full screen background image

“தேவரினத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்…” – இயக்குநர் பாரதிராஜாவின் ஜாதிப் பற்றான பேச்சு..!

“தேவரினத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்…” – இயக்குநர் பாரதிராஜாவின் ஜாதிப் பற்றான பேச்சு..!

‘குற்றப் பரம்பரை’ படத்தின் துவக்க விழா நேற்று உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் நடைபெற்றது.  இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Kutraparambarai (58)

பெருங்காமநல்லூரில், 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, குற்றப் பரம்பரை(ரேகை) சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தற்போது ஒரு நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3-ம் தேதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், ஆர்.கே.செல்வமணி, கதிர், எழில், சுசீந்திரன், சரவண சுப்பையா, பாண்டிராஜ், பேரரசு, பொன்ராம், ஜீவன், ஒளிப்பதிவாளர்கள் பி.கண்ணன், சாலை சகாதேவன், கதாசிரியரும் இயக்குனருமான எம்.ரத்னகுமார் உட்பட பலர், அந்த நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து நினைவிடத்தின் அருகிலேயே ‘குற்றப் பரம்பரை’ படத்தின் படப்பிடிப்பை குத்துவிளக்கு ஏற்றி, கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அதே இடத்தில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிக்காததால் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் படத்தின் துவக்க விழா நடைபெற்றது.

அந்த விழாவில் பாரதிராஜா பேசுகையில்,

Kutraparambarai (16)

“என் இனிய தமிழ் மக்களே..!

ஒரு காலத்தில் ‘நீங்கள் என்ன இனம்?’ என்று கேட்டால், ‘தமிழ்’ என்றுதான் சொல்வேன். அதற்காக என் தந்தையையும், தாயையும் நினைவு கூறவில்லையென்றால். நான் மனிதனே இல்லை. அதுபோல் நான் பிறந்த இடம்தான் எனக்கு அடையாளம். என் அடையாளத்தைத் தொலைத்துவிட மாட்டேன். 

‘குற்றப் பரம்பரை’ என்று சொல்வதைவிட ‘தியாகப் பரம்பரை’ என்றுதான் சொல்ல வேண்டும். பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை துரத்திவிட்டு அமெரிக்காவை பிடித்தனர் வெள்ளையர்கள். இது போன்ற பல வரலாறுகள், தியாகங்கள் இங்கே கிடக்கின்றன. இவர்களின் வீர வரலாற்றை இங்கு யாரும் சரியாகப் பதிவு செய்யவில்லை. 

கதாசிரியர் ரத்னகுமார் 1992-ல் என்னிடம் இந்தக் ‘குற்றப் பரம்பரை’ கதையை சொன்னார். கதையை கேட்கும்போதே, மூன்று முறை எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. கடைசிக் காட்சிகளை சொல்லும்போதே நிறுத்தி, ‘நிச்சயம் இதை செய்வோம்’ என்றேன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜியிடம்தான் முதலில் பேசியிருந்தோம். ‘முதல் மரியாதை’ படப்பிடிப்பின்போது, மதுரை மொழியில் பேசிக் காட்டி, ‘இதைத் திரும்பிச் சொல்லுங்கள்’ என்றேன். உடனே சிவாஜி, ‘நீ காட்டான்டா…’ என்றார்.  அப்போதே நான் அவரிடம், ‘நான் காட்டான் இல்லை.. நாங்கதான் ஒரிஜினல். நாங்க தாய்மொழியை விட்டு வரலை’ன்னு சண்டை போடுவேன். நான் இந்த இனத்தில் இருப்பது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. 

‘வீரமும் விவேகமும் இருக்கணும்’னு பசும்பொன் தேவர் ஐயா கூறுவார், இப்போது நாம் விவேகத்தை கற்றுக் கொண்டிருக்கிறோம், ஆனால் வீரத்தை தொலைத்து விடாதீர்கள் என்று சொல்லிக் கொள்கிறேன். வீரம் தொலைந்தால் உன் இனத்தினுடைய அடையாளமே தொலைந்துவிடும்.  

சிவாஜி உட்பட இன்னும் சில மூத்த நடிகர்கள் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்து இத்தனை வருடங்களாக இந்தப் படம் தள்ளிச் சென்றதற்கு காரணமே,  இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடவுள் என்னைதான் தீர்மானித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இத்தனை ஆத்மாக்களும் இந்தப் படத்தில் நடிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறதோ என்றும் எண்ணுகிறேன்.

இந்தப் படம் நிச்சயம் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும். இப்படம் ‘குற்றப் பரம்பரை’யல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை இது. சுயமரியாதை பிறந்த மண் இங்கேதான். அந்த சுயமரியாதையை என்னுடைய இந்தப் பெருமைமிக்க படைப்பால் காப்பாற்றுவேன்…” என்றார்.

தொடக்க விழா முடிந்ததும் வெளியே வந்த பாரதிராஜாவிடம், “இயக்குனர் பாலா…?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் முகத்தைப் பார்த்து பேசுபவன். தரையில் கிடப்பதைப் பார்த்து பேசுபவன் அல்ல…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

ஓ.. அப்போ இயக்குநர் பாலா வெறும் செருப்பா..?

Our Score