மூன்று நாட்களாக நடந்து வந்த தமிழ்ச் சினிமாவுலக ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
பெப்சி தொழிலாளர்களின் ஊதிய விவகாரம் குறித்து அந்த அமைப்பிற்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையில் கடந்த மூன்று நாட்காளக பேச்சுவார்த்தை நடந்தது வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை இன்றைக்கு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன்படி தொழிலாளர்களுக்கு அவரவர் சங்கங்களுக்கேற்ப 15 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதம்வரையிலும் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாய் நீடித்து வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக இன்று மாலை வெளியிட்ட செய்தியறிக்கையில் பெப்சி அமைப்பும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கூறியுள்ளன.
பெப்சியில் அங்கம் வகிக்கும் 24 சங்கங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்கள் சங்கம் மற்றும் சண்டை நடிகர்கள் சங்கம் ஆகிய இரண்டு பிரிவு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துலக்லாமின் மறைவையொட்டி நாளை ஒரு நாள் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த இரண்டு அமைப்புகளும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.