full screen background image

சிலை திருட்டு வழக்கில் பிரபல திரைப்பட இயக்குநர் வீ.சேகர் கைது..!

சிலை திருட்டு வழக்கில் பிரபல திரைப்பட இயக்குநர் வீ.சேகர் கைது..!

பிரபல திரைபட இயக்குநர் வீ.சேகர்,. 80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் திருட்டு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.  

‘நீங்களும் ஹீரோதான்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் வீ,சேகர் இயக்குநர் கே.பாக்யராஜின் சீடர். அவரிடம் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

தன்னுடைய சொந்த பட நிறுவனமான ‘திருவள்ளுவர் கலைக்கூடம்’ சார்பாக 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை 100 நாட்களைத் தாண்டி ஓடிய படங்களாகும். ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’. ‘ஒண்ணா இருக்க்க் கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெத்த மகனே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’, ‘கூடி வாழ்ந்தால் கட்டி நன்மை’, ‘வீட்டோட மாப்ளை’ உள்ளிட்ட படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். 

இப்போது ‘சரவணப் பொய்கை’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் இவரது மகனே ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று சிலை திருட்டு வழக்கில் கைதாகியிருப்பது தமிழ்ச் சினிமா துறையினரை அதிர்ச்சி/யாக்கியிருக்கிறது.

இது பற்றி போலீஸார் தெரிவித்திருக்கும் செய்தி இதுதான் :            

“சென்னை தியாகராய நகரில் பாண்டிபஜார் பகுதியில் கடந்த மே மாதம் 14-ம் தேதி ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள 8 சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு போலீசார் மீட்டனர்.

அந்த 8 சாமி சிலைகளில், பெருமாள், பூதேவி, சீதேவி ஆகிய சிலைகள் மட்டும் 6 இருந்தன. அவற்றில் 3 சிலைகள் வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருடப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

மேலும் உள்ள பெருமாள், பூதேவி, சீதேவி ஆகிய 3 சிலைகள் வந்தவாசி அருகே உள்ள பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவிலில் திருடப்பட்டது என்று தெரிய வந்தது.

மீதி உள்ள சிவன், பார்வதி சிலைகள் இரண்டும், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் திருடப்பட்டது ஆகும்.

3 கோவில்களில் திருடப்பட்ட இந்த சிலைகளை விற்பதற்காக சென்னை தியாகராய நகருக்கு கொண்டு வந்தபோதுதான், சிலை திருட்டு தடுப்பு போலீசாரிடம் சிலைகள் சிக்கின.

இந்த சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வீ.பிலிப், ஐ.ஜி. அசோக்குமார்தாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில், சிலை திருட்டு தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் நேரடி தலைமையின் கீழ், துணை சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, தமிழ்செல்வன், ஜனார்த்தனம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகிய இருவரும் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.

பிரபல சினிமா டைரக்டர் வீ.சேகர் இந்த சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிலைகள் திருடுவது சம்பந்தமாக நடத்திய சதி திட்டத்தில் வீ.சேகருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் திருடப்பட்ட சிலைகளை டைரக்டர் வீ.சேகர் வசிக்கும் வீட்டில்தான் முதலில் மறைத்து வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் வீ.சேகரை, சிலை திருட்டு தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரை கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் வீ.சேகர் தன் மீதான கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு, பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கோவில்களிலும் மெயின் கதவு பூட்டை உடைத்து சிலைகளை திருடி இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், கைதான டைரக்டர் வீ.சேகர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.

இந்த வழக்குகளில் மேலும் 10 பேருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.”

– இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட்டான இயக்குநர் வீ.சேகர் மீது தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தனர். இந்த வழக்கும், கைது பற்றிய செய்தியும், அவர் மீதான நல்ல அபிமானத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது.

Our Score