full screen background image

“சென்சார் அனுமதித்த பிறகு திரையிடுவதைத் தடுக்க கிருஷ்ணசாமி யார்..?” கொதித்தெழுந்த திரைத்துறை பிரபலங்கள்..!

“சென்சார் அனுமதித்த பிறகு திரையிடுவதைத் தடுக்க கிருஷ்ணசாமி யார்..?” கொதித்தெழுந்த திரைத்துறை பிரபலங்கள்..!

ஒரு படத்தைத் தயாரிப்பதற்குக்கூட இத்தனை கஷ்டப்படத் தேவையில்லை. ஆனால் ரிலீஸ் செய்வதற்குத்தான் நமது தயாரிப்பாளர்கள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.

அரசியல்வியாதிகள் அனைத்து இடங்களிலும் தங்களது வாயை வைக்க ஆரம்பித்துவிட்டதால் இப்போதெல்லாம் சினிமாக்காரர்கள்தான் அவர்களுக்கு மிகவும் இளக்காரமாகத் தெரிகிறது. ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுடைய கட்சியின் கொள்கைகளுக்கு பிடிக்காத விஷயம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றால்கூட படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று அராஜகம் செய்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த முறை சிக்கியிருப்பது நடிகர் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ‘கொம்பன்’ படம். இந்தப் படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்களின் கதையாக இருக்கிறது என்றும், முதுகளத்தூர் கலவரத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும்.. இதனால் படம் வெளியானால் தமிழ்நாட்டில் கலவரம் வெடிக்கும். எனவே படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு முழு ஆதரவளிப்பதற்கு தமிழ்த் திரையுலகமே திரண்டுவிட்டது.

அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்று அனைத்து முக்கிய சங்கங்களின் நிர்வாகிகளும் இன்று மாலை பிலிம் சேம்பரில் மீடியாக்களை சந்தித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

வந்திருந்த அனைத்து வி.ஐ.பி.க்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டிவிட்டதால் அனைவருமே கிருஷ்ணசாமி மீது கோபத்தில்தான் இருந்தனர். ஆனால் அவரது பெயரை உச்சரிக்காமல் கவனமாகத் தவிர்த்துவிட்டனர். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், நடிகர் கருணாஸும் மட்டுமே அவரது பெயரை குறிப்பிட்டுப் பேசினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, துணைத் தலைவர் சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், அகில இந்திய பெப்சியின் தலைவர் சிவா, கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி, நடிகர் கருணாஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முதலில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, “இந்தப் படம் ரொம்ப நல்ல படம். எந்தவொரு சாதி அடையாளமும் இந்தப் படத்துல இல்ல. கிழக்குச் சீமையிலே’ மாதிரி காவியமான படம்ன்னே சொல்ல்லாம். என் கம்பெனி பேனர்ல இந்த இயக்குநருக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுத்து அடுத்த படத்தை துவக்கலாம்னு எனக்கே ஒரு ஆசை வந்திருக்கு. அந்த அளவுக்கு பிரமாதமா எடுத்திருக்கார் இயக்குநர் முத்தையா. படத்தில் எந்த இடத்திலும் சாதி மோதல்கள் இல்லை.  யாரையும் இழிவுபடுத்தும் காட்சியோ, வசனமோ இல்லை. அப்படியிருந்தும், இந்தப் படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு..? எதனால் இப்படியொரு சிக்கலில் மாட்டியிருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை…” என்றார்.

அடுத்து பேசிய சரத்குமார் ” இந்தப் படத்தில் மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையை ஒரு படமாகச் சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.

ஒரு படம் சென்சார் ஆன பிறகு தனி நபர்களோ, ஒரு அமைப்போ படத்தினை தடை செய்தால் சென்சார் என்கிற அமைப்பு பின்பு எதற்காக இருக்கிறது..? மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு, அந்தப் படத்தை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து.

இனிவரும் காலங்களில் தனி நபரோ, அமைப்போ ஏதாவது ஒரு படத்துக்கு எதிராக போராட்டம் என்று சொல்லி எதிர்ப்பில் ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்..” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ”இந்தப் படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதுகூட சொல்லப்படவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினையும் இல்லை. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது. அவசரத்தனமாகவும் தோன்றுகிறது.

இந்தப் படத்தை நீங்களும் பாருங்க.. இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல ஒரு காட்சியாவது இருக்கிறது என்று யாராவது சொன்னால் நான் திரையுலகத்தைவிட்டே போய் விடுகிறேன்…” என்றார் கோபத்தோடு.

இடையில் பேசிய நடிகர் கருணாஸ், “முன்னாடி கமல்ஹாசன் ‘சண்டியர்’ படம் எடுத்தப்போ இதே கிருஷ்ணசாமிதான் அதை எதிர்த்தார். ஷூட்டிங்கை நடத்தவிட மாட்டோம்ன்னு தகராறெல்லாம் செஞ்சாரு. ஆனா சில மாதங்களுக்கு முன்பாக சோழராஜன்ற இயக்குநர் அதே ‘சண்டியர்’ன்ற பெயர்ல படத்தை தயாரிச்சு ரிலீஸும் செஞ்சுட்டாரு. கமல்ஹாசன் எடுத்தப்ப சண்டைக்கு வந்த கிருஷ்ணசாமி இப்போ எங்க போனார்..? இதில் இருந்தே தெரியலையா..? அவர் சும்மா பப்ளிச்சிட்டிக்காகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்..” என்றார்.

கடைசியாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, ”எனக்கும், கிருஷ்ணசாமிக்கும் முன் விரோதம் எதுவும் இல்லை. நான் அவரை பார்த்ததுகூட இல்லை.

மார்ச் 27-ம் தேதி ‘கொம்பன்’ ரிலீஸ் என்று முதலில் நாங்கள் அறிவித்தபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் முடியாததால் சிறிது தள்ளி வைத்து ஏப்ரல் 2-ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம். இதன் பின்புதான்.. 2-ம் தேதி ரிலீஸ் என்றதும்தான் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரமாக ஆனது. ஏப்ரல் 10-ம் தேதி படம் ரிலீஸ் என்றால்கூட இந்தப் படத்துக்கு எந்தப் பிரச்சனையும் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்..” என்றார்.

ஞானவேல்ராஜா கடைசியாக இப்படிச் சொன்னதுதான் மேலும் இந்தப் பிரச்சினையை வேறொரு பக்கம் இழுத்துச் செல்கிறது..!

திரையிலகில் எல்லாமே அரசியலாகி வருவது திரைப்படத்தைக்கு மிகவும் ஆபத்தானது என்கிற எச்சரிக்கையை திரையுலகப் பிரமுகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!

Our Score