பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 63.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவினால் வடபழனி எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது அதீத உடல் பருமனால் இதயம், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டிருந்தது. அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.
ராவுத்தர் கேப்டன் விஜயகாந்தின் பால்ய நண்பர். அவருடன் பள்ளியில் படித்தவர். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள். சென்னையில் கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது அவருடன் அவருக்காகவே ஓடியாடி உழைத்தவர் இப்ராஹிம் ராவுத்தர்தான்.
கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியவுடன் அவருடனேயே இருந்து அவரது கால்ஷீட் விவகாரங்களை முழுமையாகக் கவனித்துக் கொண்டவர் ராவுத்தர்தான். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்தவர் இவரே.
விஜயகாந்தின் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று விஜயகாந்திற்கும், ராவுத்தரகுக்கும் இடையே பிணக்கு ஏற்பட இருவரும் பிரிந்தார்கள். இதன் பின்னர் ராவுத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரிக்க தொடங்கினார் ராவுத்தர்.
இதுவரையிலும் 32 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார் ராவுத்தர். கடைசியாக பாடகர் கிரிஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தினை தயாரித்து வெளியிட்டார்.
திரைப்படக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திய ‘ஊமை விழிகள்’ படம் உருவாகி, வெளியானதில் ராவுத்தருக்கு பெரும் பங்குண்டு.
அத்திரைப்படத்தில் கால்ஷீட் நெருக்கடியிலும் விஜயகாந்தை நடிக்க வைத்த பெருமை ராவுத்தரையே சேரும். இதன் பின்னர் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது தயாரிப்பு படங்களில் வாய்ப்புக் கொடுத்து புதிய முயற்சிக்கு வித்திட்டவரும் ராவுதத்ர்தான்..!
ராவுத்தர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மீது அபிமானியாகவும் இருந்தார். மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மீது வெறி கொண்ட தொண்டராகவும் இருந்தவர். அவருடைய மறைவுக்குப் பின்னர்தான் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராவுத்தர்.
கேப்டன் விஜயகாந்துக்கும் இவருக்குமான பிரிவுக்கான காரணம் வெளியில் தெரியவில்லை என்றாலும் அதிகமாக இருவரும் மோதிக் கொள்ளவில்லை. விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாடுகளை மட்டுமே இன்னொரு கட்சி பிரமுகர் என்கிற ரீதியில் விமர்சனம் செய்து வந்தார் ராவுத்தர். ஆனால் விஜயகாந்த் இன்றுவரையிலும் ராவுத்தரை பற்றி வெளியில் விமர்சனம் செய்ததில்லை..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராவுத்தர் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதை அறிந்து ஓடோடி வந்து கண்ணீர் விட்டு அழுதார் விஜயகாந்த். “என் வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என் நண்பன் ராவுத்தர்…” என்று தன் கைப்படவே கடிதம் எழுதி வெளியிட்டார் விஜயகாந்த்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். திரையுலகில் அனைவருக்குமே பிடித்தமான ஒரு தலைவராகவும், நண்பராகவும் இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர். அவரது மறைவு நிச்சயமாக தமிழ்ச் சினிமாவுலகத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பேரிழப்பாகும்.