full screen background image

ஜூலை 24 முதல் டிவி சேனல்களுக்கு புதிய கட்டு்ப்பாடு – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை

ஜூலை 24 முதல் டிவி சேனல்களுக்கு புதிய கட்டு்ப்பாடு – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை

வரும் ஜூலை 24-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களின் ட்ரெய்லர், பாடல் காட்சிகள், காமெடி சீன்கள் போன்றவற்றை டிவி சானல்களுக்கு தரப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று இது குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

இதற்கான காரணங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்படுவபவை இவைகள்தான்.

பல டிவி சேனல்கள் தமிழ்த் திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டதால், நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சில டிவி சேனல்கள் பெரிய பட்ஜெட் படங்களையும், பெரிய நடிகர்கள் நடித்த படங்களையும் மட்டுமே வாங்குகின்றன. அதிலும் வருடத்திற்கு 3 அல்லது 4 படங்களை மட்டுமே வாங்குகின்றன. மீதமுள்ள படங்கள் அனைத்துமே விற்காமல் இருக்கின்றன.

மேலும் தங்களது டிவி சேனல்களில் திரைப்படங்களை விளம்பரப்பப்படுத்த கட்டணமாக கோடிக்கணக்கில் வசூலிக்கும் சேனல்கள், தான் விளம்பரப்படுத்திய படங்களை வாங்கவும் மறுக்கின்றன.

இப்போதெல்லாம் முக்கிய, பெரிய படங்களின் டிவி உரிமையை படம் திரைக்கு வருவதற்கு முன்பேயே வாங்கும் டிவி சேனல்கள் மற்ற படங்களை… அவைகள் திரைக்கு வந்து ஓடி முடித்த பின்பேயே வியாபாரம் பேசுகின்றன.

இதனால் அந்தந்த படங்களின் விளம்பரத்திற்காக சில சேனல்களில் செலுத்தும் விளம்பரக் கட்டணம் கோடிக்கணக்கில் இருக்க.. அதே படத்தை அதே சேனல் சேட்டிலைட் ரைட்ஸாக விலைக்கு வாங்கும்போது சில லட்சங்கள் கொடுத்து வாங்கும் அவல நிலை இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் ஏமாளியாகி நிற்கிறார்.

கடந்த மாதம் இது தொடர்பாக அனைத்து சேனல்களையும் அழைத்து பேசிய தயாரிப்பாளர் சங்கம் தமிழ்ப் படங்களின் உரிமையை வாங்காத டிவி சேனல்களுடன் இனிமேல் எந்தவித வர்த்தகத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று எச்சரித்தது.

இந்த எச்சரிக்கைக்கு பின்பு சில சேனல்கள் பெயருக்காக.. கண் துடைப்புக்காக 5 லட்சத்திற்குக் கீழேயே கிடைக்கும் சில டப்பிங் படங்களை மட்டுமே வாங்கிக் கொண்டு ‘நாங்களும் படங்களை வாங்கியிருக்கிறோம்’ என்று கணக்குக் காட்டி இன்றுவரையிலும் படங்களின் டிரெயிலர், பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகளை இலவசமாக பெற்று வருகின்றன.

இதன் பின்பும் பல நடுத்தர, சின்ன பட்ஜெட் படங்களை டிவி சேனல்களுக்கு விற்பனை செய்யவே முடியவில்லை. சேனல்களும் இவைகளை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை.

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த பின்புதான், தயாரிப்பாளர் சங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறதாம்.

வரும் ஜூலை 24-ம் தேதி முதல் புதிய படங்களின் ட்ரெய்லர், பாடல் காட்சிகள், காமெடி சீன்கள் போன்றவை இனிமேல் சேனல்களுக்கு தரப் போவதில்லை.

எந்த சேனல் புதிய படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்குகிறதோ , அந்த  சேனலுக்கு மட்டுமே  அந்த படத்தின் விளம்பரம் தரப்படும்.

அதுவும் 2 கோடி ரூபாய்க்கு உரிமையை வாங்கிவிட்டு, ஒன்றரை கோடிக்கு விளம்பரம் கேட்டால் தர முடியாது.  25 லட்சம் ரூபாய்வரைதான் விளம்பரம் தரப்படும் என்று வரைமுறை வைத்துவிட்டார்களாம்.

ஆக, அடுத்த வாரம் திரையுலகில் தயாரிப்பாளர் சங்க வாரமாக இருக்கும் என்று நம்பலாம்..!

Our Score