full screen background image

“இனிமேல் படங்களெல்லாம் தியேட்டரில்தான் வெளியாகும்” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவிப்பு..!

“இனிமேல் படங்களெல்லாம் தியேட்டரில்தான் வெளியாகும்” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவிப்பு..!

“இனிமேல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களும் தியேட்டரில்தான் வெளியாகும்…” என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார்.

இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘கணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “அருவி படத்தின் கதையை கேட்கும்போது எப்படி திரையில் அதை சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்ததோ, அதே நம்பிக்கை இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இந்தக் கதையைக் கூறும்போது எனக்குள் வந்தது.

“இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதைவிட, நிறைய செலவு செய்தால்தான் நன்றாக இருக்கும்” என்று ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக “நீங்களே எடுங்கள்” என்று கூறினார்.

மாயா’ படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பி கொண்டே இருப்பேன். ஆனால், இந்தக் கதையை கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டார். அவருக்கு எனது நன்றி.

அமலா மேடத்திடம் இந்தக் கதையைக் சொல்வதற்கு முதலில் எங்களுக்குள் தயக்கம் இருந்தது. இருந்தாலும், இந்தப் படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர் வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

நிறைய காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் அதைச் சரியாக புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி.

தொழில் துறைகளில் அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்ப கால மாற்றத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு அத்துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர்தான். அப்படி ஒருவர்தான் இந்தப் படத்தின் இயக்குநரான ஸ்ரீகார்த்திக். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

நான் ஒவ்வொரு படத்தையும் தயாரித்து முடிக்கும்போதும் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் எனக்குள் இருக்கும். ஆனால், இப்படத்தின் தயாரிப்பின்போது அது இல்லை. இந்தப் படத்தில் டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்கள் ஒன்றாக பயணிக்கும்போது நம் மனசுக்குத் திருப்தியாக இருக்கும்.

சமீப காலமாக எங்களது நிறுவன படங்கள் அதிகமாக ஓடிடியில் வெளியாவதால் “இனிமேல் நீங்கள் தயாரிக்கும் படங்களெல்லாம் இப்படித்தான் இருக்குமா?” என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு எனது பதில் “இல்லை” என்பதுதான்.

தற்போது கொரோனா முடிந்து நிலைமை மாறி, நல்ல படங்களை மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இனி இப்படம் முதல் நாங்கள் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் தியேட்டர்களில்தான் வெளியாகும்…” என்றார்.

Our Score