இந்தப் படத்தில் விஷ்வாவாக அபினய் கிங்கர், டேனியலாக நிவாஸ் ஆதித்தன், ஜேனட்டாக எஸ்டெர் நோரோன்ஹா, அசோக்காக அத்விக் ஜலந்தர், குழந்தை நட்சத்திரமாக ஆத்விக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்கம் – அபிஷேக் லெஸ்லி, இசை – ஜோ கோஸ்டா, ஒளிப்பதிவு – சபரி, எடிட்டர் – பிரதீப், ஆர்ட் டைரக்டர் – சஜன், சவுண்ட் டிசை கீதா குரப்பா, தயாரிப்பாளர் – ஜீவானந்தம், தயாரிப்பு நிறுவனம் – ஜே.ஆர்.ஜே. புரொடக்ஷன்ஸ், இயக்குநர் குழு – சிவா சுப்பிரமணியம், வினோ, கிளாட்சன், பத்திரிக்கை தொடர்பு : ஆர்.மணி மதன்.
“கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற ராமாயணத்தில் வருகின்ற இந்த ஒரு வரி, இன்றுவரையிலும் இந்தியா முழுவதுமே அத்தனை தரப்பு மக்களும் தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது உச்சரித்திருப்பார்கள்.
குடும்பத்திற்காக, செலவுகளுக்காக என்று கடன் வாங்க வேண்டிய கட்டாயம் உலகம் முழுவதுமே மிடில் கிளாஸ் மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் உண்டு. அதே சமயம் பெரும் கோடீஸ்வரர்களும் தங்களுடைய வியாபாரத்தை பெருக்கவும், தங்களுடைய குடும்பத்திற்காகவும் மிகப் பெரிய அளவுக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள். வாங்குவார்கள். வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்குமே கண்டிப்பாக கடனை திருப்பி செலுத்தும்போது பல வித சிக்கல்கள் வரும். கடனை கட்ட முடியாமல் போகும். கடனை வசூலிக்க வருபவர்களிடம் சண்டை, மோதல், தாக்குதல், பிறகு காவல் நிலையம், கடைசியாக நீதிமன்றம் என்று ஒரு மிகப் பெரிய சங்கிலி தொடர் மாதிரியான சிக்கல்களை அனுபவிக்காதவர்கள் யாரும் இங்கே இருக்க முடியாது.
எப்படியாவது, எங்காவது கடனை வாங்கி ஒரு பிரச்சனையை தீர்ப்போம் என்று நினைக்கும் பலரும் அந்தக் கடனுக்காக கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் நம் கண்ணில் காட்டுகின்ற அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக்கூட படிக்காமல், படிக்கத் தெரியாமல், கண்டு கொள்ளாமல் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு அதன் பிறகு அந்த கையெழுத்து தங்களது கழுத்தின் தூக்கு கயிறாக அவர்களுக்கு அவர்கள் முன் நிற்கும்போதுதான், தான் வாங்கிய கடனுக்கான நிபந்தனைகள் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பதைப் போல கடைசி சமயத்தில் கடனை கட்ட முடியாமல் தவித்து பலரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சிக்கலில் மட்டும் ஒரு நாயகனின் கதைதான் இந்த கேம் ஆப் லோன்ஸ் திரைப்படம்.
ஹீரோ நிவாஸ் ஆதித்தன் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார். அவருடைய மனைவி எஸ்தர் மட்டுமே வேலைக்கு சென்று நிவாஸையும் தங்களது மகனையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில் தற்செயலாக ஆன்லைன் சூதாட்டத்தில் கால் பதித்த நிவாஸ் ஆதித்தன், இப்போது மொத்தமாக தன்னுடைய உடல், பொருள், ஆவியை அந்த ஆன்லைன் சூதாட்டத்தில் பலியாகிவிட்டார்.
விட்டகாசை அங்கேதான் எடுக்க வேண்டும் என்ற கொள்கைப்படி அந்த ஆன்லைன் சூதாட்டம் காட்டும் லோன்ஸ் அப்ளிகேஷனில் நிறைய பணத்தை கடனாக பெற்று மீண்டும், மீண்டும் சூதாடி நிறைய தோல்விகளை சம்பாதித்து கடனாளியாகிவிட்டார். இப்போது மொத்தமாக 68 லட்சத்து 47 ஆயிரத்து 333 ரூபாய் கடன் இருப்பதாகக் கூறி அவரை கட்டச் சொல்கிறார்கள்.
கடன் கொடுத்தவர்கள் போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை. நம்பரை பிளாக் செய்வது என்று தப்பித்தல்லில் பல வழிகளை செய்து வரும் நிவாஸ் ஆதித்தன் அன்றைய தினம் இரண்டு மர்ம நபர்களால் வீட்டுக்குள் சிறைபிடிக்கப்படுகிறார்.
வாங்கிய கடன் தொகை முழுவதையும் கொடுத்தால்தான் வீட்டை விட்டு வெளியில் போவோம் என்று அவர்களும் கடனை அடைக்க வழி தெரியாமல் நிவாஸ் ஆதித்தனும் குழம்பிப் போய் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.
இந்தக் கடன் பிரச்சினையில் இருந்து மீள ஒரே வழிதான் உள்ளது என்று சொல்லி நிவாஸை தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். அப்படி அவர் தற்கொலை செய்து கொண்டால் அனைத்து கடன்களும் இன்சூரன்ஸ் மூலம் தள்ளுபடி ஆகிவிடும் என்றும், அத்துடன் இறந்து பிறகு அவன் குடும்பத்தினர் இந்தக் கடனை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நிவாஸை தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கிறார்கள். இவர்களது நச்சரிப்பால் நாயகன் டேனியல் எட்டாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ளத் தயாராகிறார்.
இதன் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
ஏற்கனவே பல திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்திருக்கும் நவாஸ் ஆதித்தன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
வெட்டிப் பேச்சு, வீராப்பு பேச்சு, குறுக்கு வழியில் உடனேயே பணம் சம்பாதிக்க நினைக்கும் எண்ணம்… இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன் மிக அழகாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருக்கிறார்.
வீட்டுக்குள்ளேயே படம் நடப்பதால் ஒரே இடத்தில் அமர்ந்து தன்னுடைய நடிப்பினை முக பாவனைகள், உடல் மொழியால் காட்டி இப்படி ஒரு டார்ச்சரை படம் பார்க்கும் ரசிகர்கள் யாருக்கும் தரக் கூடாது,,, யாரும் தாங்க மாட்டார்கள் என்பதுபோல இயக்குநரின் அழுத்தமான இயக்கத்தினால் பாவம் பங்காளி என்று நம்மையே சொல்ல வைத்திருக்கிறார் நிவாஸ் ஆதித்தன்.
கடனை வசூலிக்க வரும் நிறுவனத்தின் மேனேஜராக நடித்திருக்கும் அபிநய் வெறுமனே பேச்சிலேயே தன்னுடைய வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். அதே சமயம் அவருடைய நடிப்பு கொஞ்சம் சைக்கோத்தனமாக இருந்தாலும் நிச்சயமாக கடன் கொடுத்தவர்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் வேலைக்கு வைத்திருப்பார்கள். இவர்களைத்தான் அனுப்பி வைப்பார்கள் என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தன்னுடைய நடிப்பின் மூலமாக காண்பித்து இருக்கிறார் அபிநய். பாராட்டுக்கள்.
அபிநய்யின் உதவியாளராக நடித்திருக்கும் ஆத்விக் அவ்வப்போது அபிநய்யின் பேச்சுக்களுக்கு லீட் எடுத்துக் கொடுக்கும் ஒரு ஆளாகவும் அதே சமயம் தன்னுடைய மனைவியிடம் இருந்து வரும் போன் காலை அட்டெண்ட் செய்து பேசும் பொழுது அபிநய்யை டென்ஷன்படுத்தும்விதத்திலும் ரசிக்கத்தக்க வகையில் நடித்திருக்கிறார்.
இந்த ஆத்விக்கின் உதவியினால்தான் இந்தப் படம் வேறொரு ஜெனரியில் கொண்டு போய் முடிகிறது. அந்த வகையில் அத்விக்குதான் இந்தப் படத்தை நகர்த்தி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
நிவாஸ் ஆதித்தனின் மனைவியாக நடித்திருக்கும் எஸ்தர் இரண்டு காட்சிகள்தான் என்றாலும் தன்னுடைய பெயரை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். நிவாஸ் மாதிரியான குடும்பப் அக்கறையே இல்லாத கணவனை வைத்திருக்கும் மனைவி எப்படியெல்லாம் கஷ்டப்படுவார்களோ, என்ன பேச்சு பேசுவார்களோ, அது அத்தனையையும் பேசி அழகாக நடித்திருக்கிறார்.
படம் முழுவதும் ஒரே ஒரு வீட்டுக்குள்ளேயே நடப்பதால் நமக்கு கொஞ்சமும் போரடிக்காத வகையில் ஒவ்வொரு கட்சியையும் வேறு வேறு கோணத்தில் படமாக்கி ஒரே அளவிலான லைட்டிங்கில் அழகுபடுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபரி.
இது போன்ற படங்களுக்கு நிச்சயமாக பின்னணி இசைதான் அசத்தலாக இருக்க வேண்டும். அந்த அசத்தலில் ஒரு துளிகூட குறையாமல் மிக அழகாக இசையமைத்தது காட்சிகளுக்கான பரபரப்பையும் அடுத்தடுத்த காட்சிகளுக்கான எதிர்பார்ப்பையும் கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஜோ கோஸ்டோ.
படத்தில் 90% வசன காட்சிகள் மட்டுமே இருப்பதால் அது எதுவும் நமக்கு போரடிக்க கூடாது என்பதற்காக இடையிடையே எதிர் தரப்பினரின் முக பாவனைகளையும் வைத்து படம் ஒரு மேடை டிராமா போல இருந்தாலும், அதை சினிமாடிக்காக மாற்றி அமைத்துக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் பிரதீப்.
படத்தில் இயக்குநரான அபிஷேக் லிஸ்ட்லீ “இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்றே நாம் சொல்லலாம்.
ஏனெனில் இப்போதும் தினமும் பத்திரிகைகளில் ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையாகவே மிகக் குறைந்த நேரத்தில் அதிகமான பணத்தை சம்பாதிப்பது இந்திய மட்டுமல்ல… உலகம் முழுவதுமே அனைத்து நாடுகளிலும் இது மாதிரியான மனநிலை கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் பின் விளைவுகளைப் பற்றி அறியாமல் ஆராயாமல் போதை பழக்கம்போல இந்த சூதாட்டத்தில் கால் வைத்து தங்களுடைய குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.
இந்த ஆன்லைன் சூதாட்டம் வெற்றி பெற்றதற்கு காரணமே அவர்களே கடன் வாங்கி தருவதுதான். சூதாட்ட அப்ளிகேஷனிலேயே கடன் கொடுக்கும் நிறுவனங்களின் அப்ளிகேஷன்களும் ஒளிந்து இருக்கின்றன. ஆசையை தூண்டிவிட்டு அவனை ஆடவிட்டு அவரிடமிருந்து பணம் பறிப்பது ஒன்றுதான் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை நோக்கம்.
இப்பொழுதுதான் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்து தமிழக அரசும் அதை சட்டமியற்றி தடை செய்திருக்கிறது. ஆனாலும் எந்நேரமும் கையில் செல்போவை வைத்திருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில் இந்த போதையில் விழுந்து தங்களை மீட்க முடியாமல் பலியாகிறார்கள்.
ஆனால் படத்தின் முடிவில் இயக்குநர் சொல்லி இருக்கும் ஒரு நீதி நிச்சயமாக தவறானது. மிக, மிக கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.
ஆனால் இயக்குநர் நாயகனை காப்பாற்றுவது ஏன் என்று நமக்கு விளங்கவில்லை. கிரிமினல் குற்றத்தை செய்துவிட்டு தண்டனை பெறாமலும், உண்மையை மறைத்தும் ஒரு மனிதன் வாழலாம் என்பதுபோல இந்தப் படத்தின் இயக்குநர் கிளைமாக்ஸ் கட்சியை வைத்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல. அந்த ஒரு விஷயத்துக்காக இந்தப் படத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
RATING : 3 / 5









