“OTT பற்றி பேசித் தீர்வு காணுங்கள்” – திரைப்பட அமைப்புகளுக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் வேண்டுகோள்..!

“OTT பற்றி பேசித் தீர்வு காணுங்கள்” – திரைப்பட அமைப்புகளுக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் வேண்டுகோள்..!

வலைத்தளம் வழியாக திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் ஒரு புதிய வழிமுறையான Online Video Platform, விநியோகஸ்தர்களையும், திரையரங்க உரிமையாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சில தயாரிப்பாளர்களை மட்டும் மகிழ்ச்சி அடையவும் வைத்துள்ளது.

ஏற்கனவே நிறைய திரையரங்குகள் திருமணக் கூடங்களாக, மால்களாக மாறிவிட்ட நிலையில், இருக்கும் கொஞ்ச திரையரங்குகளையும் இழுத்து மூடப் பார்க்கிறதே இந்த OTT என்று கொதிக்கின்றனர் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் தரப்பு.

எந்த வழியிலாவது எடுத்த படம் ரிலீசாக வேண்டும். செலவு செய்த பணம் திரும்பக் கிடைக்க வேண்டும். எந்தெந்த வகையில் வருமானம் வந்தாலும் அதை பெறுவதே எங்களின் விருப்பம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் தரப்பு.

நடைமுறை சினிமாவில்.. தயரிப்பாளர்கள் இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் இல்லை. விநியோகஸ்தர்கள் இல்லையென்றால் தியேட்டர்காரர்கள் இல்லை. தியேட்டர்கள் இல்லையென்றால் படங்கள் ரிலீசாக வேறு இடமில்லை.

தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், ஏழை எளிய குடும்பத்தினர், பாமரர்களுக்கு சினிமா பார்க்க தியேட்டர்களைவிட்டால் வேறு வாயிப்பில்லை, ஸ்டீரியோ, டால்பி அட்மாஸ் சவுண்ட் எஃபெக்டோடு.. தியேட்டரில் படத்தை பார்க்கும்போதுதான். ரசிகர்கள் முழு திருப்தி அடைவார்கள்.

மொபைல், லேப்டாப், ஹோம் தியேட்டர்களால் நூறு சதவிகிதம் அதை கொடுக்க முடியுமா? திருட்டு விசிடியில் படம் வெளிவந்த பிறகும், ‘ஜெண்டில்மேன்’ படத்தை தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் பார்த்தார்கள் என்றால் அதுதான் தியேட்டர் Speciality.

உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. எடுத்தப் படத்தை எங்களிடம் கொடுங்கள். நல்ல விலைக்கு வாங்கி கொள்கிறோம். மக்களிடம் உங்கள் சினிமாவை நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என்கிறது OTT.

அதை இரு கரம் நீட்டி வரவேற்க தயாராகிறது ஒரு அணி. இது வரவே கூடாது என OTT-ஐ எதிர்க்க தயாராகிறது இன்னொரு அணி.

இப்படிக் கூட்டுக் குடும்பமாய் இருக்கும் சினிமா துறையில் குழப்பம் ஏற்படுத்துகிறதா OTT. இந்திய சினிமாவுக்கு இந்த சிஸ்டம் சரி வருமா..? இது சினிமா துறைக்கு ப்ளசா..? மைனசா..? என்று படவுலகினர் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது உலகமே இண்டர்நெட் மயமாகிவிட்டது. இணையத்தளத்தோடுதான் இன்றைய வாழ்க்கை முறை இயங்குகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

முன்பெல்லாம் சினிமா ஷுட்டிங் ஃபிலிமில் எடுக்கப்பட்டது. இன்றோ அது டிஜிட்டலாக மாறிவிட்டது. மெமெரி கார்ட், ஹார்ட் டிஸ்குகள் ஒளி-ஒலிப்பதிவு பொருளானது. முன்பு திரையரங்குகளுக்கு படப் பெட்டிகளில் ரீல்களாக ஊர், ஊராய் போன திரைப்படங்கள் இன்று Cube, UFO, PXD, Dish Antenna வழியாக நேரடியாகச் செல்கிறது.

மாற்றம் என்பது அனைத்துத் தொழில்களிலும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கும். பழையன மாறி புதியன உருவாகும். என்றாலும், சினிமா துறையில் இயங்கும் எல்லாமே முக்கியமானவை. எல்லோருமே முக்கியமானவர்கள். ஒரு அடுப்பில் இருக்கும் முட்டுகளே.. சமையல் பாத்திரங்களை சமமாக நிற்க செய்கிறது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அந்த அடுப்புக் முட்டுகளைப் போல சினிமாவை தாங்கி நிற்கும் தூண்கள் ஆவார்கள்.

ஒரு நல்ல சினிமாவை எடுத்துத் தரும் பொறுப்பு தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. அதை நல்லவிதமாக ரிலீஸ் செய்து லாபகரமான வருவாய் ஈட்டித் தரும் பொறுப்பு விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இருக்கிறது.

ஏற்கனவே தியேட்டரில் படம் ரிலீசாகி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகே சாட்டிலைட் TV-களில் அந்த படத்தை வெளியிட வேண்டும் என்கிற விதிமுறை உருவாக்கப்பட்டு, நீண்ட ஆண்டுகளாக அது பின்பற்றப்பட்டு வருகிறது.

தியேட்டரிலும், ஆன்லைனிலும் ஒரே சமயத்தில் படங்கள் ரிலீசானால் தியேட்டர் வசூல் பாதிக்கதானே செய்யும். படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தருக்கும் Terms முறையில் தங்களது தியேட்டரில் அந்தப் படத்தைத் திரையிட்ட தியேட்டர்காரர்களுக்கும் நஷ்டம் வருமே.. எந்த புதிய வழியிலும் போகும் முன்பும் அதன் சாதக, பாதகங்களை நன்கு ஆராய வேண்டும்.

'உன் வழி வேறு வழி – என் வழி தனி வழி' - என்கிற மாறுபட்ட மனப்பான்மையோடு ஆளுக்கொரு வழிகளில் போகாமல் அனைவரும் ஒரே வழியில், நேர்மையான வழியில் சென்றால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு நல்லதொரு முடிவை காண முடியும்.

;எந்தத் தயாரிப்பாளரின் படத்தையும் ரிலீஸ் செய்யவிட மாட்டோம். படத்தைத் திரையிட மாட்டோம்; என்பது போன்ற தடைகள்.. மோதல்கள் அனைத்தும் தமிழ்த் திரையுலகத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒற்றுமையே உயர்வு தரும். உடனடியாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலந்து பேசி நல்லதொரு முடிவை எடுக்க வேண்டிய அவசர கால நேரமிது..!

OTT போன்ற ஒரு புதிய தொழில் நுட்ப வியாபார முறையால் நல்லது நடக்குமென்றால் அதைத் தடுக்கக் கூடாது. இல்லை என்றால்..? அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சிந்தித்து விவாதித்து செயல்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்திய சினிமாக்கள் உயர்ந்து நிற்கும் தருணம் இது. இன்னும் நிறைய மால்கள், சினிமா தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பத் தரத்தோடு உருவாக்கப்படவேண்டும். சினிமா தொழிலில் முதலீடு செய்யும் அனைவரும் லாபம் பெற வேண்டும்.  

உலகம் உள்ளவரை மனிதர்கள் இருப்பார்கள். மனிதர்கள் இருக்கும்வரை சினிமாவும் இருக்கும். மனித வாழ்வின் அடிப்படை, அன்றாட தேவைகளான உணவு, உடை, வீடு போல – சினிமாவும் அவசியம்தான். மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சேவையைச் செய்கிறது சினிமா.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு திரும்பவும் சினிமா படப் பணிகள் துவங்கும் முன்னர் - ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் நல்லதொரு புதிய விடியலுடன் வெளிவர-- அகில இந்திய அனைத்து சினிமா சங்கங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரமுகர்களும், பிரதிநிதிகளும் ஆலோசித்து எதிர்கால சினிமாத் துறைக்கு பயனுள்ள தீர்மானங்களை நிறைவேற்றி கறாராக அறிவிக்க வேண்டும்.

அடர்த்தியான நிழல் தரும் ஆலமரம் போன்றது சினிமா. அதன் அடியில் இளைப்பாறுபவர்கள் நாம். அதன் உயிர்ப்புக்கு ஒரு இடையூறு உருவானால் அதைத் தடுக்க வேண்டியது நமது கடமை."

அன்பான வேண்டுகோளுடன்,

K.T.குஞ்சுமோன்,

Gentleman Film International