தமிழ்த் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரும், திரையுலகின் என்சைக்ளோபீடியா என்றழைக்கப்பட்டவருமான பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத் திறப்பு விழா சமீபத்தில் ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது.
மூத்த நடிகரான சிவக்குமார், மற்றும் நடிகர்கள் ராஜேஷ், மன்சூரலிகான், லாரன்ஸ், ரமேஷ் கண்ணா, எஸ்.வி.சேகர், நடிகை குட்டி பத்மினி, தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், ஏ.எல்.அழகப்பன், இயக்குநர் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பெப்சி அமைப்பின் செயலாளர் செல்வராஜ், சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் தலைவர் தளபதி, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன், பாடகர் கானா பாலா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இயக்குநர் பேரரசு, கில்டு அமைப்பின் தலைவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பி.ஆர்.ஓ. சங்க நிர்வாகிகள்,. அனைத்து பி.ஆர்.ஓ.க்கள்.. எண்ணற்ற சினிமா பத்திரிகையாளர்களும் இந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிலிம் நியூஸ் ஆனந்தனின் திருவுருவப் படத்தை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து உரையாற்றினார். “ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மென்மையான மனிதர்.. யாரையும் அதட்டிகூட பேச மாட்டார். தனக்கான ஊதியத்தைக்கூடகேட்க மாட்டார். என்னுடைய முதல் படத்தில் இருந்து கடைசிவரையிலும் எனக்காக பி.ஆர்.ஓ. வேலை பார்த்தவர்.
நான் 100 படங்களில் நடித்து முடித்த பின்பு அந்த 100 படங்களின் தயாரிப்பாளர்களையும் நேரில் அழைத்து அவர்களைக் கெளரவித்து ஒரு விழா நடத்தினேன். அந்த விழாவை அவர்தான் நடத்திக் கொடுத்தார். என்னுடைய ஒவ்வொரு படத்தின்போதும் நான் பத்திரிகையாளர் சந்திப்பை அவர் மூலமாகத்தான் நடத்தினேன்.
எனக்கு மட்டுமல்லாமல் என்னுடைய மகன்கள் நடிக்க வந்தபோது துவக்கக் காலத்தில் அவருடைய ஆசிர்வாத்த்தை பெற்றுத்தான் திரையுலகத்திற்குள்ளேயே நுழைந்தார்கள். அவரைப் போன்ற மனிதர் இனி இந்த திரையுலகில் இருக்கப் போவதில்லை. சினிமாவுலகத்திற்காக இனிமேல் யார் இந்த்த் தகவல் களஞ்சிய வேலையை செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த இடம் இப்போதுவரையிலும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது..” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், “ஐயா ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மட்டும் இல்லையென்றால் இந்த்த் தமிழ்ச் சினிமாவின் சரித்திரமே இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. அவர்தான் ஊமை படங்களில் துவங்கி, முதல் பேசும்படத்தில் ஆரம்பித்து இப்போதுவரையிலும் அனைத்து படங்களின் தகவல்களையும் திரட்டி அனைத்தையும் ஒரு கலைப் பொக்கிஷமாக சேர்த்து வைத்தவர்.
அவருடைய சேகரிப்புகள், படைப்புகள் எல்லாம் இப்போது எங்கோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வெளியில் எடுத்து ஒரு கண்காட்சிபோல் அமைக்க வேண்டும். அதனை இப்போது கட்டி வரும் பிலிம் சேம்பர் வளாகத்திலேயே அமைக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், பிலிம் சேம்பரும் இணைந்து செய்ய வேண்டும்.. அந்த மகத்தான மனிதரின் செயல்கள் யாருக்குமே தெரியாமல் போய்விடக் கூடாது..” என்று கேட்டுக் கொண்டார்.
இயக்குநர் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் ஐயா பெயரில் திரைப்பட கண்காட்சி அமைப்பதுடன், அவருடைய திருவுருவச் சிலையையும் பிலிம் சேம்பர் வளாகத்தில் அமைத்தாக வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.
இது நல்ல விஷயம்தான்.. சில ஆண்டுகளுக்கு முன்பாக பிலிம் நியூஸ் ஆனந்தன் ஐயா அரசிடம் ஒப்படைத்த்துபோக அவரது குடும்பத்தினரிடம் இப்போது இருக்கும் மிச்சம் மீதியான தகவல்கள், புகைப்படங்களையாவது வாங்கி பிலிம் சேம்பர் வளாகத்தில் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும்வண்ணம் ஒரு கண்காட்சிபோல அமைப்பது ஒட்டு மொத்தத் தமிழ்த் திரையுலகத்தினரின் கடமை..
செய்வார்கள் என்றே நம்புகிறோம்..!