உருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளன. வெல்டன் ராம்தாஸ் அண்ணே..!

மும்பையில் வசிக்கும் தாதாவாக டேனியல் பாலாஜி.. சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். ஆனால் இவரது சாவு பொசுக்கென்று நடந்து முடிவதுதான் சோகம். போலீஸ் துணை கமிஷனரான ஆடுகளம் நரேனின் இயல்பான நடிப்பும் பிற்பாதியில் படத்திற்கு பூஸ்ட்டாக இருக்கிறது. கிளைமாக்ஸில் அவர் செய்யும் டிவிஸ்ட்டுகள் கவனிக்க வைக்கின்றன.

இது கேங்ஸ்டர் கதை என்பதை ஞாபகப்படுத்தும்விதமாக ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும், பின்னணி இசையும் கட்டியங் கட்டியிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் குமாரின் கை வண்ணத்தில் படம் நெடுகிலும் இரவு நேரக் காட்சிகள் ரம்மியமாக படமாக்கப்பட்டுள்ளன. கலர் டோனிங்கை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இசையைவிடவும், பின்னணி இசைதான் அபாரம். தீம் மியூஸிக்காக அமைத்திருக்கும் இசையும் ஒரு பரபரப்பான சூழலையும், திரில்லிங் காட்சிக்கான எதிர்கொள்ளலையும் ரசிகர்களிடையே பெரிதும் ஏற்படுத்தியிருக்கின்றன.

போதை பொருள் கடத்தல் தொழில் இந்தியாவில் எப்படி நடைபெறுகிறது..? போதை பொருட்கள் எங்கேயிருந்து எப்படி இந்தியாவுக்குள் ஊடுறுவுகிறது..? எந்தெந்த நாடுகளுக்கு எப்படியெல்லாம் இங்கே பேக்கேஜிங் செய்து வெளியேறுகிறது..? இதில் புழங்கும் பணத்தின் மதிப்பென்ன..? என்று போதை முந்து கடத்தல் தொழிலின் ஆதி முதல் அந்தம்வரையிலுான தகவல்களை டீடெடியிலாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுதான் படத்தில் இருக்கும் ஒரு புதிய செய்தி.

படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டே படத்தில் நிஜமாக காட்டப்பட வேண்டும் என்பதற்காக பல கொலைகளை கொடூரமாகக் காட்டுவதுதான். துப்பாக்கியால் பட்டென்று சுட்டுத் தள்ளிவிட்டுப் போவதைவிட்டுவிட்டு கொடூரமான அளவில் சண்டை காட்சிகளை அமைத்தது.. வாயில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து சாகடிப்பது என்றெல்லாம் செய்திருப்பது தேவையில்லாதது.

இதேபோல் ஆணிகளை பாட்டிலில் சேர்த்து வைத்து பாட்டிலால் தாக்குவது.. உயிர் நாடியில் இரும்பு சுத்தியலால் அடித்துக் கொலை செய்வது என்று ரத்தத்தை தெறிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

போலீஸ்காரர்களையே சுட்டுக் கொன்ற பிறகும் சென்னை மாநகர போலீஸ் அமைதியாக இருப்பதும், ராவுத்தரின் மகனை கொன்ற பிறகு வீறு கொண்டு எழுந்து வருவதாகவும் திரைக்கதையில் இருப்பது போலீஸ் மீதான நம்பகத்தன்மையை இழக்கிறது.

கடைசியாக ஊழல் அமைச்சரின் சொல்பேச்சு கேட்டு ராவுத்தரின் குடும்பத்தையே அழித்துவிட்டு அமைச்சர் மட்டும் நல்லவனாக… உயிரோடு இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத திரைக்கதை. முதலில் அழிக்கப்பட வேண்டியது இந்த அமைச்சர்தானே..? அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை ‘பொசுக்’, ‘பொசு்கெ’ன்று கொலை செய்வது எந்த ஊர் நியாயம் இயக்குநரே..?

முதலில் ஒரு அமைச்சரிடம் போலீஸ் சம்பந்தமான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் என்ன..? இவர் போலீஸ் துறை மந்திரி இல்லையே..? உள்துறை மந்திரியும் இல்லையே..? பின்பு ஏன் இந்த பொய்யான வழிகாட்டுதல்..?

படத்தில் இருக்கும் ‘ஏ’-த்தனமான காட்சிகளை நீக்கிவிட்டு, வன்முறைக் காட்சிகளையும் குறைத்திருந்தால் படத்திற்கு நாமே பரப்புரை செய்திருக்கலாம்..!

இயக்குநர் சீ.வி.குமார், ‘மாயவனில்’ எடுத்தப் பெயரை இந்தப் படத்தில் இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..!

Our Score