அமலா நடிப்பில் அம்மா செண்டிமெண்ட்டில் உருவாகும் ‘கணம்’ திரைப்படம்

அமலா நடிப்பில் அம்மா செண்டிமெண்ட்டில் உருவாகும் ‘கணம்’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகவும் இருக்கிறது தயாரிப்பாளர் S.R.பிரபுவின் Dream warrior Pictures நிறுவனம்.

அருவி’, ‘என்.ஜி.கே.’, ‘கைதி” என்று இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளன.

இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ்ரீகார்த்திக் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் டைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமலா, சர்வானந்த் இருவரும் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிது வர்மா நாயகியாக நடித்துள்ளார். சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசரும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநரான ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிக் கொண்டிருந்த இயக்குநர் ்ரீகார்த்திக் Happy to be single’ எனும் வெப் சீரிஸை இயக்க அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, தனது சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்கி, தயாரிப்பாளர் S.R.பிரபுவை அணுகியுள்ளார். ஒரு சிறு பட்ஜெட் படமாக புதுமுகத்தை வைத்தே, இக்கதையை முதலில் சொல்லியுள்ளார் இயக்குநர்.

இது குறித்து இயக்குநர் கார்த்திக் பேசும்போது, “எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட்டார். அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதைதான் இந்த “கணம்”.

இந்த திரைக்கதையை தாய், மகன் உறவு, சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன். இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்துதான், பிரபு ஸாரிடம் சொன்னேன்.

கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்துவிட்டது. கதையும், அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று, படத்தை பிரம்மாண்டமாக வடிவமைக்க தொடங்கினார்…” என்றார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்தை அணுகி அவரையே நாயகனாகவும் ஆக்கியுள்ளார். இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக் கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக் குழு.

25 வருடங்களாக திரைத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்குமென படக் குழு தெரிவித்துள்ளது.

 
Our Score