இன்று நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் வெறும் 75 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கேயாரை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் தாணு தரப்பினர். ஆனால் இது நிரந்தரமான வெற்றியல்ல என்றே தெரிகிறது..
ஏனெனில் நாளை காலை தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 89 தயாரிப்பாளர்கள் இன்று நடந்த பொதுக்குழுவே செல்லாது என்று அறிவிக்க்க் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளனராம்..!
காரணம், அந்த 90 புதிய உறுப்பினர்களை இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியற்றவர்கள் என்று சொல்லி தாணு தரப்பு ஆட்சேபணை தெரிவித்து கோர்ட் ரிசீவரான நீதிபதியிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.. விசாரித்த அவரும் அவர்கள் வாக்களிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
ஆனால் இதனை எதிர்த்து அந்த 90 பேரில் ஒருவரான ‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர் நேற்று அவசரமாக கோர்ட் படியேறினார். நீதிமன்றமோ “சுரேஷ் காமாட்சி பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாம். வாக்களிக்கலாம். இவருக்கு இதற்கான முழு உரிமையுண்டு..” என்று சொல்லிவிட்டது. இந்த இடைக்கால உத்தரவினால் சுரேஷ் காமாட்சி இன்றைய வாக்குப்பதிவில் கலந்து கொண்டு வாக்களித்திருக்கிறார்.
இந்தச் செய்தி கிடைத்ததும் சுரேஷ் காமாட்சியைத் தவிர்த்த மற்ற 89 பேரும் பதட்டமாகிவிட்டார்கள். ஆனால் நேரமில்லாததால் அவர்களால் கோர்ட்டிற்கு போக முடியவில்லை. ஆகவே நாளை அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று முறைப்படி எங்களையும் அனுமதித்துதான் இந்தப் பொதுக்குழுவை நடத்தியிருக்க வேண்டும். ஆகவே நேற்று நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர நினைத்திருக்கிறார்கள்..
இவர்களனைவரும் வழக்கு தொடர்ந்து அதில் சுரேஷ் காமாட்சிக்கு கிடைத்த தீர்ப்புபோல இவர்களுக்கும் தகுதியுண்டு என்ற தீர்ப்பு வந்தால் இன்று நடத்தப்பட்ட பொதுக்குழு ரத்தாகவும் வாய்ப்பு உண்டு..! மறுபடியும் புதிய பொதுக்குழு கூட்டம் என்றால் தாணு தரப்பினர் தலையால்தான் தண்ணீர் குடிக்க வேண்டி வரும். இப்போது அவர்களால் தடை செய்யப்பட்ட 90 பேரும் அப்போது கேயாருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்..!
ஆனாலும் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கோடை விடுமுறையில் இருப்பதாலும் விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு வரவிருப்பதாலும் இந்தப் பொதுக்குழுவின் முடிவினை அமல்படுத்த ஒருவேளை இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்கவே சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தினர்.
மறுபடியும் முதல்ல இருந்தா..?









